No icon

அன்பால் கட்டுங்கள்!

கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1யோவா 4:8).

மனங்கள் ஏங்குவது அன்பிற்காய்

மனிதம் பிறப்பது அன்பால்

மன்னிப்பு ஊற்றெடுப்பது அன்பால்

மானிடம் தழைப்பது அன்பால்!’

அன்பு ஓர் ஆற்றல், ஆக்கம், ஊக்கம், உந்துசக்தி, ஊற்று, வலிமை, வாழ்வு, வழிகாட்டி, கருணை, காதல், கனிவு, உயிர், இயக்கம், இரக்கம், இறைவன், புரிதல், புனி தம், ஆதாரம், இதம், இணைப்பு, தூய்மை, ஒளிகடவுள் அன்பாய் இருக்கிறார் என்றால், இந்த அன்பு நம்மை சக்தியாய், ஊற்றாய், வாழ்வாய், வழியாய் இருக்க அழைக்கின்றது. இதைத்தான் புனித பவுல் கொரிந்தியர் எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுகின்றார்:  “அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்” (1கொரி 16:14).

அன்போடு செய்யும் சேவை புனிதம்

அன்போடு பேசும் வார்த்தை வாழ்வு

அன்போடு கூடிய தொடுதல் அற்புதம்

அன்போடு கூடிய மன்னிப்பு அருள்

அன்போடு கூடிய இருத்தல் ஆனந்தம்

அன்போடு கூடிய இரக்கம் இறைவன்!

எல்லாவற்றையும் அன்பில் கட்டுங்கள்; அதை அன்பாய் கட்டுங்கள். அன்பால் உண்டானது தான் உலகம்; அன்பால் நிறைந்ததுதான் இதயம். நம் இதயம் உலாவ வேண்டியது இறைவன் தந்த அன்பால்தான். இறைவன் தந்த அன்பு நற்கருணையிலும், இறைவார்த்தையிலும்தான் இருக்கிறது. இந்த நற்கருணைக்கும், இறைவார்த்தைக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இறைவார்த்தையால் நம் வாழ்வும், உள்ளமும் நிரம்பிட இறைவன் விரும்புகின்றார், அதையே ஆசிக்கின்றார். அன்போடு செய்யும் சேவை செழித் தோங்கும், இறைமை தழைத்தோங்கும்.

அன்பு ஒரு கட்டளை; கிறிஸ்தவன் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளை அன்புக் கட்டளை. தன்னைக் கடந்து தரணியை அன்பு செய்ய இறைவன் அழைக்கிறார்இந்த அன்புக் கட்டளையானது,

ஆசிர் தரும் கட்டளை

அருள்தரும் கட்டளை

அற்புதம் நிகழ்த்தும் கட்டளை

உண்மையை உயர்த்தும் கட்டளை

ஒற்றுமையை வலுப்படுத்தும் கட்டளை

தீமைகளைக் களையெடுக்கும் கட்டளை

நன்மைகளைப் பெருகச் செய்யும் கட்டளை

இது புதிய கட்டளை

புலன்களுக்குப் புதிரான கட்டளை!

நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பில் இருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை அறிந்துகொள்வர்”  (யோவா 13:34). இத்தகைய புதிய கட்டளையின்படி வாழ்வோம்; அனைவரும் புதுவாழ்வு பெறும்படி செய்வோம்.

அழிவு தரும் அம்புகள்: ‘இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே’ (நீதிமொழிகள் 11:2); பிறர்நலம் தன்னலமாக மாறும்போது, பிறர் உடைமை தன்னுடைமையாக மாறும்போது, பண ஆசை அதிகரிக்கும்போதுவெறுப்புணர்வு மிகும் போது, ஆணவம் தலைதூக்கும்போது, அதிகாரம் தலைவிரித்தாடும் போது, அடுக்கடுக்காய் பொய் கூறும்போது, அடுத்தவனின் வளர்ச்சியைத் தடை செய்யும்போது, ஆண்டவனை அறியாத போதும் அறிவிக்காத போதும், தன்னலம் தழைத்தோங்கும். இவற்றின் அடிப்படையில் செயல்படும்போது அழிவை தரும். பிறர் நலம் கருதும் அனைத்துச் செயல்களும் அருள் வழங்கும் அன்பே!

அன்பு என்றால் தூய்மை: சாதியமற்ற அன்பைக் கட்டுங்கள்; கபடற்ற அன்பைக் கட்டுங்கள்; அகங்காரம் அற்ற அன்பைக் கட்டுங்கள்; அடிமையற்ற அன்பைக் கட்டுங்கள்; அகந்தையற்ற அன்பைக் கட்டுங்கள்; துரோகம் அற்ற உறவில் கட்டுங்கள்; கலக்கமற்ற அன்பில் கட்டுங்கள்; தூய்மை நிறைந்த அன்பில் கட்டுங்கள்; உண்மை நிறைந்த அன்பில் கட்டுங்கள்; வாழ்வு தரும், வளர்ச்சியூட்டும் அன்பில் கட்டுங்கள்; ஆண்டவனை ஆச்சரியப்படுத் தும் அன்பில் கட்டுங்கள்; அடுத்தத் தலைமுறையினருக்கு ஆக்கம் தரும் அன்பில் கட்டுங்கள்!

ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார்” (2திமொத் தேயு 3:21).

இறைபார்வையில் மதிப்பற்றவையாகக் கருதப்படுபவை: தன்னலம், சாதியம், கனிவற்றப் பேச்சு, புறணி, உண்மையற்ற உறவு, இறை திருவுளத்தை அறியாமல் மற்றும் அவற்றை நிறைவேற்றாமல் இருக்கும் தன்மை, வெறுப்புணர்வு, தாழ்ச்சியற்ற நிலை, புகழ் தேடும் உணர்வு, பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் பாதுகாப்பற்ற நிலை... etc. இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்தால் நாம் தூய்மை உள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய தூய்மை கடவுளைக் காணச் செய்யும்; கடவுளாய் வாழச் செய்யும். நாம் கடவுளாய் வாழும்போது, அன்பற்ற நிலையில் நிற்க இயலாது, அன்பற்ற செயல்பாடுகளைச் செயல்படுத்த முடியாது. உங்களில் குடிகொள்ளும் இந்தத் தூய அன்பு, உங்கள் உடலுக்கும், ஆன்மாவுக்கும், பணி வாழ்விற்கும், குடும்பத்திற்கும் வல்லமை சேர்க்கும். “உன்னைத் தூய்மை உள்ளவனாகக் காத்துக்கொள்” (1திமொத்தேயு 5:22).  இக்காலத்தில், அன்பை ஆபாசப்படுத்தும் காரியங்கள் ஆயிரம் உள்ளன. அன்பை அசிங்கப்படுத்தும் அணுகுமுறைகள் பல உள்ளன. அன்பைக் கொச்சைப்படுத்தும் நபர்கள் பல்லாயிரமுள்ளனர். அபாயம் தரும் அன்புகள் பல உள்ளன (online, cellphone, whatsapp , facebook …etc).

எனவே, உன்னைத் தூய்மை உள்ளவனாகக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம், அத்தியாவசியம். நமது அன்பால் கட்டப்பட வேண்டியவை. தூய அன்பில் நிலைத்திருங்கள்; இதற்குத் துணையாய் இறைவனை அழையுங்கள். நமது அன்பால் கட்டப்பட வேண்டியவை ஏராளம். நமது அன்பினால் ஆறுதல் பெற வேண்டியவை எண்ணில் அடங்கா! நமது அன்பால் ஆக்கம் பெற வேண்டியவை கணக்கில் அடங்கா! நமது அன்பால் குணம் பெற வேண்டியவை பல்லாயிரம்! நமது தூய அன்பால் நெறிப்படுத்த வேண்டியவை பற்பல.

எனவே, அன்பு செய்வோம், நம்மை மட்டும் அல்ல; நமது நம்பிக்கைக்குரிய நண்பர்களை மட்டுமல்ல, நலம் அற்ற சமூகத்தை, நம்பிக்கை ஏற்ற உள்ளங்களை, உருக்குலைந்த உலகத்தை, வியாதி நிறைந்த மனிதத்தை, மன்னிக்க இயலாத மக்களை, தன்னலமிகுந்த சமூகத்தை!

அன்பால் உருவான இந்த உலகத்தை, அன்பால் மட்டும்தான் அழகுப்படுத்த முடியும். அன்பைக் கடந்த ஒவ்வொரு செயலும், கண்டுபிடிப்புகளும், மருந்துகளும் உலகை உருக்குலைக்கும்அன்பான உலகம்  அமைவது அன்பின் செயல்களால்தான்.

ஆகவே, அன்பால் கட்டுங்கள், அன்பைக் கட்டுங்கள்!

Comment