No icon

ஞாயிறு – 05.03.2023

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு தொநூ 12:1-4, 2 திமொ 1:8-10, மத்17:1-9

திருப்பலி முன்னுரை

இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது விருப்பப்படி அல்ல; மாறாக, தந்தை கடவுளின் திருவுளப்படி நாம் நடக்க வேண்டும் என்று கூறுகிறார். கடவுளின் இறையாட்சிக்காக, அவரின் நற்செய்திக்காக நாம் துன்பப்பட்டு, உயிரை தியாகம் செய்து, அவரின் சாட்சிகளாய் வாழ வேண்டும் என்பது அவரது திருவுளம் என்றால், அதை நாம் மனமுவந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை இன்று நமக்குத் தெளிவாக்குகிறார். தனது அன்பு சீடர்களோடு மலைக்குச் சென்ற ஆண்டவர் இயேசு, அங்கே சீடர்கள் முன்னிலையில் இறைவாக்கினர் எலியாவோடும், மோசேவோடும் பேசுகையில் முழு இறைவனாக உருமாறுகிறார். மெசியா வருவார் மக்களை மீட்பதற்காக அவர் தன்னையே கையளிப்பார் என்றுரைக்கப்பட்ட இறைவாக்குகளும், இறைச்சட்டங்களும் ஆண்டவர் இயேசுவில், அவரது பாடுகளினாலும், இறப்பினாலும் நிறைவடைய போகின்றன என்பதை சுட்டிக் காட்டவே இறைவாக்கினர் எலியாவும், மோசேவும் இம்மலையில் ஆண்டவர் இயேசுவோடு உரையாடுகிறார்கள். அக்காட்சியை கண்ட திருத்தூதர் பேதுரு, ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நலம் என்று கூறுகிறார். அப்பொழுது திடீரென்று வானம் திறக்க, தந்தை கடவுள் எனது அன்பார்ந்த மகனாகிய இவர் வழியாகவே நான் மாட்சியடைய போகிறேன். எனவே, இவர் சொல்வது போல செய்யுங்கள். இவர் செய்யப் போகும் அற்புதங்களில், அதிசயங்களில் பலனடைந்து நலமாக வாழ வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, மனித குலத்தின் மீட்புக்காக இவர் படப்போகிற துன்பங்கள், அவமானங்கள், பாடுகள் மற்றும் சிலுவை மரணத்திற்கு நீங்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உங்களை அழைத்திருக்கிறேன். எனவே, எனது திருமகனின் குரலுக்கு செவி சாயுங்கள் என்று, தந்தை கடவுள் தெள்ளத் தெளிவாக உரைக்கிறார். இன்று நம் ஆண்டவர் நமக்கு செய்த அற்புதங்கள், அதிசயங்களோடு நின்று விட்டோமா அல்லது அவரின் பாடுகள், இறப்பிற்கு சாட்சிகளாக இருக்கின்றோமா என்று சிந்தித்தவர்களாய் இஞ்ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

தந்தை கடவுள் உரைத்தபடி ஆபிரகாம் தன் தந்தை மற்றும் இனத்தவரை விடுத்து ஆண்டவர் வாக்களித்த நாட்டுக்கு செல்லுகிறார். மேலும், பல துன்பங்கள் மத்தியிலும் ஆண்டவர் அவருக்கு ஆசீர்வாதத்தை தருகிறார் என்று கூறும் இம்முதல்  வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நற்செய்தியின் பொருட்டு நாம் எத்தகைய துன்பத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நிலை வாழ்வை நற்செய்தியின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு வழங்கி உள்ளார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்பு தந்தையே இறைவா! உம் திரு அவையை வழிநடத்தும் உமது திருப்பணியாளர்கள் இறையாட்சிக்காக, உமது நற்செய்திக்காக எத்தகைய துன்பங்களையும் தாங்கிக் கொள்ளக்கூடிய மனதினை பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதி வழங்கும்  தந்தையே! எம் நாட்டை வழிநடத்தும் நாட்டுத் தலைவர்கள், உமது அழைப்பை ஏற்ற ஆபிரகாமை போல, தமது மக்களை சிறப்பாக வழி நடத்தி, உமது திருவுளத்திற்கு ஏற்றவாறு ஆட்சி செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இரக்கமுள்ள தந்தையே! எங்கள் பங்கையும், பங்கு குருக்களையும் மற்றும் எங்களையும் நிறைவாக ஆசீர்வதியும். உமது கட்டளைக்கு ஏற்றவாறு நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து, சகோதர சகோதரிகளாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கனிவுள்ள தந்தையே! தவக்காலத்தினுடைய இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நாங்கள், உம் திருமகனின் பாடுகள் மற்றும் இறப்பிற்கு சாட்சிகளாக வாழ்ந்து, அதை பிறருக்கு பறைசாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment