No icon

மறைத்தூது ஞாயிறு

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்று நாம் மறைத்தூது ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். லூக்கா நற்செய்தியில் இடம் பெறும் எம்மாவு நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டுபற்றியெரியும் உள்ளங்கள் பயணப்படும் பாதங்கள்எனும் கருப்பொருளை மையமாக வைத்து இந்நாளுக்கான திருவழிபாட்டைச் சிறப்பிக்க திருத்தந்தை நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

இயேசுவுடன் பயணித்த சீடர்கள் மனக்குழப்பத்திலும், கலக்கத்திலும் இருந்தார்கள். இருப்பினும், இயேசுவின் வார்த்தையைக் கேட்ட போதும், அவர் அப்பம் பிட்ட போதும் இயேசுவைக் கண்டுகொண்டு, உடனே எருசலேமுக்குச் சென்றுஇயேசு உண்மையாகவே உயிர்த்துவிட்டார்என்ற செய்தியை அடுத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் அறிவித்தனர். அதே உன்னத அழைப்பை நமது திருமுழுக்கின் மூலம் நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ளோம். திருமுழுக்குப் பெற்றுள்ள நாம் ஒவ்வொருவருமே இந்த உலகிற்கு இயேசுவின் அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள். நமது குடும்பங்களில், உறவுகளில், பங்குகளில், அன்பியங்களில், சமுதாயத்தில் பணிபுரியும் இடங்களில் இயேசுவின் அன்பை நமது வாழ்வாலும், செயல்களாலும் அறிவிக்கவே இந்த உலகிற்கு அனுப்பப்பட்டுள்ளோம். சிறப்பாக, இன்று மறைத்தூது பணியில் இணைந்து ஈடுபாட்டுடன் உழைக்கக்கூடிய ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுவோம். எல்லா மக்களும் இறைவனின் அன்பால், அருளால், மன்னிப்பால் தொடப்படவும், நற்செய்தி அறிவிப்பவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கக்கூடிய தடைகள், துன்பங்கள், சவால்கள் மத்தியில் தணிந்துபோன அவர்களது இதயங்களும், கண்களும், இறைவார்த்தையாலும் நற்கருணை விருந்தினாலும் திறக்கப்படவும், அனைவரும் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு, நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆர்வத்துடன் செயல்பட இத்திருப்பலியில் அருள் வேண்டி மன்றாடுவோம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டு

1. அன்பே உருவான இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை ஏனைய திரு அவை தலைவர்களுக்கும் நற்செய்தி அறிவிப்பின் ஞானம், வல்லமை, ஆற் றலைத் தந்து, இவர்களின் உள்ளங்கள் உமது வல்லமையின் ஆற்றலால் பற்றியெரியவும், இவர்களின் தலைமைத்துவ பண்பு அனைவருக்கும் உற்சாகத்தையும், உந்துதலையும் தந்து, நற்செய்தி அறிவிப்பின் சாட்சிகளாக இவர்கள் அனைவரும் செயல்படவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கத்தின் ஊற்றே இறைவா! எம் நாட்டுத் தலைவர்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் ஞானத்தால் வழிநடத்தப்பட்டு நீதி, உண்மை, அமைதியின் வழியில் அனைத்து மக்களின் நல் வாழ்வுக்காக உழைக்கவும், மனித நேயத்தையும், மனித மாண்புகளையும் தங்களது உரையாடல்கள் மற்றும் பணிகள் மூலம் சமுதாயத்தில் உருவாக்கவும், புரிந்துணர்வுகளிலும், ஒற்றுமையின் வழியிலும் செயல்பட அருள்தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நன்மையின் நாயகனே இறைவா! உமது அழைப்பின் குரலைக் கேட்டு, நற்செய்தியின் தூதுவர்களாகச் செயல்படும் அனைவருக்கும் உமது ஆசிகளை நிறைவாக வழங்கியருளும். இவர்களின் உள்ளமும், எண்ணமும் நற்செய்தியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, உமது அன்பின் செய்தியை அனைவருக்கும் அறிவிக்கக்கூடிய மன வலிமையை இவர்களுக்குத் தந்தருள, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் ஆண்டவரே! உமது அன்பின் வல்லமையை உணராமல் வாழ்ந்து வரும் அனைவரின் உள்ளங்களிலும் நம்பிக்கை உணர்வைத் தூண்டியெழுப்பவும், தூய ஆவியாரின் வல்லமையால் வழி நடத்தப்பட்டு அவர்களின் உள்ளமும், எண்ணமும் உண்மையான இறைவல்லமையை உணரவும், வாழ்வின் அர்த்தத்தைத் தேடி அலையும் அனைவரும் அதைக் கண்டு மகிழும் அருள்தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்பு ஆண்டவரே! எங்கள் ஒவ்வொருவரின் உள்ளங்களும் உமது அன்புத் தீயால் பற்றியெரியவும், உமது அன்பின், இரக்கத்தின், மன்னிப்பின் சாட்சிகளாக எங்களது வாழ்வும், செயல்களும் அமைய அருள்தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment