No icon

ஞாயிறு – 25.06.2023

பொதுக்காலம் 12 ஆம் ஞாயிறு எரே 20:10-13, உரோ 5:12-15, மத் 10:26-3

ஞாயிறு தோழன்

திருப்பலி முன்னுரை: இன்று நாம் பொதுக்காலத்தின் 12 ஆம்  ஞாயிற்றுக்கிழமை திருவழிபாடுகளைச் சிறப்பிக்கின்றோம். “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாதீர்கள்; மாறாக, நரகத்தில் ஆன்மாவையும் உடலையும் அழிக்கக்கூடியவருக்கே அஞ்சுங்கள்என்று இயேசு அறிவுறுத்துகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம், நம் கண் எதிரே நடக்கின்ற அக்கிரமங்களை, அநியாயங்களை, வன்முறைகளைக் கண்டும் காணாதவாறு நமது கண்களையும், காதுகளையும், இதயத்தையும் மூடியவர்களாக வாழ்கிறோம். காரணம், பயம் மற்றும் உயிர்மேல் ஆசை! ‘என் கண் முன்னே நடக்கின்ற அநியாயத்திற்கு எதிராகப் பேசினால், எனது உயிருக்கு பாதகம் வந்துவிடும்என்ற பயம். இதனாலேயே நாம் அநீதிகளுக்குத் துணை போகிற கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயேசு இவ்வாறு இருந்த தமது சீடர்களுக்கு இந்தச் செய்தியைத் தந்து திடப்படுத்துகிறார். “உங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக, அநீதி அக்கிரமங்களுக்குத் துணைபோய், உங்களது ஆன்மாவை அழுக்காக்கிக் கொள்ளாதீர் கள். உடலைப் பெரிதாக மதித்து, உங்கள் ஆன்மாவை களங்கப்படுத்தாதீர்கள். மாறாக, ஆன்மாவுக்காக எதையும் இழக்ககூடியவர்களாக இருங்கள்என்று சொல்கிறார். உயிருக்குப் பயந்து, கண்முன்னே நடக்கும் அநீதிகள், வன்முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பாத போதெல்லாம், மௌனமாக அவற்றை ஆதரிக்கிறோம் என்றே அர்த்தம். நம்மைப் படைத்த ஆண்டவரே நம்மைப் பாதுகாக்கிறார் என்ற எண்ணத்தோடுஆன்மாவுக்கு எதிராக எழும்பும் அநீதிகளை அகற்றி, ஆன்மாவைக் காத்திடும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:வாருங்கள், அவன்மீது குற்றம் சுமத்தி, நமது பழிகளைத் தீர்த்துக் கொள்ளலாம்என்று என் நண்பர்களே என்னை வீழ்த்தக் காத்திருக்கிறார்கள். படைகளின் ஆண்டவர் என்னைக் காக்கும்போது, எனக்கு என்ன கவலை?” என்று இறைவாக்கினர் எரேமியா பேசுவதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: ஒரு மனிதன் வழியாய் பாவம் இந்த உலகத்திற்கு வந்தது, சாவு அனைவரையும் கவ்விக்கொண்டது. அதுபோலவே கடவுள் தரும் அருள் கொடைகள் இயேசு வழியாக எல்லா மனிதருக்கும் மிகுதியாய் கிடைத்தது என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்:

1. எங்களை உருவாக்கியவரே! உமது திரு அவையை வழிநடத்தும் உம் திருப்பணியாளர்கள், தங்கள் உடலைக் காக்கும் பொருட்டு, உயிருக்குப் பயந்து, அநீதிக்குத் துணை போகாமல், உமது திரு மகனைப் பின்பற்றி, உமது மக்களை வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. என்றும் வாழ்பவரே! உமது மக்களை ஆள உமது பிரதிநிதிகளாக அரசர்களை ஏற்படுத்தினீர். இன்று உம் மக்களை வழிநடத்தும் தலைவர்கள், தங்கள் ஆன்மாவுக்குப் பயந்து, உண்மை வழியில் நல்லாட்சி புரிந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. மனத்திடனை அளிப்பவரே! உமது திருமகனைப்போல, நாங்களும் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் அநீதியை, அக்கிரமங்களை, வன்முறைகளை, ஒடுக்குமுறைகளை எதிர்த்து நிற்கும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்களைப் பராமரித்துப் பாதுகாப்பவரே! எங்கள் பிள்ளைகளை அநீதிக்கு எதிராக, அக்கிரமங்களுக்கு எதிராகக் குரலெழுப்பும் குணமுடையவர்களாக நாங்கள் வளர்த்திட இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

5. படைகளின் ஆண்டவரே! உண்மைக்காக, நீதிக்காக, சமத்துவத்தை உலகில் நிலைநாட்டுவதற்காக தங்கள் உயிரை இழந்த ஆன்மாக்களுக்கு நித்திய இளைப்பாற்றியையும், அவர்களின் குடும்பங்களுக்கு மன ஆறுதலையும் நீர் அளித்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

 

Comment


TOP