No icon

தெளிந்த பார்வையும், ஆழ்ந்த அர்ப்பணமும்!

திருப்பணியாளர்களின் பணிகள் பற்றிய சங்க ஏடு ‘திருப்பணியாளர் பணியும், வாழ்வும்’ என்னும் விதித்தொகுப்பில் மூன்று மிக முக்கியமான பணிகளைக் குறிப்பிடுகின்றது: 1. போதிக்கும் பணி, 2. தூய்மைப்படுத்தும் பணி, 3. ஆளும் பணி. இவ்வனைத்துப் பணிகளின் நோக்கம், மக்களைக் கிறிஸ்தவ நெறியிலும், அன்பிலும், மாண்பிலும் கட்டியெழுப்புவதாகும். இதே விதித்தொகுப்பின் அடுத்த பகுதி ‘திருப்பணியாளர்களின் வாழ்வு’ எனும் தலைப்பில் அமைந்துள்ளது. சங்க ஏடு குறிப்பிடுகின்ற மேற்குறிப்பிட்ட மூன்று பணிகளையும் உள்வாங்கி, தன்னுடைய பணிப்பார்வையை, அர்ப்பணத்தை வெளிக்கொணரும் விதமாக ‘தேடிச் சென்று பேணிக் காக்க...’ என்ற விருதுவாக்கோடு தனது தெளிந்த பார்வையை, ஆழ்ந்த அர்ப்பணத்தை அன்னையாம் திரு அவைக்கு எடுத்து இயம்புகிறார் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ்.

இறைமகன் இயேசு ஏழையருக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் இளைப்பாறுதலையும், நம்பிக் கையையும் அளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு என எண்ணியவர், வாழ்ந்தும் காட்டினார். அதுவே அவர் உருவாக்கிய புரட்சிப் பாதை! “நீங்கள் தர்மம் செய்யும் போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்” (மத் 6:3) என்கிறார் இயேசு. வலது கை தர்ம சிந்தனையையும், இடது கை தன் முனைப்பையும் குறிக்கின்றது. இறைமகன் இயேசுவின் இத்தகைய சிந்தனைகள் புதுப்பார்வையோடு பணிபுரிய நமக்குப் பாதை காட்டுகின்றது.

தலைமைப்பணி என்பது அனைவரையும் உள்ளடக்கிய பணி. வழி தவறியவர்கள், ஆதரவற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், நோயாளிகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், தேவையில் இருப்பவர்கள், விளிம்பு நிலையில் வாழ்வோரை மையம் கொண்டு செயல்பட வேண்டும். அதற்குச் சிறந்த உதாரணம் இதுவே. ‘காணாமற்போன ஆடு’ எனும் உவமை வழியாக இயேசு நமக்குக் கற்றுத் தந்துள்ளார். “வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார்” (மத் 18:13).  வழி தவறிய ஆடு கிடைத்தால், மீண்டும் காணாமல் போய்விடக் கூடாது என்பதற்காக, அந்த ஆட்டினை நல்லாயன் இயேசு தம் தோளிலே சுமந்து செல்வார். வழி தவறியவர்களுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் தலைமைப் பொறுப்பேற்பது மிகவும் சிரமம் என்பதனை அறிந்தும், நமது பாசத்திற்குரிய ஆயர் அவர்கள் இச்சிந்தனைகளை உள்வாங்கி, தன் பணி அர்ப்பணத்தை வெளிப்படுத்தியிருப்பது அவரது அசாத் திய பொறுமையையும், சகிப்புத்தன்மையையும், கருணையையும், கனிவையும் காட்டுகின்றது.

பரந்த மனத்தோடு பணியை ஆழப்படுத்தி, அர்ப்பண உணர்வோடு செயல்படும்போது கண்ணுக்குத் தெரியாத எண்ணற்றச் சிலுவைகள் வந்து செல்வது பணிவாழ்வின் எதார்த்த நிகழ்வு என்பதை அன்பு ஆயர் நன்கு அறிவார். எனவேதான், தனது பணி வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இயேசுவின் வாழ்வு உணர்த்தும் இணையற்ற தலைமைப் பண்பை வெளிக்காட்டும் சிந்தனையைத் தன் பணி வாழ்வில் மையமாக ஏற்கிறார்.

இயேசுவிடம் இருந்த உறுதி, கண்டிப்பும் கனிவும் இணைந்த மேலாண்மையை நமக்குக் கற்றுத் தருகின்றது. இயேசு, கோவிலைத் தூய்மைப்படுத்திய (மத் 21:12-13) பணியே இதற்குச் சான்று. தலைமைப்பணி புரிவோர் நன்மை ஏது? தீமை எது? என்பதைத் தீர்மானிக்க இயேசுவின் இறையாட்சிப் பணி  வழிகாட்டுகிறது. நம் அன்பு ஆயரின் முந்தைய பணித்தளப் பணிகள் “மரத்தை அதன் கனியால் அறியலாம்” (மத் 12:33) என்ற இறைவார்த்தைக்குச் சான்றாக அமைகின்றன.

தன் அருள்பணி வாழ்வில் நல்ல விதைகளைத் தூவிக்கொண்டு செல்ல வேண்டும் என்பது நமது ஆயர் அவர்களின் உயர்ந்த எண்ணமாகும். தொடர்ந்து நல்ல விதைகளை விதைக்கின்றபோது அது மானுடத்தை உயர்த்தும் கோபுரங்களாக உயர்ந்து நிற்கும் என்பது ‘தேடிச் சென்று பேணிக் காக்கும்...’ என்னும் உயர்ந்த இலட்சியத்தைக் குறிக்கின்றது.

அன்பு ஆயர் அவர்களை வாழ்த்துவோம். பணி சிறக்க உடனிருந்து பணியாற்றுவோம்.

Comment