No icon

அன்பியக்கூட்டத்திற்கான வழிகாட்டி-147

மையப்பொருள் : நம்பிக்கையே உன் விலை என்ன?

தொடக்க இறைவேண்டல்

அன்பினைப் பொழிந்து அரவணைத்துக் காக்கும் விண்ணகத் தந்தையே இறைவா! உம் புகழைப் பறைசாற்றுகின்றோம். நம்பினோருக்கு நலமளித்து, நாள்தோறும் இறையாட்சியை அடையாளப்படுத்தும் இயேசுவே இறைவா! உம் புகழைப் பறைசாற்றுகின்றோம். ஒளியும் வழியுமாகி, உறவின் ஊற்றுமாகி, எம்மை ஒவ்வொரு நொடியும் பேணிக்காக்கும் தூய ஆவியாரே இறைவா, உம் புகழைப் பறைசாற்றுகின்றோம். மூவொரு கடவுளாம் உமது ஆசிகள் மற்றும் பேரருளால் நாங்கள் இப்போது தொடங்கும் எங்கள் (அன்பிய பெயர்) அன்பியக் கூட்டத்தைச் சிறப்பாக வழிநடத்த உம்மை வரவேற்கின்றோம்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருப்பதை ஒவ்வொருநாளும் உணர்கின்ற நாங்கள், நாங்கள் சமர்ப்பிக்கும் நம்பிக்கையின் விலை என்ன என்ற பொருளில் இன்று சிந்திக்க இருக்கின்றோம். இக்கூட்டச் செயல்பாடுகளின்போதும், இதன் நீட்சியாக நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணிகளின்போதும், நீர் சிறந்த வழிகாட்டியாக இருந்து, நாங்கள் நம்பிக்கையின் கருவிகளாக விளங்க அருள்புரிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம். இவற்றையெல்லாம் எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம் திருவடிக்குச் சமர்ப்பிக்கின்றோம். நன்றி இறைவா. ஆமென்.

நற்செய்தி: லூக் 17: 05-10

சிந்தனை:

* நம்பிக்கையின் விலை விழிப்புணர்வே.

* நம்பிக்கை ஆள், இடம், பொருள், சூழல் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறுபடும்.

* நம்பிக்கை: கொடையா? தடையா? என்றால் கொடைதான். ஆனால், அது குருட்டு நம்பிக்கையாய் இருத்தலாகாது.

* நம்பிக்கையின் இரு கைகள் : நம்புவோரின் வணங்கும் கை, வடிக்கும் சிற்பியின் கை.

* நம்பிக்கையை மிகுதியாக்குவதும் துடைத்தெறிவதும் பயன்பாட்டாளர் கையில்தான் இருக்கின்றன.

* நம்பிக் கெட்டோரைவிட, நம்பி வாழ்ந்தோரே அதிகம்.

* வாழ்க்கை மாற்றத்தை நிர்ணயிக்கும் கருவி நம்பிக்கை.

* திருவள்ளுவர் கூறும்அஞ்சுவ தஞ்சாமை பேதமைஎன்பதுபோலநம்புவதை நம்பாமை பேதைமைஎனலாம்.

* நம்பிக்கை ஓர் அச்சு, அதில் பயணிப்போர் வாழவும், வீழவும் வாய்ப்புகள் அதிகம்.

* சோதித்து அறியும் நம்பிக்கை சுடர் போன்றது.

நற்செய்தி பகிர்வுக்கு உதவியாக ஒரு நிகழ்வு:

நம்பிக்கையின் சின்னம் ஒளிர்கின்றது. அதை நம்பினோர் வாழ்வு மிளிர்கின்றதுஎனப் பாடி அந்த மறை பரப்புரையாளர் தனது உரையைத் தொடங்கினார். ஒவ்வொரு பொழுதும் ஏற்புடைய பரப்புரையை வழங்கும் அவரது உரையைக் கேட்க, ஆயிரக்கணக்கில் மக்கள் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். அது இளங்காலைப்பொழுது, அப்பா எங்கேயோ புறப்படுவது கண்டு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் இசிதோர், "அப்பா நான் சொன்னதையும், நீங்க சொன்னதையும் மறந்துடாதீங்க. நாலு மணிக்குப் பள்ளியில் உங்களுக்காகக் காத்திருப்பேன்என்றான். அது ஆங்கில வழி கல்வி தரும் பள்ளி. ஆசிரியை பள்ளிக் கட்டணத்தைக் கேட்டார். மணி 3.30 “அப்பா வருவார், பணம் தருவார் இதுதான் அந்தப் பிஞ்சு உள்ளத்தின் பதில். கூடப்பயிலும் மாணவர்கள் பந்தயம் கட்டும் பாணியில், உங்கள் அப்பா நாலு மணிக்குள் நிச்சயம் வர மாட்டார்!” என்றார்கள். மணி மூணு ஐம்பத்தெட்டுக்கு இசிதோரின் தந்தை கலைந்த தலையுடனும், பலத்த காயத்துடனும் வந்து சேர்ந்து, பள்ளிக் கட்டணம் ரூ. 5000த்தையும் கட்டினார். அவர் வந்து சேர்ந்ததில் ஒரு கண்ணீர் கதை இருந்தது. அந்த கண்ணீர் நிகழ்வுகளை மறைபரப்புரையாளர் கூறியபோது, கூட்டம் தன் மீது மகன் வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற தந்தை மேற்கொண்ட தியாகத்தைக் கேட்டு உரைந்து நின்றது.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகளுக்கான கருத்துகள்:

1. திரு அவை பணியாளர்கள் தன்னை அழைத்தவர் நம்பிக்கைக்குரியவர் என்ற உணர்வில் நிலைத்திருக்கும் படியாக...

2. கணவன் - மனைவியர் அளித்த வாக்குறுதிக்குப் பிரமாணிக்கமாய் விளங்க இறையருள் துணைநிற்கும் படியாக...

3. நாட்டுப் பணியாளர் நம்பகத்தன்மையுடன் மக்கள் பணியைத் தொடரும்படியாக...

4. அன்பிய உறவுகள் நம்பிக்கையில் வளரும் படியாக...

பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்

1. இல்லத்து இறைவேண்டல் (குடும்ப செபம்) அன்பியக் குடும்பங்களில் குறிப்பாக, செபமாலை வேண்டுதலோடு தொடர ஆவன செய்தல்

2. அரசின் நலத்திட்டங்கள் பெற வழிகாட்டுதல் (முதியோர் உதவித்தொகை, மக்களைத்தேடி மருத்துவம் போன்றவை)

நிறைவு இறை வேண்டல்

நம்பிக்கையின் ஊற்றாம் மூவொரு இறைவா, இன்றைய எங்கள் அன்பியக்கூட்டம் புத்தெழுச்சியுடன் நடைபெற நீர் புரிந்த அனைத்து உதவிகளுக்கும் நன்றிகள். எங்கள் பணிகளும் வாழ்வும் சிறந்து விளங்க, உம் ஆசிகளை என்றும் வேண்டுகிறோம். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக - ஆமென்!

(அன்பிய பாடல்)

Comment