No icon

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு (29-09-2024)

எண் 11:25-29; யாக் 5:1-6; மாற்கு 9:38-48

திருப்பலி முன்னுரை

1950-ஆம் ஆண்டில், இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர் வில்லியம் ரசல். அவர் பொறாமையைப் பற்றிச் சொல்லும்போது இறைவன் கொடுத்த இயற்கையான, இயல்பான மகிழ்ச்சியைக் கெடுப்பது பொறாமை என்கிறார். ஆபேலின் காணிக்கையை மட்டும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். ‘என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லையேஎன்று பொறாமை கொண்டு தன் சகோதரனைக் கொலை செய்கின்றான் காயின். தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்என்று ஆண்களும் பெண்களும் ஆடிப் பாடி அவர்களை வரவேற்றார்கள். இதைக் கேட்ட சவுல் தாவீதுமீது பொறாமை கொண்டு, அவரைக் கொல்லத் தேடினார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்குரைத்த இருவர்மீது, மூப்பர்கள் பொறாமை கொள்கின்றார்கள். நற்செய்தியில், சீடர்கள் இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டுபவரைப் பொறாமை கொண்டு தடுத்தார்கள். அதனால் தங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்தார்கள். இவ்வழிபாட்டின் வழியாக நம்முடைய எண்ணங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, பொறாமை எனும் நோயிலிருந்து நலம்பெறச் செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை

விடுதலையின் நாயகன் மோசே கடவுளுடன் உரையாடி, எழுபது மூப்பர்களுக்கும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்ள உதவினார். மேலும், மூப்பர்களாக இல்லாத வேறு இருவரும் இறைவாக்கு உரைப்பதைக் கண்டபோது, மக்கள் பொறாமை கொள்கின்றார்கள். பொறாமை என்பது தன்னையும் பிறரையும் கொல்லக்கூடிய உணர்ச்சி என்று மோசே எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

செல்வம் என்பது நிரத்தரமானது அல்ல; அது அழிந்து போகக்கூடியது. செல்வந்தவர்களை அழிக்க வேறு எந்த ஆயுதமும் தேவையில்லை. அவர்கள் குவித்து வைத்திருக்கும் செல்வமே அவர்களை அழிக்கக்கூடியது. மேலும், பலர் செல்வத்தைத் தங்கள் களஞ்சியத்தில் நிரப்பி வைத்துக்கொண்டு, பணியாளருக்கு உரிய ஊதியத்தையும் கொடுக்காமல், அதையும் சேர்த்து வைத்துக்கொள்ளும் பண்பு தவறானது என்பதை இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. அதனைக் கவனமுடன் கேட்போம்.

மன்றாட்டு

1. அன்பின் இறைவா, இத்திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் பொறாமை குணத்தை விட்டு விட்டு திரு அவையின் முன்னேற்றத்திற்காக உழைக்க வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பண்பை விதைக்கும் எம் ஆண்டவரே, நாங்கள் வாழும் இவ்வுலகில் எந்தவோர் ஏற்றத்தாழ்வும் இல்லாமல், மக்கள் அனைவரும் நிறைவோடு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பான இதயத்தைக் கொண்ட எம் இறைவா, உலக இதய தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், இதய நோயாளிகளுக்காக மன்றாடுகிறோம். இதயப் பிரச்சினைகள் நீங்கி நலமுடன் வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தூய்மை மனம் கொண்ட இறைவா, நாங்கள் வாழும் பகுதியைத் தூய்மை செய்யும் துப்புரவுப் பணியாளருக்காக மன்றாடுகிறோம். அவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்த ஞானத்தைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Comment