No icon

மக்கள் இயக்கங்களும் திரு அவையும்

(தமிழ் இறையியல் மன்றத்தின் 36வது கருத்தமர்வு)

மானிட வரலாற்றில் மாபெரும் சமூக மாற்றங்கள் எண்ணற்றவை நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஆக்கவகையிலான சிறப்பான வளர்ச்சிகள், அடிப்படையான முன்னேற்றங்கள் என நாம் கருதிப் போற்றக்கூடியவற்றை நிகழ்த்தியவர் மாமன்னர்களோ, நிறுவனத் தலைவர்களோ, படைத் தலைவர்களோ அன்று. நற்றமிழ் நாட்டுச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இதற்குத் தெளிவான சான்று. மாறாக, அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியவை மக்கள் இயக்கங்களே. பிரான்சுப் புரட்சி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

மக்கள் இயக்கம் என்பது தங்களது உரிமைக்காகப் தொடர்ந்து போராடும் பாதிக்கப்பட்ட மக்களது ஒன்றிணைப்பு. எனவே, அது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது நலனுக்காக ஒன்றிணைந்து நிற்பதேயன்றி ஆதிக்கம் புரிபவர்களுடையதோ, தங்கள் நலனுக்காக அவர்கள் தூண்டிவிடும் கூட்டத்தினருடையதோ அன்று.

மக்கள் இயக்கங்களை, சமூகத்தின் மனச்சான்று, ‘மானிடத்தின் உயிர்துடிப்பு’ என்பர். கிறித்தவக் கண்ணோக்கில் அவை கடவுளின் குரலும் ஆகும்.

கடவுளின் குரல்

மக்கள் இயக்கங்கள் மானிட சமூகத்தின் மாபெரும் வளர்ச்சிகளுக்குக் காரணிகளாக இருந்தவை மட்டும் அல்ல; கிறித்தவப் புரிதலில் அவை இறைவனது தூண்டுதலால் நிகழ்பவையும் ஆகும். இதற்கு மிகச் சிறந்த சான்று எகிப்தில் பல்வேறு இனங்கள், குலங்களைச் சார்ந்தவர்களும் பல்வேறு கடவுள்களை வழிபட்டவர்களுமாக இருந்த அபிருக்கள் எனப்பட்ட அடிமை மக்கள் மோசேயின் தலைமையில் ஓர் இயக்கமாக இணைந்து விடுதலைப் பயணம் மேற்கொண்டு உரிமை மக்களாக பாலஸ்தீனத்தில் குடியேறியதுதான். அப்பயணத்தில் கடவுளின் அழைப்பும் ஆற்றலும் உடனிருப்பும் செயல்பட்டன. இதற்குச் சான்றுகள் அந்த அடிமை மக்களின் ஏக்கப் பெருமூச்சும் அழுகைக் குரலுமே கடவுளின் அழைப்புக் குரல் எனச் சீனாய் மலையில் மோசே புரிந்துகொண்டதும் கடவுளே அம்மக்கள் சார்பாகப் போராடியதும் (விப 14:25) பகலில் நிழல்தரும் மேகத்திலும் இரவில் நெருப்புத் தூணிலும் சந்திப்புப் கூடாரத்திலும் அவரது நீங்காத உடனிருப்பை அவர்கள் அனுபவித்ததும் எனலாம்.

உரோமானியர், அவர்களோடு ஒத்துழைத்த சதுசேயர் என்பவர்களின் அடக்குமுறையாலும் சுரண்டலாலும் ஏழையர் ஆக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களுக்காக இயேசு தொடங்கியதும் மக்களின் இயக்கமே. “இறையாட்சி உங்களதே” (லூக் 6:20) என அவர்களுக்கு அவர் கூறியதும் கடவுள் அவர்களுடன் இருப்பதை உணர்த்துகிறது. அவரது அந்த ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் இயக்கத்தில் கடவுளின் வாழ்வு தரும் அழைப்பும் வல்லமை உள்ள செயல்பாடும் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில்தான் அவர் அன்றைய “காலத்தின் அறிகுறிகளை” (மத் 16:3, லூக் 12:5-6) கண்டுகொள்ளத் தவறியவர்களைக் குற்றப்படுத்துகிறார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்தறிய அழைப்புவிடுக்கிறது. அவற்றுள் முதன்மையானது மக்கள் இயக்கங்களே. ஏழைகள், பாதிக்கப்பட்டோர் சார்பாகவே கடவுள் இருப்பதால் அவர்களது ஏக்கங்கள், இயக்க எழுச்சிகள் வழியாக கடவுளின் அழைப்பும் அறைகூவலும் நம்மை வந்தடைகின்றன. ஏனெனில், ஏழைகளின் குரல் இறைவனின் குரலே. அதுவே நமது வாழ்வுக்கான கடவுளின் இன்றைய நற்செய்தி. அதை நாம் விவிலிய ஒளியில் ஆய்ந்தறிந்து வாழ்ந்து வரலாறு ஆக்குவதே உண்மையான நற்செய்தி அறிவிப்பு.

மக்கள் இயக்கங்கள் வழியாக நமக்குச் சொல்லப்படும் நற்செய்தி அல்லது இறைவார்த்தை நம்மை முதலில் நமது கிறித்தவ சமூகங்களில் காணக்கிடக்கின்ற ஆதிக்கங்களை இனம் கண்டுகொள்ளவும் இறையாட்சிக்கு எதிரான அவற்றை வேரறுத்திடவும் நமக்குத் தூண்டுதல் தருகின்றது. சாதி, ஆண், அருள்பணியாளர், உரோமை ஆதிக்கங்களை நம் நடுவே நீடிக்க விட்டுவிட்டு புறம் இருக்கும் பாசிச ஆதிக்கங்களை வலுவாக நம்மால் எதிர்த்துப் போராட இயலாது.

