No icon

ஞாயிறு – 19.11.2023

பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு (நீமொ 31:10-13, 19-20,30-31, 1தெச 5: 1-6, மத் 25: 14-30)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 33-ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘சோம்பேறிகளாக, பயனற்றப் பணியாளர்களாக இருந்தீர்கள் என்றால், நீங்கள் இருளில் தள்ளப்படுவீர்கள்என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை எச்சரிக்கிறார். நம் ஆண்டவர், நம் ஒவ்வொருவரின் திறமைக்கு ஏற்றவாறு கடமைகளையும், பொறுப்புகளையும் அளித்துள்ளார். நமக்கு அளிக்கப்பட்டிருக்கிற அந்தக் கடமைகளையும், பொறுப்புகளையும் சரிவரச் செய்ய வேண்டியது முதன்மையான ஒன்றாகும். நாம் சோம்பித் திரிந்து, அவற்றைச் சரிவரச் செய்யாத போது, அவை நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு, சரியாகச் செயல்படுபவரிடம் கொடுக்கப்படும் என்பதைத்தான் இன்றைய நற்செய்தியில் நமக்கு உணர்த்துகிறார். படை வீரர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட்டு, அவர்களோடு சென்று போரில் ஈடுபடாமல், மது அருந்தி மாலை நேரத்திலே மாடியிலே சோம்பித் திரிந்த அரசர் தாவீது, பாவத்தில் விழுந்ததால் ஆண்டவருக்கு ஆலயம் கட்டும் வாய்ப்பை இழந்து போகிறார். அந்த வாய்ப்பு அவரது மகனுக்கு அளிக்கப்படுகிறது. அதுபோல இறைவன் நமக்குத் தந்திருக்கும் கடமைகளையும், பொறுப்புகளையும், திறமைகளையும் கொண்டு நமக்குரிய கிறிஸ்தவ மற்றும் சமூகப் பணிகளைச் சரிவரச் செய்யாதபோது, இறைவன் நம்மைச் சோம்பேறிகளாக, பயனற்றப் பணியாளர்களாகக் கருதி, நமக்குரியதை வேறொருவருக்கு அளித்திடுவார் என்பதை உணர்ந்தவர்களாய் இந்தத் தெய்வீகத் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை

திறமையுள்ள, நல்மனம் கொண்ட, ஞானம் மிகுந்த மனைவியானவள் பவளத்தை விட பெருமை வாய்ந்தவள். அவளால் நாட்டில் நலமும், வளமும் பெருகும் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் எப்போது வருவார்?’ என்று எவருக்கும் திண்ணமாய் தெரியாது. ஆகவே, இருளைச் சார்ந்தவர்களாக அல்ல; ஒளியைச் சார்ந்த மக்களாக நடந்து கொள்வோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

* அருள்கொடைகளை வழங்குபவரே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறைமக்களுக்குப் பொறுப்புள்ள ஆயர்களாக இருந்து, அவர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

* நம்பிக்கையை ஆழப்படுத்துபவரே! எங்கள் நாட்டுத் தலைவர்கள் மீது நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மெய்ப்படவும், தங்களின் ஆணவத்தினால் அன்று; உமது ஞானத்தினால் நல்லாட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

* நல்வழி நடத்துபவரே! நீர் எங்களுக்குத் தந்துள்ள கடமைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து இந்நாட்டிற்கும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்திற்கும் கிறிஸ்தவர்களாகச் செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

* முடிவில்லா வாழ்வைத் தருபவரே! மருத்துவமனைகளில், சிறைச்சாலைகளில், சாலை விபத்துகளில் இறந்து போனவர்களின் ஆன்மாக்களை நீர் உமதரசில் ஏற்று நிலைவாழ்வை அளித்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment