மையப்பொருள் : ஆயத்தமாயிருப்போம்!
தொடக்கப் பாடல் : ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக் காலம் (அல்லது பொருத்தமான பாடல்)
தொடக்க இறை வேண்டல்
மீட்பினுக்கு வாக்களித்து, ஏற்ற வேளையில் உமது வல்லமை செயல்களை வெளிப்படுத்தி, வாக்குறுதி மக்களை வழிநடத்தி வந்த வானகத் தந்தையே, உம்மைப் போற்றுகின்றோம். தந்தையின் புனித விருப்பத்தை நிறைவேற்ற, மானிட உடலேற்று, நாசரேத்தில் கன்னி மரியாவின் திருவயிற்றின் கனியாக முழுமைபெற்று, எம்மை மீட்க வந்த இனிய இயேசுவே, உம்மைப் போற்றுகின்றோம். தந்தைக்கும், மகனுக்கும் இனிய இணைப்பாளராகி, எம் வாழ்வின் இனிய கொடையாக விளங்கும் தூய ஆவியாரே, உம்மைப் போற்றுகின்றோம். நாங்கள் இப்போது தொடங்க இருக்கும் (அன்பியத்தின் பெயர்) அன்பியக் கூட்டத்தை உமது உடனிருப்பால் நிரப்பியருளும். இதில் நாங்கள், ஆயத்தமாயிருந்து, ஆபத்துகளைத் தவிர்க்கவும், அரும்செயல்களை ஆற்றவும் இறைவேண்டல்களுடன் திட்டமிடவும், ஒரே குடும்பமாய் ஒன்று கூடியுள்ளோம். உம் திருமகனது வருகையை எதிர்நோக்குவதிலும், அதற்கான தயாரிப்பில் ஈடுபடுவதிலும் எங்களை ஒருமுகப்படுத்தியருளும். என்றும் வாழும் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்!
நற்செய்தி வாசகம்: மத்தேயு 24:37-44
சிந்தனை
* எதிர்நோக்குவதெல்லாம் நடப்பதில்லை.
* வாக்களித்த வானகத் தந்தை நம்பிக்கைக்குரியவர்.
* ஆயத்தமாயிருப்பதில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும்.
* எந்த முறையில், எவற்றிற்கெல்லாம் ஆயத்தமாயிருக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவு தேவை.
* பல ஆண்டுகள் திருவருகைக் காலத்தை நாம் கடந்து வந்திருந்தாலும், அவற்றில் நாம் கண்டுள்ள ஆன்மீக - சமூக- முன்னேற்றங்களை ஆய்வு செய்வது அவசியம்.
* இப்பகுதியில் தொட்ட இறைவார்த்தையைப் பகிர்ந்துகொள்ளச் செய்வதிலும், அதற்கான காரணத்தைப் பகிர்ந்துகொள்ளச் செய்வதிலும், வழிகாட்டி, ஒருங்கிணைப்பாளரின் பங்கு முக்கியமானது.
* இயேசுவின் வருகையால் நிகழும் வியத்தகு செயல்களை ஆவலுடன் எதிர்பார்த்த இஸ்ரயேல் மக்களின் மனநிலையுடன் நாமும், நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.
* ஆயத்தமாய் இல்லாமல் அனுபவித்த செயல்பாடுகளையும், ஆயத்தமாயிருந்து பெற்ற நலன்களையும் பகிர்ந்து கொள்வது நல்லது.
* கிறிஸ்து பிறப்பிற்கு வழக்கமாகத் தயாரிக்கும் புத்தாடை, அலங்காரம், பலகாரம் ஆகியவற்றையும் தாண்டி, உறவைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் அவசியம்.
நற்செய்தி பகிர்விற்கு உதவியாக ஒரு நிகழ்வு
அது கிராமத்து வீடு. அந்த வீட்டிலிருந்து ஒரு பெண் பக்கத்துப் பேரூரிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். அது ஆண்டு இறுதித்தேர்வுக்குத் தயாராகும் காலம். வகுப்பு ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளைப் பலவிதங்களால் தயாரிக்கின்றனர். தங்கள் அனுபவங்களில் முக்கிய வினாக்களைக் குறித்துக் கொடுத்து, அவற்றைப் படித்துத் தங்களைத் தயாரித்துக் கொள்ளக் கேட்டுக் கொள்கின்றனர். கிராமத்துப் பெண் சினேகாவின் பெற்றோர் ஒரு சோசியக்காரரிடம் கேட்டு வினாக்களைப் பெற்று வந்து, சினேகாவிடம் கொடுத்து, அவற்றை மட்டும் படிக்கக் கட்டாயப்படுத்தினர். அவற்றைப் படித்துத் தேர்வுக்குச் சென்ற சினேகா, அவற்றில் பெரும்பாலான வினாக்கள் தேர்வுக்கு வராததால் ஏமாற்றமடைந்து, தேர்விலும் தோல்வி கண்டாள். அவள் தாம் செய்வதில் முன்மதி வேண்டும். வீணான செயல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்கு சினேகாவின் இந்த தேர்வு அனுபவம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
நம்பிக்கையாளர் மன்றாட்டுகளுக்கான கருத்துகள்
1. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை மனதில் கொண்டு, சிறந்த தயாரிப்போடு உலகத் திரு அவை கொண்டாட முன்வர வேண்டுமென்று...
2. அன்பியங்களில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை அனைவருடைய பங்களிப்போடும் கொண்டாட, சிறந்த பயிற்சிகள் வழங்க வேண்டுமென்று...
3. சமத்துவக் கிறிஸ்துமஸ் கொண்டாட எல்லா நிலையினரும் முன்வரவேண்டுமென்று...
4. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாட ஒப்புரவு அவசியம் என்று உணர்ந்து செயல்பட...
பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்
1. கிறிஸ்துமஸ் இசைக்குழுவில் (carols) அன்பியங்கள் சார்பில் சிறந்த பங்கேற்பை அளிப்பது.
2. அன்பிய சார்பில் முன்னோட்ட (Suppose) கிறிஸ்துமஸ் கொண்டாடுதல்.
நிறைவு வேண்டல்:
அனைத்துச் செயல்பாடுகளிலும் ஆயத்தமாயிருக்க அழைப்பு விடுத்து, செயலாக்கத்தில் துணைநிற்கும் வானகத் தந்தையே, இன்றைய எம் அன்பியக் கூட்டம் சிறப்பாக நடைபெற நீர் புரிந்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி கூறுகின்றோம். இன்று நாங்கள் தேர்ந்து கொண்டுள்ள செயல்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றப் பேரருள் புரியும்படி எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்!
(அன்பியப் பாடல்)
Comment