No icon

ஞாயிறு – 07.05.2023

உயிர்ப்புக் காலம் 5 ஆம் ஞாயிறு திபணி 6:1-7, 1பேது 2:4-9, யோவா 14:1-12

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் 5 ஆம் ஞாயிறின் திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். ஆண்டவரே, தந்தையை எங்களுக்கு காட்டும் என்று கேட்ட சீடர்களுக்கு, என்னைக் காணும் போது நீங்கள் தந்தையையும் காண்கிறீர்கள். ஏனெனில், நானும், தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம், என் மீது நம்பிக்கை கொள்பவர் தந்தை மீதும் நம்பிக்கை கொள்கிறார் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகிறார். மேலும், தந்தையைக் காண தன் செயல்கள் மற்றும் சொற்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். ஏனெனில், ஒருவர் கடவுளுக்கு கீழ்ப்படிந்து, அவர் மீது நம்பிக்கை கொள்ளுகிறபோது, அவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கடவுளுக்கு எதிராக நிற்கிறார்.

இதையே, விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிற போது நீங்கள் என் தாயும், என் சகோதர, சகோதரிகளுமாக இருக்கிறீர்கள் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து அழுத்தமாக கூறுகிறார். பழைய ஏற்பாட்டிலே தந்தைக் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் எனது கட்டளைகளை கடைப்பிடித்து, எனது விருப்பத்தின் படி நீங்கள் வாழ்ந்தால், நான் உங்கள் தந்தையாக இருப்பேன், நீங்கள் எனது மக்களாய் இருப்பீர்கள் என்று கூறுகிறார். புதிய ஏற்பாட்டிலே, நீங்கள் தந்தைக் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படுகிறபோது, கடவுளுக்கே தாயாக, சகோதர, சகோதரிகளாக இருக்கிறீர்கள் என்றுரைக்கிறார். ஆபிரகாம், கடவுள் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையினால், அவர் நம்பிக்கையின் தந்தையாக மாறியதையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து விவிலியத்தில் எடுத்துரைக்கிறார். இவ்வாறு, பழைய ஏற்பாட்டிலே தந்தைக் கடவுளின் மக்களாய் இருந்த நாம், புதிய ஏற்பாட்டிலே அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரது வார்த்தைகளை கடைப்பிடித்து, அவரது திருவுளத்தை நிறைவேற்றுகிறபோது, ஆண்டவருக்கே தாயாக, சகோதர சகோதரிகளாக மாறுகிறோம் என்ற எண்ணத்தோடு இத்திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் வார்த்தையை கேட்பதற்கும், அதற்கு கீழ்ப்படிந்து வாழ்வதற்கும் தடையாய் இருப்பவற்றையெல்லாம் களைந்து, உயிர்த்த ஆண்டவரின் சீடர்களாய் வாழ வேண்டும் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளுகிறபோது, நாம் உயிருள்ள கற்களால் செய்யப்பட்ட ஆலயமாக எழுப்பப்படுவோம், ஆண்டவரில் நமது நம்பிக்கை குறைகிறபோது, நாம் தடுக்கி வீழ்வோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் விண்ணக தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்களின் சொற்களும், செயல்களும் உமது மந்தைகளின் உள்ளத்தில் இறைநம்பிக்கையை அனுதினமும் வளர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் பரம்பொருளே! நாங்கள் உம் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கு, எங்களின் அடிப்படை தேவைகள் கூட தடைக்கற்களாக அமைந்திடக் கூடாது என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கருணைக் கடவுளே! எங்களது ஊரை வழிநடத்திவரும் தலைவர்கள், அரசாங்கப் பணியாளர்கள், தாங்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, அதற்காக உழைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கமுள்ள இறைவா! இந்த வறண்ட கோடைக் காலத்திலே, உண்ண உணவின்றி, பருக நீரின்றி தவிக்கும் உயிரினங்களுக்கு, நல்லதோர் விளைச்சலையும், நீர் வளத்தையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கனிவுள்ள தந்தையே! மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் எம் இந்திய திருநாட்டில் நாளுக்குநாள் பெருகிவரும் கொலைகள், வன்முறைகளுக்கு நீர் ஓர் நல்ல தீர்வைத்தந்து, அமைதி நிலவ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment