No icon

ஞாயிறு – 30.07.2023

பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு (1அர 3: 5, 7-12, உரோ 8: 28-30, மத் 13: 44-52)

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 17 வது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். ஆண்டவரை உரிமை சொத்தாக்கிக்கொள்ள, அவரது அரசில் பங்குகொள்ள எதையும் இழப்பதற்கு நாம் தயாராய் இருக்க வேண்டுமென ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று நமக்கு அறிவுறுத்துகிறார். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று மொழிந்த இறைவனிடம், பொன்னையோ பொருளையோ கேட்காமல், நீதியை வழங்கும் ஞானத்தை கேட்ட அரசன் சாலமோனை குறித்து ஆண்டவர் பெருமகிழ்வு கொள்கிறார். இன்று நம்மையும் பார்த்து இதே வினாவை எழுப்புகிறார். நாம் அவரிடம் கேட்க போவதென்ன? இன்றைய நற்செய்தியில், நிலத்தில் புதையல் இருப்பதை கண்ட ஒருவர் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் விற்று அந்த நிலத்தை உரிமையாக்கிக் கொள்கிறார். அதே போல விலை உயர்ந்த ஒரு முத்தை கண்ட ஒருவர் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து அந்த ஒரே ஒரு முத்தை பெற்றுக் கொள்கிறார். இதன் வழியாக ஆண்டவர் இயேசு நமக்கு சொல்ல வருவது என்ன? ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவர் இயேசுவை, அவர் தருகிற நிலைவாழ்வை பெற்றிட நம்மிடமிருக்கும் எதையும், ஏன் நம்மையும் கூட இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதையே ஆண்டவர் இயேசு இன்று வலியுறுத்துகிறார். நற்செய்தியின் பொருட்டு, ஆண்டவர் இயேசுவின் பொருட்டு அனைத்தையும் குப்பையெனக் கருதுகிறேன் என்ற மனநிலையோடு நற்செய்தி அறிவித்த பவுலடியாரைப் போல, நாமும் ஆண்டவருக்காக இறையாட்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்யக்கூடிய கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட இத்திருப்பலியில் இறையருளை மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரிடம் நாம் கேட்கும் வரங்கள் தகுந்ததாய் இருக்கும் போது ஆண்டவர் நாம் கேட்பதற்கு மேலேயும் கொடுப்பார். ஞானத்தை கேட்ட சாலமோனுக்கு, வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை தருகிறார் என்று கூறும் இம்முதல் வாசகத்தை கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தம்மை அன்பு செய்பவர்களை, தமது திட்டத்திற்கு ஏற்ப நடப்பவர்களை ஆண்டவர் தேர்ந்தெடுத்து தமக்கு ஏற்புடையவராக்கி, தமது ஆட்சியில் பங்குபெறச் செய்வார் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தை கேட்போம்.

மன்றாட்டுகள்

கண்மணி போல் எங்களை காப்பவரே! உமது திருஅவையின் திருப்பணியாளர்கள், உமது மந்தைகளை, உமது திருமகன் வழி நின்று உமது அரசை நோக்கி வழி நடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அரசருக்கெல்லாம் அரசரே! எம் நாட்டை ஆளும் தலைவர்களுக்கு நீதியின்படி, நேர்மையின்படி, உண்மையின்படி ஆட்சி செலுத்துவதற்கு தேவையான ஞானத்தை நீர் நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் பரம்பொருளே! எங்கள் பங்கையும், பங்கு தந்தையையும், பங்கு மக்களையும் நிறைவாக ஆசீர்வதியும். எம் பங்கின் நலனுக்காக அவர் எடுக்கிற முயற்சிகளில், நாங்கள் உடன் நின்று செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எந்நாளும் எங்களை ஆசீர்வதிப்பவரே! மாதத்தின் இறுதியிலே இருக்கிற நாங்கள் நீர் செய்த அனைத்திற்கும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அதே வேளையில் பிறக்கப் போகிற புதிய மாதத்தில் உமது அற்புத கரம் எங்களை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் வானகத் தந்தையே! எங்களோடு இருக்கும் பெரியோர்களுக்காக, முதியவர்களுக்காக, ஞானம் மேய்ப்பர்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இவர்களின் சொற்படி நடந்து நல்லதோர் வாழ்வை நாங்கள் அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment