No icon

ஞாயிறு தோழன்

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு ஆமோ 8:4-7, 1திமொ 2:1-8, லூக் 16:1-13

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 25 ஆவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு வித்தியாசமான உவமையின் வாயிலாக நமக்கு நற்செய்தியை வழங்குகிறார். நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது, யாராவது ஒருவருக்குதான் செய்ய முடியும் என்று சொல்லும் அவர், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள், நேர்மையற்ற செல்வத்தை நேர்மையாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார். இதன் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லும் செய்தி என்ன? நாம் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? கடவுளுக்கா? அல்லது செல்வத்திற்கா? செல்வத்தை கடவுளாக வழிபடுகிறோமா அல்லது கடவுளை ஒப்பற்ற செல்வமாக நினைக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்கவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உவமையின் வாயிலாக நமக்கு அழைப்பு விடுக்கிறார். ‘உமக்கு உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு பிறகு வந்து என்னை பின் செல்என்ற இறைவார்த்தையின் மூலமாக இன்றைய நற்செய்தியை நாம் புரிந்து கொள்ளலாம். நாம் வைத்திருக்கும் செல்வத்தைக் கொண்டு நன்மைகள் செய்ய வேண்டும். தான, தர்மங்கள் செய்ய வேண்டும். இதன் வழியாக ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே, இதனுடைய அடிப்படையான கருத்து. இன்று நாம் நிலைவாழ்விற்கான நன்மைகளை சேர்ப்பதைவிட, இவ்வுலகில் வாழ்வதற்கான செல்வங்களை சேர்த்து வைக்க அலைந்து கொண்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இதைத்தான் சாடுகிறார். இவ்வுலகில் நீங்கள் பெறுகின்ற செல்வங்களையெல்லாம் வைத்து, நன்மைகள் செய்து, நிலைவாழ்வை பெற்றுக்கொள்ள முற்படுங்கள் என்றுரைக்கிறார். சிந்திப்போம், நாம் இதுவரை சேர்த்து வைத்திருக்கும் செல்வங்களைக் கொண்டு, நன்மைகள் செய்திருக்கிறோமா? இல்லையெனில், அதற்கான வரத்தை இத்திருப்பலியில் கெஞ்சி மன்றாடுவோம்.

முதல் வாசகம் முன்னுரை

இஸ்ரயேல் மக்கள், என்று கடவுளுக்கு முதலிடத்தை அளிப்பதை தவிர்த்து, செல்வத்திற்கு முதலிடம் அளித்தார்களோ அன்றே அவர்களின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. ஆண்டவர் அவர்களின் இத்தீய எண்ணத்தை வெறுக்கிறார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுளுக்கும், மனிதருக்கும் இணைப்பு பாலமாக இருப்பவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே. எல்லா மனிதரும் மீட்பு பெறவேண்டும் எனும் தந்தை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றி, அதற்காக தம்மையே கையளித்தார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்களை வழி நடத்துபவரே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் செல்வத்திற்கு பணிவிடை புரியாமல், உமக்கு பணிவிடை புரியும் உண்மையான ஊழியர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களை ஆள்பவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் பணத்தை தலைவனாக நினைத்து, இலஞ்சம், ஊழல் இவற்றில் ஈடுபடாமல், மக்களுக்கு பணியாற்றும் உண்மையான ஊழியர்களாக மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எல்லாம் வல்லவரே!  எங்கள் பங்கு தந்தையையும், எம் பங்கு மக்களையும் நிறைவாக ஆசீர்வதியும்.செல்வந்தன், ஏழை என்ற எண்ணத்தோடு நாங்கள் வாழாமல், பிறரோடு பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் அன்போடு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைத்தையும் படைத்தவரே! எங்கள் பங்கில் இருக்கும் பெண் குழந்தைகளை நீர் நிறைவாக ஆசீர்வதித்துஇவர்களுக்கு போதிய பாதுகாப்பை  தந்து, உமது இறை மாண்பு  இவர்கள் வழியாக நீர் வெளிப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் அன்பு தந்தையே! சிறைச்சாலைகளில் கைதிகளாக இருப்போருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்கள் குற்றங்களை நீரே மன்னித்து, நல்வழிகாட்டி, நல்வாழ்வு வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment