No icon

கல்வாரிப் பாதை: அழவா? தொழவா? எழவா?

தவக்காலத்தின் சிறப்புச் சிலுவைப்பாதைத் தியானிப்புக்காக அப்பங்கு இளைஞர்கள் தயாரிப்புச் செய்ய, அப்பங்குப் பணியாளர் அவர்களுக்குக் கொடுத்த தலைப்புகல்வாரி கற்றுத் தந்த பாதை’.  இளைஞர்கள் தயாரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டனர். தங்களது சிலுவைப்பாதை தத்ரூபமாக இருக்க வேண்டும்; அதில் பங்கு பெறும் ஒவ்வொருவரும் கல்வாரி அனுபவம் பெற வேண்டும்; அதற்குரிய வகையில் நமது தயாரிப்பு இருக்க வேண்டும் என ஆர்வத்தோடும், அக்கறையோடும் தயாரிப்பு வேலையில் ஈடுபடத் தொடங்கினர்.

இயேசுவின் பாடுகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காண்பித்தால், அதைக் காணும்போது மக்கள் மனம் உருகிட அது வழிசெய்யும் என்று ஓர் ஆலோசனை வந்தது. இல்லை இல்லை... நாம் நடிப்பதைவிட பாடுகள் குறித்து ஏற்கெனவே வெளிவந்த படங்கள், காட்சிகளில் இருந்து சிறந்தவற்றைத் தெரிவு செய்து வெட்டி, ஒட்டி புதுக் காட்சி வடிவத்தை ஒளிபரப்பு செய்வதோடு, புதிய வார்த்தைகள் கொண்டு வடித்த செபத்தோடு தியானிக்க வைப்போம் என்றது மற்றோர் ஆலோசனை.

கல்வாரி பற்றிய நமது தியானிப்பு எதற்கு? மக்களை அழ வைப்பதற்கா? தொழ வைப்பதற்கா? அல்லது எழ வைப்பதற்கா?’ என்றது ஒரு குரல். எல்லாரும் அமைதியானார்கள். சிந்திக்க ஆரம்பித்ததன் அடையாளம் அது. அங்கு கூடியிருந்த அனைவரும் அந்தக் குரல் சொல்லும் அடுத்தக் கருத்தைக் கேட்க ஆவலாக இருந்தனர். “கல்வாரிப் பாதையில் தம் நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அழுத பெண்களிடம், ‘எனக்காக அழ வேண்டாம்என இயேசு அன்றே அழுத்தமாகக் கூறிய நிலையில், 2000 வருடங்களுக்குப் பிறகும் மக்களை அவருக்காக அழ வைப்பது சரியாக இருக்காது. தொழவா? அல்லது எழவா? எனப் புரிந்து கொள்ள வேண்டுமானால், கல்வாரிப் பாதை ஏன் ஏற்பட்டது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சாதாரண, பாமர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தியவர்களுக்கு எதிராக இயேசு எழுப்பிய குரலே அவருக்குக் கல்வாரிப் பாதை அமையக் காரணமானது. மதத்தின் பெயரால் மக்கள்மீது ஆதிக்கம் செலுத்திய பரிசேயர்களைப் பார்த்துஉங்களுக்கு ஐயோ கேடுஎன்று கடிந்ததும், குரு என்கிற நிலையில் இருந்துகொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைத்தோரைப் பார்த்துவெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளேஎன்று வசை பாடியதும் இயேசுவுக்குக் கல்வாரிப் பாதை அமையக் காரணமாக அமைந்தன.

ஒருவேளை, இம்மாதிரியான ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராகக் குரல் எழுப்பாமல் இயேசு பரிசேயர்களுடன் நட்பு பாராட்டி இருந்திருந்தால், அவர்களின் சதித்திட்டத்திற்கு அவர் ஆளாகி இருக்க மாட்டார். அன்றைய மதத் தலைமைக் குருக்களின் அநீதச் செயல்களைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்திருந்தால், எருசலேம் ஆலயத்தில் தொடர்ந்து பிரசங்கம் செய்யும் வாய்ப்பு அவருக்கு வாய்த்திருக்கும். ‘அரசியல் எனக்கு உரியது அல்ல; ஆன்மிக வழியைக் காட்டவே நான் வந்தேன்என்று சொல்லிக் கொண்டு ஏரோதின் அட்டூழியத்தைக் கண்டும், காணாமல்  ஒதுங்கிப் போயிருந்தால், அவரின் பொது வாழ்வு மூன்று ஆண்டுகளிலே முடிவு பெறாமல் ஜூபிலி கொண்டாடும் அளவிற்கு நீண்டிருக்கும். ஆனால், அவரோ பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காகத் தம் குரலை உயர்த்திக் கல்வாரி பாதையைக் கைக்கொண்டார்.

அவரின் பிள்ளைகள் நாம் அதற்காக அவரைத் தொழுவதா? அல்லது இன்றும் ஏழை, எளிய மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக அவரைப் போலவே குரல் கொடுக்க எழுவதா? எது நமது வேலை? என்று உணர வேண்டும்.

இன்றைய நாள்களில் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் ஆதிக்கச் சக்திகள் எவையெவை? அவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் யார்? என ஒவ்வொரு களமாகக் கண்டுகொண்டு, அந்தத் தளங்களில் நமது பதிலிறுப்பு என்னவாக இருக்க வேண்டும்என்பதை மையப்படுத்தி ஒவ்வொரு வாரமும் தியானிக்கவும், அதை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றலைப் பெறவும் நமது கல்வாரிப் பாதையின் ஒவ்வொரு தளமும் நமக்குப் புத்துணர்வு தரவேண்டும்.

கண்டுகொண்டது உண்மையெனில், காரியம் முடிக்கக் களத்தில் இறங்கிட வேண்டும். அப்படியெனில், ‘கல்வாரி கற்றுத் தந்த பாதைஎன்கிற தலைப்பில், ‘இயேசுநாதர் சுவாமி பாடுபட்ட முதலாம் நிலை, இரண்டாம் நிலை...’ எனச் சிலுவைப் பாதை நடத்திக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, இன்று இயேசு பாடுபடும் முதல் களம், இரண்டாம் களம் எதுவெனக் கண்டு, அவற்றில் இறங்கி வேலை செய்ய வேண்டும். இயேசு அன்று பாடுபட்ட தளங்கள் எது என்பதை விட, இன்று அவரின் பணி நடக்க வேண்டிய களங்கள் எதுவெனக் கண்டுகொள்ள உதவுவதே கல்வாரி கற்றுத் தருகிற பாதையாக அமைய வேண்டும். அந்த வகையில், ஏழை மக்களை அழித்து ஒழிக்கும் மதுவுக்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இயந்திரத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடுபவர்களுடன் சேர்ந்து போராடுவது இன்று இயேசு காட்டும் முதல் களம். நாட்டின் பெரும்பான்மையாகவும், முதுகெலும்பாகவும் திகழ்கிற விவசாயிகளைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்த்து ஆண்டுக் கணக்கில் போராடும் போராட்டக் களங்களே இயேசு காட்டும் இரண்டாம் களம்.

பதவியால் வந்த  பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, நிறைவேற்றாமலிருப்பதற்கு என எல்லாவற்றிற்கும் பணம், பணம் எனத் தலைவிரித்தாடும் ஊழலுக்கு எதிராகப் போராடும்  களமே இயேசு காட்டும் மூன்றாம் களம். சுற்றுச்சூழலை அழித்து நாட் டைச் சூறையாடும் திட்டங்களான எட்டுவழிச் சாலை, சாகர்மாலா போன்ற மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் களங்கள் இயேசு காட்டும் நான்காம் களம். இப்படியான அநீத ஆதிக்கச் சக்திகளைக் கண்டும் காணாமல் ஒதுங்கி நின்றுகொண்டு, பொது வாழ்வுப் பணிஆன்மிகப் பணி ஆற்றுகிறோம் எனச் சொல்லிக்கொள்ளும் நம்மைச் சரிப்படுத்த வேண்டியது இயேசு காட்டும் ஐந்தாம் களம். இப்படி ஒவ்வொரு களமாகக் கண்டுணர்ந்து கடமையாற்றுவதே கல்வாரி கற்றுத் தந்த பாதைஎன்று அந்தக் குரல் வரிசையாகச் சொல்லிக் கொண்டே வந்தது.

இப்படித் தியானிக்கும்போது,

நாம் எதிர்த்துக் களமாட வேண்டிய ஆதிக்கச் சக்திகள் எவை? அதில் எனது நிலை என்ன? நான் ஆதிக்கம் செலுத்துபவனா? அல்லது பாதிக்கப்பட்டவனா?

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகக் களத்தில் நிற்க முயலும்போது, நம்மைத் தடுக்க முனைவது எது? காட்டிக் கொடுக்கப் போவது எது?

ஆதிக்கத்திற்கு எதிராக வினைபுரியும்போது நம்மோடு பயணப்படப் போவது யார்? நமக்கு எதிராக வரப்போவது யார்?

போராட்ட வாழ்வில் நம்மைக் கீழே வீழ்த்த இருப்பது எது? வீழ்ந்த நம்மை மீண்டும் எழுந்து நடக்க உதவுவது யார்

என்பது போன்ற கேள்விகளை எழுப்பிதனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கை இரண்டையும் அலசி ஆராய்ந்து, எழுந்து நடக்க வழி (பெ)ற்றிட  கல்வாரிப் பாதை உதவிட வேண்டும்.

கல்வாரி கற்றுத் தந்த பாதை, தளத்தில் நின்று தொழுவதற்கா? அல்லது களத்தில் இறங்கிப் போராட எழுவதற்கா? நீங்களே சிந்தித்துக் கண்டு பிடியுங்கள். அது சரி, அன்பர்களே! நீங்கள் தெரிவு செய்தது எது? தளமா? களமா? விரும்புவது எது? தொழுவதா? எழுவதா?

Comment