No icon

ஞாயிறு – 12.11.2023

பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு (சாஞா 6:12-16; 1தெச 4:13-18; மத் 25:1-13)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 32-வது ஞாயிறு திருவழிபாட்டினைச் சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பத்துத் தோழியர் உவமையின் வாயிலாக நம் அனைவரையும் ஆயத்தமாய் இருக்க, விழிப்பாய் இருக்க அழைப்பு விடுக்கிறார். இந்தப் பத்துத் தோழியருள் ஐவரை ‘அறிவாளிகள்’ என்றும், மற்றுமுள்ள ஐவரை ‘அறிவிலிகள்’ என்றும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார். பத்துப் பேர்களுமே மணமகனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மணமகன் வரத் தாமதமாகிறது. அந்நேரத்தில் பத்துப் பேர்களுமே உறங்குகிறார்கள். எனவே, எதனடிப்படையில் இவர்கள் அறிவாளிகள் மற்றும், அறிவிலிகள் எனப் பிரிக்கப்படுகிறார்கள் என்றால், இவர்களின் தயாரிப்பு மற்றும் ஆயத்த நிலைகளின் அடிப்படையிலேயே இவ்வாறு பிரிக்கப்படுகிறார்கள். அறிவாளிகளிடம் எண்ணெய் உள்ளது; ஆனால், அறிவிலிகளிடமோ எண்ணெய் இல்லை. இங்கு எண்ணெய்தான் மாபெரும் வேறுபாட்டை, ஒரு மாற்றத்தை உண்டு பண்ணுகிறது என்றால், இந்த எண்ணெய் எதைக் குறிக்கிறது? இந்த எண்ணெய்தான் ஆண்டவரைச் சந்திப்பதற்கான நமது ஆயத்த நிலை; நமது தயாரிப்பு நிலை. எத்தருணத்திலும் ஆண்டவரைச் சந்திக்க நேர்ந்தாலும், உள்ளம் கலங்காமல், மனம் வருந்தாமல் அவரை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? என்று சிந்தித்தவர்களாய் இந்த ஞாயிறு கடன் திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

மங்காத ஒளியைக் கொண்டுள்ள ஞானத்தை யார் தேடுகிறார்களோ, அவர்கள் தகுதி உடையவர்கள் என்றால், அவர்களைத் தேடி ஞானமே வந்து சேர்கிறது என்று கூறும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசு இறந்து, உயிர்த்தெழுந்தார் எனும் மறைபொருளை  நம்புகிறபோது, நமக்கு முன்பாக இறந்தவரோடு நாமும் வான்வெளியில் ஆண்டவரைச் சந்திப்போம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

* அன்புத் தந்தையே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள் தங்களுக்குப் பணிக்கப்பட்டிருக்கிற இறைப்பணிக்கு ஏற்ப, உமது மக்களை நீர் சந்திப்பதற்கு ஆயத்தப்படுத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

* ஞானத்தின் இருப்பிடமே! எங்களை ஒழுங்குபடுத்த நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டுத் தலைவர்கள், உமது ஞானத்தை வரமாய்ப் பெற்று நல்லாட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

* இரக்கமுள்ள தந்தையே! உமது உடலையும், வார்த்தைகளையும் அன்றாடம் சுவைக்க வரம் பெற்றிருக்கிற நாங்கள், உம்மைப் பெறுவதற்கு, உம்மைச் சந்திப்பதற்குத் தகுதியுள்ளவர்களாக மாறிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

* ஆன்ம அமைதியை அருள்பவரே! எம் நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கிற தியாகிகள், இராணுவ வீரர்கள், காவல்வீரர்கள், சமூகப் போராளிகளின் ஆன்மாக்களுக்கு நீர்  முடிவில்லா வாழ்வளித்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment