
பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு (03-09-2023)
எரே 20: 7-9; உரோ 12: 1-2; மத் 16: 21-27
திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 22வது ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம் அனைவரையும் கடவுளுக்கு ஏற்றவை பற்றிச் சிந்திக்கவும், அவருக்கு ஏற்றவாறு வாழவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவர் இயேசு சிலுவை சுமந்து, பாடுகள் பட்டு, சிலுவை மரணத்தின் மூலம் இவ்வுலகிற்கு மீட்பளிக்க வேண்டும் என்பது இறைத் திட்டம். இதை நாம் ‘நம்பிக்கையின் மறைபொருள்’ என்று அழைக்கின்றோம். இந்த மறைபொருளைப் பற்றி ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தம் சீடர்களுக்கு எடுத்துரைத்தபோது, பேதுரு இவ்வாறு நடக்கக்கூடாது என்று ஆண்டவர் இயேசுவைக் கடிந்து கொள்கிறார். அப்பொழுது ஆண்டவர் இயேசு பேதுருவைப் பார்த்து, ‘நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய்’ என்று கூறுகிறார். பேதுருவும், இவ்வுலகமும் மீட்படைய வேண்டும் எனும் இறைத்திட்டத்திற்கு, பேதுரு ஒரு தடைக்கல்லாக இருக்கிறார் என்பதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து இங்கே எடுத்துரைக்கிறார். நாம் எப்போதெல்லாம் ஆண்டவருக்கு ஏற்றவை பற்றிச் சிந்திக்கவில்லையோ அல்லது ஆண்டவருக்கு ஏற்றவாறு நமது வாழ்வை அமைக்கவில்லையோ அப்போதெல்லாம் இறைத்திட்டத்திற்கு நாம் ஒரு தடைக்கல்லாகவே இருக்கின்றோம் என்பதை உணர்ந்தவர்களாய் இத்திருப்பலியில் இறையருளை வேண்டி பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசக முன்னுரை
இறைவனின் திட்டத்தைச் செயல்படுத்துவதால், தனக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றி இறைவாக்கினர் எரேமியா கூறுகிறார். அதே நேரத்தில், ஆண்டவரின் வார்த்தை இன்னல்களையும் கடந்து பணி செய்ய அழைக்கிறது என்று கூறும் முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இயத உலகத்தின் போக்கின்படி வாழாமல், ஆண்டவரின் திருவுளம் என்னவென்று அறிந்து, அதன்படி வாழ்கின்றபோது, கடவுளுக்கு உகந்த பலிபொருளாக நாம் மாறுகிறோம் என்றுரைக்கும் இரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
எங்கள் அன்புத் தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உமது விருப்பத்தின்படி உமது மந்தைகளை வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் வானகத் தயதையே! தங்கள் விருப்பப்படி அல்ல; உமது விருப்பப்படியும், மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறும் நாட்டை ஆளும் தலைவர்கள் செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் பரம்பொருளே! எங்கள் பங்கையும், பங்குத் தந்தையையும், எங்களையும் நிறைவாக ஆசீர்வதியும். எங்களது பங்கின் முன்னேற்றத்திற்காக எமது பங்குத்தந்தை எடுக்கின்ற எல்லா முயற்சிகளிலும் நாங்கள் உடனிருந்து உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் அருமை நேசரே! இப்புதிய மாதத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இம்மாதத்திலே எங்களது அனைத்துச் செயல்களையும், முயற்சிகளையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்களை நல்வழிப்படுத்துபவரே! எம் பங்கிலும், இல்லங்களிலும் இருக்கும் எம் இளையோர்கள், உமது விருப்பத்தின்படி வாழ்ந்து, தங்கள் ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment