No icon

22, அக்டோபர் 2023

பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறு (எசா 45: 1, 4-6, 1தெச 1: 1-5, மத் 22: 15-21)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 29 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘அவரவருக்குரியதை அவரவருக்குக் கொடுங்கள்எனும் நேரிய கருத்தை ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று நமக்கு எடுத்துரைக்கிறார். உரோமையர்கள் தங்கள் நாட்டு அரசரான சீசரை, கடவுளாக வழிபடுவது வழக்கம். அவ்வாறே தங்களுக்கு அடிமையாக இருக்கும் மக்களும் சீசரைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் நடைமுறையும் இருந்தது. ஆனால், யூதர்கள் இக்கருத்தை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உரோமையர்களுக்கு வரி செலுத்துவதையும் விரும்பவில்லை. எனவேதான் வரி தண்டுபவர்களை அவர்கள் வெறுத்தார்கள். இந்நிலையில் தான் பரிசேயர்கள், தங்கள் சீடரை ஏரோதியருடன் ஆண்டவர் இயேசுவிடம் அனுப்பி, “சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?” என்று கேட்கிறார்கள். அதாவது சீசருக்கு வரி செலுத்துவது சரி என்றால், ஆண்டவர் இயேசு யூதர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்றவொரு வெறுப்பு பிம்பத்தை மக்களிடையே உருவாக்க முடியும். அதே நேரத்தில் சீசருக்கு வரி செலுத்துவது தவறு என்றால் ஏரோதியர் ஆண்டவர் இயேசுவைக் கைது செய்யக்கூடும். ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிக அற்புதமாக இவர்களைக் கையாளுகிறார். சீசர் என்பவன் வெறும் மனிதன். எனவே மனிதனுக்குரியதை மனிதனுக்கும், கடவுளுக்குரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்று சொல்கிறார். இன்று நாம் நமது வாழ்விலே கடவுளுக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கின்றோம் என்பதை நினைத்து உள்ளம் வருந்தி, மனம் மாறிட இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

தந்தை கடவுளே நமது கடவுள்; அவரைத் தவிர வேறு கடவுள் நமக்கு இல்லை. அவரே அரசர்களைத் திருப்பொழிவு செய்பவர்; அவரே உலகை ஆள்பவர் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

செயலில் நம்பிக்கை வெளிப்படுகிறபோது, உழைப்பில் அன்பு தென்படுகிறபோது, தூய ஆவி தரும் நற்செய்தி நம்மைத் தேடி வரும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

* எங்களை வழிநடத்துபவரே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள், தூய ஆவியின் துணையால் திரு அவையில் உள்ள பரிசேயக் கூட்டங்களை இனம் கண்டு, அவற்றைச் சரியான பாதையில் வழிநடத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* படைத்துக் காத்து வழிநடத்துபவரே! நாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக இயற்கை வளங்களை அழிவுக்கு உட்படுத்தாமல், அவற்றைப் பாதுகாப்பவர்களாக மாறிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* அருமை நேசரே!  நீர் ஒருவர் மட்டுமே உண்மை யான கடவுள்; உம்மையன்றி வேறு கடவுள் இல்லை என்பதை எங்கள் மனதில் நிறுத்தி, உம்மை மட்டுமே ஆராதித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* கருணையுள்ளம் கொண்டவரே! அனாதை இல்லங்களில், முதியோர் இல்லங்களில் அன்புக்காக, அரவணைப்புக்காக ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு நீரே அரணும், கோட்டையுமாய் இருந்து பாதுகாத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment