No icon

ஞாயிறு – 09.07.2023

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு செக் 9:9-10 உரோ 8:9,11-13 மத் 11:25-30

திருப்பலி முன்னுரை:

இன்று நாம் பொதுக்காலத்தின் 14 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அழைப்பு விடுக்கிறார். பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் வகுத்தளித்த கண்மூடித்தனமான சட்டத் திட்டங்களைப் பின்பற்ற முடியாமலும், அதற்கு எதிராகச் செயல்பட முடியாமலும், திக்கற்றவர்களாய், உள்ளம் குமுறியவர்களாய், ஒடுக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, பெருஞ்சுமையோடு வாழ்ந்திருந்த இஸ்ரயேல் மக்களைப் பார்த்தே ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார். இச்சட்டங்களையெல்லாம் ஒன்று விடாமல் கடைப்பிடித்தால் மட்டுமே நிலைவாழ்வு என்றிருந்த நிலையை, ஆண்டவர் இயேசு கிறிஸ்து மாற்றுகிறார். எனவேதான், “என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்என்று கூறுகிறார்.

பிறரை அடக்கி, அடிமைப்படுத்தி, பழிவாங்கத் தூண்டும் இச்சட்டங்களால் நிலை வாழ்வைப் பெறமுடியாது. மாறாக, அன்பு செய்தல், இரக்கம் காட்டுதல், எதிரியை மன்னித்தல் எனும் எளிய சட்டங்களைக் கடைப்பிடித்தாலே போதும், விண்ணரசில் இடம் பெறலாம்; நிலைவாழ்வை உரிமைச்சொத்தாக்கிக் கொள்ளலாம் என்ற மனத்திடனை ஆண்டவர் இயேசு மக்களுக்குத் தருகிறார். இன்று நம் ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதும் இதைத்தான். அன்பு செய்வோம், அரவணைப்போம், பிறரை மன்னித்து, நிலை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம் என்ற எண்ணத்தோடு இத்திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை:

இஸ்ரயேலை அமைதி வழியில் ஆள்பவர் அங்கிருந்தே வருவார். அவர் போர்க்கலங்களை எல்லாம் ஒடித்துவிடுவார், போர்ப் படைகளை ஒழித்துவிடுவார். ஏனெனில், அவர் அமைதியை விரும்புபவர் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த ஆவியே நம்முள்ளும் இருக்கிறது. எனவே, நாமும் கண்டிப்பாக உயிர்த்தெழுவோம். அதுவரை தூய ஆவியின் மக்களாய் வாழ்வோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்:

1. அமைதியை அருள்பவரே! உமது திருவுளத்தை நிறைவேற்றிய உம் திருமகனைப்போல, உமது திருஅவையை வழிநடத்தும் உமது திருப்பணியாளர்கள் தூய ஆவியின் துணைகொண்டு, உமது திருவுளத்தை அறிந்து பணிபுரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கத்தைப் பொழிபவரே! எமது நாட்டில் மதம், மொழி மற்றும் இனத்தின் பெயரால் தொடுக்கப்படும் வன்முறைகளுக்கு பாராபட்சம் பாராமல், தீர்வு வழங்கக்கூடிய நல்ல தலைவர்களை நீர் எங்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆறுதல் அளிப்பவரே! எங்கள் பங்கிலும், குடும்பங்களிலும் எங்களது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்பச் செயல்படாமல், பொதுநலனைக் கருத்தில் கொண்டு, நாங்கள் செயல்பட வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்மை நல்வழி நடத்துபவரே! பல்வேறு சுமைகளால் நலிந்து, முடங்கிக் கிடக்கும் குடும்பங்களையும், மக்களையும் ஆசீர்வதித்து, நல்லதோர் வாழ்வு வாழ்வதற்கான வழியை நீர் அவர்களுக்குக் காட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அரவணைத்து பாதுகாப்பவரே! எங்களையும், எம் நாட்டையும் பாதுகாக்க, தங்கள் குடும்பங்களைத் துறந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் எம் இராணுவ வீரர்களையும், காவல் வீரர்களையும் ஆசீர்வதித்து, வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment