No icon

ஞாயிறு – 14.05.2023

உயிர்ப்புக் காலம் 6 ஆம் ஞாயிறு திப 8:5-8,14-17, 1 பேது 3:15-18, யோவா 14:15-21

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் ஆறாவது ஞாயிறின் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கின்றோம். தூய ஆவியாம் துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். ஆகவே, கவலை கொள்ளாமல், அஞ்சாமல் தொடர்ந்து இறைப்பணி செய்யுங்கள் என்று இறைவன் இயேசு கிறிஸ்து, தான் விண்ணகம் செல்வதற்கு முன்பாக தமது சீடர்களை நம்பிக்கையில் திடப்படுத்துகிறார். ஏனெனில், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு இவற்றையெல்லாம் கண்ட சீடர்கள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போயிருந்தார்கள். ஆண்டவர் இயேசுவின் இறப்பிற்கு பிறகு, அவரின் துணை இல்லாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. அவர் இறந்த பிறகு, இனிமேல் நமக்கு என்ன வேலை, மீண்டும் நமது பழைய தொழிலுக்கே நாம் திரும்புவோம் என்று சொல்லி, மீன்பிடிக்க சென்றார்கள். அப்போது, உயிர்த்த ஆண்டவர் பல முறை சீடர்களுக்கு காட்சித் தந்து, அவர்களை நம்பிக்கையில் திடப்படுத்துகிறார். வெறும் மூன்று நாட்கள் தன்னை காணாததால் சீடர்கள் பழைய நிலைக்கு திரும்பி விட்டார்களே, இதோ நான் விண்ணகம் சென்ற பிறகு, இவர்கள் மீண்டும் என்ன செய்வார்களோ என்பதை முன்கூட்டியே கணித்து, உங்களைத் திக்கற்றவர்களாக விட்டு விட மாட்டேன், உங்களுக்கு தூய ஆவியாம் துணையாளரைத் தருவேன். ஆகவே, அஞ்சாதீர்கள், கலக்கம் கொள்ளாதீர்கள் என்று அவர்களை மீண்டும் நம்பிக்கையில் உறுதிப்படுத்துகிறார். நாம் கலக்க முறுகிறபோது தூய ஆவியானவர் நம்மை தேற்றுவார், திடப்படுத்துவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

சமாரியா நகர் மக்கள், திருத்தூதர்கள் அறிவித்த இறைவாக்குகளையும், அவர்கள் செய்த அரும் அடையாளங்களையும் நம்பினார்கள். இதனால் மக்களிடையே பெரும் மகிழ்வு உண்டாயிற்று. தீய ஆவிகள் நீங்கி, தூய ஆவியானவரை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நமது பாவங்களுக்காக தன்னை கையளித்த இயேசுவே நமது ஆண்டவர். அவர் தரும் நிலைவாழ்வை குறித்து எவரேனும் வினா எழுப்பினால், அவர்களுக்கு பணிவோடு நாம் விடையளிக்க வேண்டும். அப்போது, அதைப் பற்றி இழிவாக பேசியவர்கள் வெட்கப்படுவார்கள் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. தூய ஆவியை பொழிபவரே! உமது திரு அவையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் தாங்கள் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் கொடைகளுக்கும், கனிகளுக்கும் ஏற்றவாறு உமது பணி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அதிசயங்கள் புரிபவரே! நாட்டை ஆளும் தலைவர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மக்களை வழி நடத்தாமல், உமது விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிவோடும், மரியாதையோடும் மக்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆற்றல் அளிப்பவரே! திருவருட்சாதனங்கள் வழியாக நீர் தந்துள்ள தூய ஆவியானவர் எங்களுள் இருந்து செயலாற்றவும், அவர் வழியாக உண்மையை நாங்கள் பறைசாற்றவும், நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வளங்களைத் தருபவரே! நீரின்றி தவிக்கும் மக்களுக்கு, குறிப்பாக, விளைச்சலுக்காக காத்திருக்கும் விவசாய பெருமக்களுக்கு நீவீர் நல்ல மழையைத் தந்து, நல்ல விளைச்சலை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எந்நாளும் எங்களை காப்பவரே! எங்களுக்காக காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்பு படையினரை நீர் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் மென்மேலும் உழைக்கத் தேவையான ஆற்றலை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment