No icon

உண்மையா? அது என்ன?

பிலாத்து அவரிடம், “உண்மையா? அது என்ன?” என்று கேட்டான் (யோவான் 18:38).

பிலாத்து அன்று மாலை தன் இல்லத்தை அடைந்தபோது, அவனது மனைவி கிளாடியா பிரக்கோலா தன் நண்பர் அரிமத்தியாவின் யோசேப்புடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.  ‘இன்றுபோல ஒருநாளும் இருந்ததில்லை யோசேப்பு. உம் மக்கள் கடுமையானவர்கள்என்றான்கிளாடியா பிலாத்துவிடம்அந்த நேர்மையாளரை நீர் தீர்ப்பிட்டீரா?’ என்று கேட்டாள். பிலாத்து பதிலளிக்கவில்லை. கிளாடியா மீண்டும் கேட்டாள். பிலாத்து மறுமொழியாகஅவன் பொருட்டு என் கைகள் கறைபடாமல் இருக்க அவற்றைக் கழுவிவிட்டேன்என்றான். கிளாடியா பதிலுக்கு, ‘குற்றமற்றவரின் பழியைத் தண்ணீரால் கழுவவும் முடியுமோ?’ என்றாள். ‘அவனை விடுவிக்க நான் வழி தேடினேன் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவன் தன்னை விடுவிக்கச் சொல்லி ஒரு முறைகூட வேண்டவில்லை. என் கால்களைப் பிடித்து அழுது புலம்பும் பல நூறு கைதிகளை நான் கண்டிருக்கிறேன். இவனோ என்னையும், என் அதிகாரத்தையும் பொருட்படுத்தவே இல்லைஎன்றான். பின்னர் பிலாத்து யோசேப்பை நோக்கிநீர் சொல்லும் யோசேப்பு. நீர் ஒரு பரிசேயர் தானே? நீர் உம் மக்களின் எல்லா நூல்களையும் படித்திருக்கிறீர் அல்லவா! நீர் சொல்லும், இந்த மனிதன் உண்மையில் யூதர்களின் அரசன்தானா?’ என்று கேட்டான்

அரிமத்தியாவின் யோசேப்பு தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றுஆளுநரே, நண்பரே, நான் நாசரேத்துவின் இயேசுவைச் சில மாதங்களாகப் பின்தொடர்கிறேன் என்று உமக்குத் தெரியும். அவரைக் குறித்து உமக்கும், உம் மனைவிக்கும் முதலில் சொன்னவன் நான்தான். அவரது போதனைகளைக் கேலி செய்யவும், கேள்வி கேட்டுச் சோதிக்கவும், மக்கள் முன் அவமானப்படுத்தவும் நாங்கள் அவரைக் காணச் சென்றோம்.

எங்களுக்குப் பல இறைவாக்கினர்கள் இருந்தனர் என்பதை நீர் அறிவீர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே என எங்கள் குலத்தின் மூதாதையர்கள் உள்ளனர் என்பதையும் நீர் அறிவீர். அவர்களில் ஒருவர்கூட தங்களது தனிப்பட்ட அதிகாரத்தில் ஒரு வார்த்தையைக்கூட சொன்னதில்லை. ‘இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்என்றுதான் அவர்கள் சட்டங்களையும், போதனைகளையும், சடங்குகளையும் உருவாக்கினார்கள். ஆனால், இயேசுவோ தமது சொந்த அதிகாரத்தின் பெயரில் போதித்தார். ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்என்றார். மீண்டும் மீண்டும் அவர் அப்படிச் சொன்னார். அதைக் கேட்டதும் முதலில் எனக்குக் கோபம் வந்தது. நான் அவரைப் பின் தொடர்ந்தேன். எங்கேயாவது அவர் தவறு செய்யக்கூடும் என அவரைத் தொடர்ந்து சென்றேன். ஆனால், அவர் என்னை மாற்றினார். அதுவரை என் வாய்களில் வார்த்தைகளாய் இருந்த சட்டங்களை அவர் என் உள்ளத்தில் பொறித்து வைத்தார். கடவுளின் சட்டம் எழுதி வைக்கப்பட்டிருந்த கற்களைப் போல இருந்த என் உள்ளம் மெல்ல மெல்லக் கரைந்தது, ஒரு துளி ஈரம் கசிந்தது. அது பெருகி என் இதயம் நிறைந்து வழிந்தது. நான் அவரது இரகசியச் சீடராக மாறினேன். அவர் மட்டுமே தம் சொந்த அதிகாரத்தில் போதித்தார்என்றார் யோசேப்பு.

பிலாத்து அவரிடம்அதிகாரம்! ஆம், நீர் சொல்வது சரிதான். நான் அதை உணர்ந்தேன். நான் கண்ட அரச அதிகாரிகளைவிட, உலகின் அரசர்களை விட, சீசரைவிட அதிகாரம் மிக்கவனாகத் தோன்றினான். என் அதிகாரம்கூட மேலிருந்து வந்ததாகச் சொன்னான்என்றான்.

குற்றமற்றவர்கள், களங்கமற்றவர்கள், மரணத்தின் முன்பும் உண்மையைப் பேசுபவர்கள்  உலகின் எந்தப் பேரரசனை விடவும்  அதிகாரம் மிக்கவர்கள்என்றாள் கிளாடியா.

பிலாத்து சிந்தித்தபடியேஅவன் உண்மையை எடுத்துரைக்கவே நான் உலகுக்கு வந்தேன் என்றான். எனக்கு விளங்கவில்லை. உண்மை என்றால் என்ன? எந்த உண்மை, உண்மையில் உண்மையான உண்மை?” என்று வினவினான்.

அரிமத்தியாவின் யோசேப்புநீர் கண்ணால் காண்பது ஒருவகை உண்மை. காதால் கேட்பது, தொடுவது, முகர்வது என உம்மைச் சுற்றிய உண்மைகளை நீர் அறிந்துகொள்வது ஒரு வகை. அதை விலங்குகளும் செய்கின்றன. சில உண்மைகளை மனிதர்கள் சிந்தனையில் உருவாக்குகின்றனர். ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பது அத்தகைய உண்மைகளில் ஒன்று. நம் முன்னே இரு பொருள்கள் இல்லாதபோதும் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது உண்மைதான்.

அன்பு, காதல், பாசம், தியாகம் என்று பல உணர்ச்சிகளும் நம்மிடம் உருவாகின்றன. அவையும் ஒருவகை உண்மைகளே! ஆனாலும், அவற்றைப் பிறருக்கு நாம் எளிதில் முழுமையாக விளக்கி விட முடியாது அல்லவா! அவை நம் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தனியாகத் தோன்றும் உண்மைகள். அவற்றைச் சில செயல்களின் வழியே நாம் வெளிக்காட்டலாம். ஆனாலும், அதை நாம் மட்டுமே முழுமையாக உணர்கிறோம்.

இயேசு சொல்லும் உண்மை, இவை அனைத்துக்கும் அப்பால் உள்ளது என்று தோன்றுகிறது. அது உண்மையைப் பேசுவது, உண்மையை உணர்வது, உண்மையைச் சிந்திப்பது என்பதைத் தாண்டி, உண்மையாகவே வாழ்வது என்பதைக் குறித்ததாய் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். ஒரு விழிப்படைந்த நிலை! மனிதன் கடவுளைவிட சிறிதளவே குறைந்தவன் என்பது எங்கள் நம்பிக்கை. இயேசு அதை மீண்டும் என்னை உணரச் செய்தார். நான் கடவுள் அல்ல மனிதன்; கடவுளின் முன்பு நான் ஒன்றுமில்லாதவன். ஆயினும், அவர் என்னைத் தம் சாயலாகப் படைத்தார். எனவே, நான் உயர்ந்தவன். நான் கடவுளைப்போல அல்லவா வாழ வேண்டும்? ஆனால், நான் பிற மனிதர்களைப்போல அல்லவா வாழ்கிறேன்? அதுதான் இயேசு எனக்கு உணர்த்திய உண்மை. ‘உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்என்று அவர் சொன்னபோது என் கண்கள் திறந்தனஎன்றார்.

பிலாத்து யோசேப்பை நோக்கிநீர் மிகவும் குழம்பி இருக்கிறீர். என்னை மேலும் குழப்பி விடுகிறீர்என்றான்.

அரிமத்தியாவின் யோசேப்புஇப்போதுதான் நான் தெளிவாக இருக்கிறேன் நண்பரே. நான் பின்பற்ற வேண்டிய உண்மை என்ன என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் இயேசுவின் முழுமையான சீடனாக என்னை உணர்வதே அந்த உண்மைஎன்றார்.

கிளாடியா அவரிடம்யோசேப்பு, நீர் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்று அங்கு நடப்பனவற்றைக் கண்டு வந்து சொல்லும்என்றாள்.

அரிமத்தியாவின் யோசேப்பு சென்ற பிறகு பிலாத்து அவளிடம்  “நீ நேற்று என்ன கனவு கண்டாய் கிளாடியா?” என்று கேட்டான்.

அவளோ நீண்ட நேரம் அமைதியாக இருந்துவிட்டு பதில் சொன்னாள். “என் கனவில் எருசலேமின் கல்லறைகள் அனைத்தும் திறப்பதைக் கண்டேன். உரோமை இராஜ்யத்தின் கல்லறைகள் அனைத்தும் திறந்தன. அவற்றில் ஒன்றிலிருந்து இயேசு வெளியே வந்தார்என்றாள்.

ம்ம்ம்.. அவ்வளவுதானா? அவன் உயிர்த்தெழுவான் என அவனது சீடர்கள் சொன்னதாக யோசேப்பு சொல்லியிருக்கிறாரேஎன்றான் பிலாத்து.

ஆம், சொல்லியிருக்கிறார். ஆனால், எனது கனவு அத்துடன் முடியவில்லைஎன்றாள் கிளாடியா.

பிறகு என்ன ஆனது?” என்றான் பிலாத்து.

திறந்திருந்த பிற கல்லறைகளுக்குள் நாம் வணங்கும் அத்தனை தெய்வங்களும் சென்றன. உரோமை இராஜ்யத்தின் மக்கள் வணங்கும் அத்தனை கடவுள்களும் உள்ளே சென்றன. கல்லறைகளின் கதவுகளும் மூடிக்கொண்டனஎன்றாள் கிளாடியா.

இதைக் கேட்டுப் பிலாத்து அஞ்சி, சொல்வதறியாமல் நின்றான். பின்பு ஒரு காவலனை அழைத்துநாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்என்று இயேசுவின் சிலுவையில் பொறிக்கச் சொல்லி கட்டளையிட்டான்.

(இது ஒரு கற்பனைக் கதையாகும். பிலாத்துவின் மனைவியின் பெயர் கிளாடியா பிராக்குலா என்பது மரபு. அவர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருச்சபையால் ஒரு புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்)

Comment