No icon

ஞாயிறு – 23.04.2023

பாஸ்கா காலம் 3 ஆம் ஞாயிறு திபணி 2:14, 22-33, 1பேது 1:17-21, லூக் 24:13-35

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் 3 ஆவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். தனது பாடுகள், இறப்பு, உயிர்ப்புக்கு பிறகும், சீடர்களின் நம்பிக்கையற்ற நிலையைக் கண்ட ஆண்டவர் இயேசு, அவர்களை மீண்டும் நம்பிக்கையில் நிலைபெற செய்கிறார். எம்மாவு என்கிற ஊரானது எருசலேமிலிருந்து ஏறக்குறைய 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. இவ்வூருக்கு ஆண்டவர் இயேசுவின் சீடர்களுள் இருவர் பயணம் மேற்கொள்கிறார்கள். அப்போது, ஆண்டவர் இயேசுவுக்கு நிகழ்ந்ததைப் பற்றி பேசிக்கொண்டே செல்கிறார்கள். அவர்களோடு வழியில் இணைந்த ஆண்டவர் இயேசு, எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று சீடர்களிடம் கேட்கிறார். சீடர்களும் ஆண்டவர் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பைப் பற்றி பேசுகிறோம் என்று ஆண்டவர் இயேசுவிடமே கூறுகிறார்கள். ஆண்டவர் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பை பற்றி கூறிய சீடர்கள், உயிர்ப்பைப் பற்றி துணிவோடு கூறவில்லை. மாறாக, இயேசுவின் உடலை காணவில்லை என்று கூறுகிறார்கள். அப்போது ஆண்டவர் இயேசு அவர்களை, நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே என்று கடிந்து கொள்ளுகிறார். இறைவாக்கினர்கள், மறைநூல்களில் தமது உயிர்ப்பைப் பற்றி சொல்லியிருப்பதையும் எடுத்துக் கூறுகிறார். அப்போதும் அவர்களது கண்கள் திறக்கப்படவில்லை. இறுதியாக, அப்பம் பிடுதலின் போதே, ஆண்டவர் இயேசுவை அவர்கள் கண்டு கொள்கிறார்கள். நாம் எப்பொழுதெல்லாம் நமது நம்பிக்கையில் தளர்ந்து போகிறோமோ, அப்பொழுதெல்லாம் ஏதோ ஒரு வகையில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம்பிக்கையில் நாம் உறுதி பெற உதவி புரிகிறார் என்ற நம்பிக்கையோடு இத்திருப்பலியில் பக்தியோடு பங்குபெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

இஸ்ராயேல் மக்களே! நாசரேத் இயேசு வழியாகவே தந்தைக் கடவுள் பல்வேறு அரும்செயல்களை உங்கள் நடுவே செய்திருக்கிறார். அனைத்திற்கும் மேலாக அவரை மரண வேதனையிலிருந்து உயிர்த்தெழச் செய்ததற்கு நாங்களே சாட்சிகள் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தந்தைக் கடவுள் ஆள் பார்த்து அல்ல; அவரவரின் செயல்களை பார்த்தே தீர்ப்பு வழங்குவார். பாவத்தில் இருந்த மனுக்குலத்தை மீட்க, மாசுமறுவற்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தத்தை விலையாக கொடுத்தார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. நம்பிக்கையை வழங்குபவரே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள், தாங்கள் பெற்றுக்கொண்ட குருத்துவம் மற்றும் துறவறத்தில் நிலைத்திருந்து, திரு அவையின் நம்பிக்கையை உலகமெங்கும் பரப்பிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திடமளிப்பவரே! எமது இந்திய நாட்டை ஆளும் தலைவர்கள் மூடநம்பிக்கைகளில், செல்வந்தர்களில், பதவியில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாமல், நீர் கற்பித்திருக்கும் உண்மை, நீதி இவற்றின் மீது பற்று கொண்டு, ஆட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அற்புதங்கள் புரிபவரே! திருத்தூதர்களைப் போல, உமது வார்த்தைகளைக் கேட்க, தியானிக்க வாய்ப்பு பெற்றிருக்கும் நாங்கள், உம்மிலே முழு நம்பிக்கைகொண்டவர்களாகவும், அந்நம்பிக்கையைப் பறைசாற்றுபவர்களாகவும் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வளங்களை வழங்குபவரே! உணவு பஞ்சத்தால், தண்ணீர் பஞ்சத்தால் அவதியுறும் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை வழங்கி, அவர்கள் நம்பிக்கைக் குன்றா வண்ணம், நீர் அவர்களை வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமுள்ள இறைவா! நீர் ஆள் பார்த்து அல்ல; எங்களின் செயல்களை பார்த்தே எங்களுக்கு தீர்ப்பு வழங்குவீர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். நிலைவாழ்வை பெற்றுக்கொள்ள எமது செயல்களின் வழியாக உதவி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment