நல்லாயன் & இறையழைத்தல் ஞாயிறு (30.04.2023)
உயிர்ப்புக் காலம் 4 ஆம் ஞாயிறு திப2:14, 36-41, 1பேது 2:20-25, யோவா 10:1-10
- Author அருள்பணி. P. ஜான் பால் --
- Saturday, 29 Apr, 2023
திருப்பலி முன்னுரை
இன்று நாம் பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறின் திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இஞ்ஞாயிறை நல்லாயன் ஞாயிறாகவும், இறையழைத்தலுக்கான ஞாயிறாகவும் கொண்டாட, நம்முடைய தாயாம் திரு அவையானது நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆடுகளுக்கு வாயில்நானே எனக்கு முன்பாக வந்தோர் அனைவரும் திருடரும் கொள்ளையரும் என்று கூறுகிறார். யாரைக் குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார்? இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய குலமுதுவர்களையா? நீதித்தலைவர்களையா? அல்லது இறைவாக்கினர்களையா? யாரைச்சொல்லுகிறார். கடவுளின் பெயரைச் சொல்லி மக்களை தவறான பாதையில் நடத்திய தலைமை குருக்களையும், மறைநூல் சட்டங்களை கொண்டு மக்களுக்கு நல்வழி காட்டாமல் அவர்களை மூடநம்பிக்கையில் அமிழ்த்திய மறைநூல் அறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களையும், மதசடங்குகள் என்ற பெயரில் மக்களை வாட்டிவதைத்த பரிசேயர்களையும், சதுசேயர்களையுமே ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொள்ளையர்கள் திருடர்கள் என்று சாடுகிறார். இறைவாக்குகளுக்கும், இறைசட்டங்களுக்கும் தவறான விளக்கங்கள் தந்து மக்களை கடவுளிடம் அழைத்துச் செல்லாமல், தங்களையே கடவுள்போல் காட்டிக் கொண்டார்கள். இத்தகைய நேரத்தில்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவாக்குகளுக்கும், இறைசட்டங்களுக்கும் உரிய உண்மையான விளக்கத்தை தருகிறார். இறைவாக்குகளும், இறைசட்டங்களும் முன்மொழிந்த நல்ல ஆயன் நானே, என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வரமுடியாது. ஏனெனில், நானே விண்ணகத்தின் வாயில் என்பதை அம்மக்களுக்கு விளக்கி, அவர்களை நிலை வாழ்விற்கு ஆயத்தப்படுத்துகிறார். நல்லாயன் ஞாயிறு மற்றும் இறையழைத்தல் ஞாயிறை கொண்டாடும் நாமும், இயேசு என்னும் விண்ணக வாயிலைஅடைந்திடவும், நமது பங்கிலும், மறைமாவட்டத்திலும் இறையழைத்தல் பெருகிடவும் இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
நாம் மனம்மாறி நம் பாவங்களுக்காக மன்னிப்புபெற வேண்டுமென்றால், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தூய ஆவியானவரை தந்தைக்கடவுள் நமக்கு கொடையாகத் தருவார் என்று கூறும் இம்முதல் வாசகத்தை கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நமக்கு வருகிற துன்பங்கள் நாம் குற்றம் செய்வதால் வருகிற துன்பங்களாக இருக்கக் கூடாது. மாறாக, நன்மை செய்வதால் ஏற்படக்கூடிய துன்பமாக இருக்க வேண்டும். ஏனெனில், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அதையே விரும்புகிறார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தை கேட்போம்.
மன்றாட்டுகள்
1. அழைத்து உறுதிப்படுத்துபவரே! உமது திரு அவையை வழிநடத்துவதற்காக நீர் அழைத்திருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் தங்கள் அழைப்புக்கு ஏற்றவாறு உமது பணியை செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அனைத்துலகோரின் அரசரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் வரிகளை சுமைகளாகவும், வருமானம் ஈட்டும் வழிகளாகவும் கருதாமல், மக்களின் நல்வாழ்விற்காக அவற்றைப் பயன்படுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கண்மணிபோல காப்பவரே! இறையழைத்தல் ஞாயிறை கொண்டாடும் இந்நாளில், உமது பணியை ஏற்று, இவ்வுலகிற்கு நன்மை செய்திட ஆர்வமுள்ள இளையோர்கள் எம் பங்கிலும், இல்லங்களிலும் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நலன்களை வழங்குபவரே! தீராத பிணிகளால் அவதியுறும் உமது நம்பிக்கையாளர்கள்மேல்,உமது இரக்கத்தை நீர் நிறைவாய் பொழிந்து, அவர்களது பிணிகளையும், வலிகளையும் நீக்கி அவர்களுக்கு வாழ்வுதந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. நிலைவாழ்வளிப்பவரே! எமது பங்கிலும், குடும்பங்களிலும் மரித்த ஆன்மாக்கள், யாரும் நினையாத மற்றும் உத்தரிக்கிற நிலையில் இருக்கும் ஆன்மாக்கள், விண்ணகவாயிலாம் உமது திருமகன் வழியாக நிலை வாழ்வு பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment