No icon

பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு (06-10-2024)

தொநூ 2:18-24; எபி 2:9-11; மாற்கு 10:2-16

திருப்பலி முன்னுரை

நம் சமூகத்தில் அரிதினும் அரிதாக இருந்த மணவிலக்கு என்னும் திருமண முறிவு, தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. மிகச் சாதாரணமாகப் பேசித் தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் கூட மணவிலக்கு வழக்குகளாகக் குடும்பநல நீதிமன்றங்களில் பதிவாகின்றன. இதுவரை குடும்பநல நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். தந்தையின் அரவணைப்பு கிடைக்காமல், தாயின் அன்பை அனுபவிக்க இயலாமல், முழுமையான குடும்ப உறவை இழந்து தவிப்பவர்கள் குழந்தைகள்தாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமணத்தின் மேன்மையை இறைவன் இன்று திருவழிபாட்டின் வழியாக எடுத்துரைக்கிறார். கணவனும்-மனைவியும் ஒரே உடலாய் இருக்க வேண்டும். மகிழ்ச்சி, சோகம், வேதனை, துன்பம், இன்பம் ஆகிய அனைத்தையும் சமமாக இருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அன்புதான் திருமண வாழ்வின் மையமாக இருக்க வேண்டும் என்று இறைவன் அழைப்பு கொடுக்கிறார். அன்பை மையமாக வைத்துக் குடும்ப வாழ்வு வாழ இறைவனை நோக்கி மன்றாடுவோம் இத்தெய்வீக திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்றுஎன்று இறைவன் விரும்பினார். அவருக்கு ஏற்ற நல்ல துணையாக, ஏற்ற இணையாக ஏவாளைப் படைத்தார். கடவுளின் பார்வையில் இவர்கள் இருவரும் சமம். இவர்களில் எந்தவோர் ஏற்றத்தாழ்வும் வரக்கூடாது. இனி இவர்கள் இருவரும் ஒரே உடலாய் இருப்பர் என்று திருமணம் என்ற அமைப்பை உருவாக்கிய இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்றே, தாமே உருவாக்கினார். கடவுள் மக்கள் அனைவரையும் தம் மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பினார். அந்த அழைப்பு பயணமாக மாறியது. அந்தப் பயணம் மீட்பின் பயணம். இம்மீட்பின் பயணத்தில் எதிர்ப்புகளைச் சந்திக்கக் கூடும்; எவ்வித ஆறுதலுமின்றி எல்லாரும் கைவிடக்கூடும். இப்பயணத்தில் இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பைக் கிறிஸ்துவின் சிலுவையில் நாம் கண்டுணர அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. அன்பு தெய்வமே இறைவா! எங்கள் குடும்பத்திற்குத் தேவையான அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகிய ஆசிகளோடு, என்றென்றும் மகிழ்வோடு வாழ அருள்புரிய வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமே உருவான எம் இறைவா! திருமணம் எனும் அருளடையாளத்தின் வழியாக இணைக்கப் பெற்ற கணவனும்-மனைவியும் எப்போதும் ஒருவர் மற்றொருவருடன் ஒற்றுமையாகவும் அன்புறவிலும் இணைந்திருக்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. திரு அவையின் தலைவரே எம் இறைவா! திரு அவை உறுப்பினர்கள் அனைவரும் உம்மை அன்பு செய்து, ஒற்றுமையுடன் இத்திரு அவையை மேன்மைப்படுத்த வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்என்று கூறிய இறைவா! தாய் அல்லது தந்தை ஒருவரால்  வளர்க்கப்படும் குழந்தைகள் முழுமையான அன்பைப் பெற அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

Comment