அடுத்து, திரு அவை சாராத இன்றையப் பல்வேறு மக்கள் இயக்கங்களோடு திரு அவை இணைந்து செயல்படவும் இறைவன் நம்மை அழைக்கின்றார். அண்மைக்கால விவசாயிகள் போராட்டம், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்பனவற்றில் கிறித்தவர்களின் பங்களிப்பு அதிகம் இல்லை எனும் தவறு இனியும் தொடரக்கூடாது.

அதுபோலவே, நமது கிறித்தவ சமுகத்திற்கு உள்ளேயே ஏற்பட்டுள்ள பொதுநிலையினர், பெண்கள், தலித்துகள் என்போருடைய எழுச்சிகளையும் இயக்கங்களையும் திறந்த மனதுடன் அணுகி, அவற்றிற்குத் தக்க பதிலிறுப்பு செய்வதும் திரு அவையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், புற சமூகத்தில் உள்ள பாசிச அமைப்புகளுக்கு எதிராகப் போராட அதற்கு வலிமை அளிப்பதும் ஆகும்.

பாசிச அமைப்புகளை எதிர்த்திட

* கிறித்தவ மக்களிடம் இன்று பரவலாகக் காணப்படும் பார்வையாளர் போக்கு களையப்பட்டு பொது காரியங்களில் அவர்கள் பங்கேற்கும் ஈடுபாட்டு அருள்வாழ்வு நெறி பரவலாக்கப்பட வேண்டும்.

* போராளிக் கிறிஸ்துவை முன்னிறுத்தி, நம் பக்திமைய ஆன்மீகம் போராட்ட அருள்வாழ்வாகப் பரிணமித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* நீதி நிலைப்பாடும் செயல்பாடும் இறைநம்பிக்கையின் இன்றியமையாத கூறு எனும் உறுதிப்பாடு நம் சமூகத்தில் வளர்க்கப்படவேண்டும்.

* மத உணர்வைவிட மனிதநேயத்தை முன்னிறுத்தி பல்சமய நல்லிணக்க கூட்டங்கள், வழிபாடுகள், கொண்டாட்டங்கள் நடத்தப்படவேண்டும்.

* நம் அன்பியங்கள் அக்கம்பக்கத்து குழுமங்களாகவும் விரிவாக்கம் பெறவேண்டும்.

* மக்கள் பிரச்சனைகளையும்   போராட்டங்களையும் அருள்பணியாளர்களும் துறவியரும் தங்களுடையவை எனக்கருதி அவற்றில் ஈடுபடவேண்டும். அருள்பணி மாணவர்களும் அத்தகையப் போராட்டங்களில் கலந்துகொள்ள வாய்ப்புகள் தரப்படவேண்டும்.

* தேர்தல் காலங்களில் மட்டுமன்று, தொடர்ந்தும் கிறித்தவர்கள் இன்னும் அதிகமாக அரசியல்படுத்தப்பட்டு, அரசியல் விழிப்புணர்வும் ஈடுபாடும் வளர்க்கப்படவேண்டும்.

* நமது பங்குத் தளங்கள், கல்வி நிலையங்கள், நிறுவனங்கள் என்பனவற்றில் கருத்தரங்குகள் நடத்தி மக்களுக்கும், சிறப்பாக மாணவர்களுக்கும் சமயவகுப்பியம் (வாதம்) பற்றிய விழிப்புணர்வைத் தரவேண்டும்.

* சமூக ஊடகங்கள், வலைதளங்களை இன்னும் அதிகம் பயன்படுத்திப் பாசிச அமைப்புகளுக்கு எதிரான விழிப்புணர்வையும் மனிதநேய, சகோதரத்துவ, சமஉரிமைச் சிந்தனைகளைப் பரவலாக்கம் செய்வோம். இதற்கான ஊடகப் பயன்பாட்டுப் பயிற்சிகளைப் பரவலாகவும் சிறப்பாக இளைஞர்களுக்கும் தருவோம்.

* கிறித்தவ சமூகங்களில் இன்னும் தொடரும் சாதிய உணர்வும் பாகுபாடுகளும் முற்றிலும் களையப்பட்டு அவை இறையாட்சியின் சமத்துவ சமூகங்களாக உருவெடுக்கவேண்டும்.

* தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளைக் களையவும் சிறப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

* திரு அவையில் அனைத்துப் பணிகளிலும் ஆட்சி அமைப்புகளிலும் பெண் சமத்துவம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

* பிற மக்கள் இயக்கங்களுடன் இணைந்து செயல்படவும் தொடர்ந்து அவற்றிற்கு ஆதரவு தரவும் திரு அவை அமைப்புகளும் திருத்தூதுக் கழகங்களும் இயக்கங்களும் முன்வரவேண்டும்.

* சமய அறிவுடன் பகுத்தறிவுச் சிந்தனையும் வளர்க்கப்படவேண்டும்.

* நம் மக்களுக்கும் சிறப்பாக இளைஞர்களுக்கும் நாட்டுப்புறக் கலைகளிலும் குறிப்பாகச் சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளிலும் பயிற்சிகள் தரப்படவேண்டும்.

Comment