No icon

பொதுக்காலம்  28 ஆம் ஞாயிறு   (15-10-2023)

எசா 25:6-10; பிலி 4:12-14,19-20; மத் 22:1-14

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின்  28 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். தந்தை கடவுளின் இறையாட்சி விருந்திலே பங்கு பெற்றிட நாம் தகுதியுள்ளவர்களாக மாற வேண்டுமென்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உவமை வாயிலாக நமக்கு விளக்குகிறார். இஸ்ரயேல் மக்கள் வழக்கப்படி அரசரின் விருந்தில் பங்குகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறபோது, அரசர் தரும் ஆடையை உடுத்திக்கொண்டுதான் விருந்தில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு ஆடையை உடுத்திக்கொண்டு விருந்தில் பங்கேற்கும்போது, விருந்தாளிகள் அரசரைத் தமது அரசராக ஏற்று, அவருக்கு மதிப்பளிக்கிறார்கள் என்று அர்த்தம். இன்று நம் ஆண்டவர் இயேசு கூறும் உவமையிலே, அரசரின் விருந்தில் பங்கு கொள்ள அழைக்கப்பட்டவர்கள் வராத நேரத்திலே வீதிகளில் இருக்கும் நல்லோர்-தீயோர் என அனைவரும் அழைக்கப்படுகின்றனர். இந்த நல்லோர்-தீயோரில், திருமண ஆடை அணியாத ஒருவர், அதாவது அரசரை அரசராக ஏற்றுக் கொள்ளாத ஒருவர் புறம்பே தள்ளப்படுகிறார். இன்று நாம் கிறிஸ்து என்ற ஆடையைப் பெற்றிருக்கிறோம். எனவேதான் நாம்கிறிஸ்தவர்கள்என்று அழைக்கப்படுகிறோம். இவ்வாறு கிறிஸ்துவை ஆடையாகக் கொண்டிருக்கிற நாம், அவருக்குரிய மனநிலையைப் பெற்றிருக்கின்றோமா? அவரோடு இறையாட்சி விருந்தில் இணைவதற்கேற்றவாறு நம் செயல்கள் இருக்கின்றனவா என்று சிந்தித்தவர்களாய் இந்த ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்களை மட்டுமல்ல, பிற இனத்து மக்களின் துன்பங்களையும் துடைத்து, அவர்களையும் தம் திருமலைக்கு ஆண்டவர் கூட்டி வருவார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

வறுமையோ-வளமையோ, நிறையோ- குறையோ, விருந்தோ-பட்டினியோ... ஆண்டவரின் துணை இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் வாழ்ந்து விடலாம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

* இரக்கமுள்ள தந்தையே! உம் திருமகனின் உடலான திரு அவையை வழிநடத்தத் தெரிந்து கொள்ளப்பட்ட உம் திருப்பணியாளர்கள், உம் மந்தையை நெறி தவறாது வழிநடத்தி, உமது இறையரசில் சேர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* தூய ஆவியைப் பொழிபவரே! கடுமையான வரிகளை மக்கள்மீது சுமத்துவதை விடுத்து, உமது ஆவியாரின் துணை கொண்டு, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆட்சியை நாட்டுத் தலைவர்கள் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* அற்புதங்கள் புரிபவரே! எங்கள் பங்குத் தந்தையையும், எங்களையும் நிறைவாக ஆசீர்வதியும். எம் பங்கின் முன்னேற்றத்திற்காக அவர் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியிலும், நாங்கள் அவருக்கு உறுதுணையாய் இருந்து செயல்பட வேண்டுமென்று இறைவா, உம்மை  மன்றாடுகிறோம்.

* பரிவுள்ள தந்தையே! திருமணத்திற்காக, குழந்தைப் பேற்றிற்காகக் காத்திருக்கும் ஒவ்வோர் உள்ளங்களையும் நீர் ஆசீர்வதியும். அவர்களது குறைகளைப் போக்கி, நிறைவான மகிழ்வை நீர் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment