No icon

இறைவேண்டலின் பரிமாணங்கள் – 13

கைகளைப் பயன்படுத்தி இறைவேண்டல்!

நமது உடல் இறைவன் நமக்குத் தந்த மாபெரும் கொடை! மனம், ஆன்மா, சிந்தனை, உணர்வுகள், மனச்சான்று, மனவலிமை, தன்னறிவு போன்றவையும் கடவுள் தந்த கொடைகளே. ஆனால், அவற்றிற்கில்லாத ஒரு தனித்தன்மை உடலுக்குண்டு. உடலை மட்டுமே நாம் கண்டு, தொட்டு நமது புலன்களால் உய்த்துணர முடியும். அதேவேளையில், உடல் மட்டுமே காலம், இடம் இரண்டாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும், உடலின் ஒரு நிறைவின்மை என்பதையும் நாம் அறிவோம். நம் உடலின் உறுப்புகளுள் கைகளுக்குத் தனிச்சிறப்பு உள்ளது. கைகளால்தான் நாம் உண்கிறோம், உடுத்துகிறோம், உணர்கிறோம், தொடுகிறோம். இவை போன்ற இன்றியமையாத பணிகள் பலவற்றையும் செய்ய கடவுள் தந்த கொடையே நமது கைகள்.

இறைவேண்டலுக்கும் நமது கைகளைப் பயன்படுத்த அழைப்பு விடுக்கிறது திருவிவிலியம். நமது முன்னோர்கள் எப்படிக் கைகளை இறைவேண்டலுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை அறிந்து, நாமும் அவ்வாறே இறைவனை வழிபடுதல் நன்று.

கைகளை உயர்த்தி இறைவேண்டல்

கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்வது மிகவும் தொன்மையான ஒரு பழக்கமாக இருந்திருக்கிறது. இஸ்ரயேலர்கள் போர்புரிந்தபோது, அவர்களுக்காகக் கைகளை உயர்த்தி மன்றாடினார் மோசே என்று விடுதலைப் பயணநூல் சொல்கிறது. “மோசே தன் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தன் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்” (விப 17:11) என்பது ஒரு வியப்பான செய்தி.

மோசேவைத் தொடர்ந்து, சாலமோன் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி, முழந்தாளிட்டு ஆண்டவரிடம் வேண்டுதல் செய்தார் (1அர 8:54). அவ்வாறே, எஸ்ரா ஆண்டவரை வாழ்த்தியபோது, மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி ‘ஆமென்! ஆமென்!’ என்று பதிலுரைத்தார்கள் (நெகே 8:6). அவ்வாறே, மக்கபே விண்ணை நோக்கித் தன் கைகளை உயர்த்தி வியத்தகு செயல்கள் புரியும் ஆண்டவரை மன்றாடினார் (2மக் 15:21).

இம்மரபுகளைப் பின்பற்றி “தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள்” (திபா 134:2) என்றும், “மாலை பலிபோல் என் கைகள்  உம்மை நோக்கி உயர்வனவாக” (திபா 141: 2) என்றும் அழைக்கிறது திருப்பாடல்கள் நூல்.

தொடக்கத் திரு அவையிலும் ஆண்கள் சினமும், சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு அறிவுறுத்தினார் பவுலடியார் (1திமொ 2:8).

கைகளை விரித்து இறைவேண்டல்

கைகளை விரித்து மன்றாடுவதும் ஒரு திருவிவிலிய மரபே. எஸ்ரா கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து (எஸ் 9:5) மன்றாடினார். தோபித்து நூலின் இளம்பெண் சாரா பலகணியை நோக்கிக் கைகளை விரித்துப் பின்வருமாறு மன்றாடினாள்: “இரக்கமுள்ள இறைவா போற்றி! என்றும் உம் திருப்பெயர் போற்றி! உம் செயல்களெல்லாம் உம்மை என்றும் போற்றுக” (தோபி 3:11).

எசாயாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் இரக்கமுள்ள ஆண்டவரை நோக்கித் தங்கள் கைகளை விரித்து, அவரைத் துணைக்கு அழைத்தார்கள். தூய இறைவன் விண்ணகத்திலிருந்து அவர்களுக்கு உடனே செவிசாய்த்தார் (சீஞா 48:20) என்று பதிவு செய்துள்ளது சீராக்கின் ஞானநூல்.

கைகளைக் கூப்பி இறைவேண்டல்

கைகூப்பி இறைவேண்டல் செய்வதற்கான சான்றுகளைத் திருப்பாடல்கள் நூலில் காண்கிறோம். “துயரத்தினால் என் கண் மங்கிப் போயிற்று; ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்; உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்” (திபா 88:9) என்றும், “என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்; இரவில் அயராது கைகூப்பினேன்; ஆனாலும், என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை” (திபா 77:2) என்றும் வாசிக்கிறோம்.

துயர நேரத்தில் மட்டுமல்ல, இறைப்புகழ்ச்சியின் போதும் கைகூப்பி மன்றாடலாம். “என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்” (திபா 63:4) என்கிறார் தாவீது அரசர்.

கைகொட்டி இறைவேண்டல்

மகிழ்ச்சியின், ஆர்ப்பரிப்பின் வேளைகளில் கைகொட்டுவதை இயற்கையே செய்கிறது. “ஆறுகளே, கைகொட்டுங்கள்; மலைகளே, ஒன்று கூடுங்கள்” (திபா 98:8); “மலைகளும், குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும்; காட்டு மரங்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்” (எசா 55:12) என்பன இதற்குச் சான்றுகள். எனவே, “மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்” (திபா 47:1) என்று அழைக்கிறது திருப்பாடல்கள் நூல்.

கைகளை மார்பில் அறைந்து இறைவேண்டல்

மனத்துயரின் அடையாளமாகத் திருப்பலியின் பாவத்துயர் மன்றாட்டில் நாம் கையை மார்பில் அறைந்து மன்னிப்புக் கோருகிறோம். இயேசுவின் உவமையில் வரும் வரிதண்டுபவர் தொலைவில் நின்று கொண்டு, வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாமல் தன் மார்பில் அடித்துக் கொண்டு, “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்றார் (லூக் 18:13) என்பதன் தொடர்ச்சியே இப்பழக்கம்.

நமது கைகள் ஆண்டவர் தந்த கொடைகள். அக்கைகளை இறைவேண்டலுக்குப் பயன்படுத்தி நம் செப வாழ்வைச் செறிவாக்குவோம்.

(தொடரும்)

Comment