
திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (10-12-2023)
(இரண்டாம் ஆண்டு) எசா 40:1-5; 9-11; 2பேது 3:8-14; மாற் 1:1-8
திருப்பலி முன்னுரை
இன்று நாம் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் அமைதியின் அரசராம் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக வழிகளை ஆயத்தப்படுத்தவும், மேலும் பொறுமையோடு காத்திருக்கவும் அழைப்பு விடுக்கிறார். இறைவாக்கினர் மலாக்கி அவர்களுக்குப் பிறகு ஏறக்குறைய 450 ஆண்டுகளுக்கு இறைவாக்கினர்களோ, இறைவாக்குகளோ இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திருமுழுக்கு யோவான் இறைவாக்குரைக்க வருகிறார். இறைவாக்குகளுக்காக, இறைவாக்கினர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த மக்கள், திருமுழுக்கு யோவான்தான் வாக்களிக்கப்பட்ட மெசியா என்று எண்ணி அவரைப் பின்தொடர்கிறார்கள். அப்போது திருமுழுக்கு யோவான், ‘தூய ஆவியால் திருமுழுக்கு வழங்கும் ஒருவர் எனக்கு பின் வருகிறார். அவர்தான் மெசியா! அவருக்காக வழிகளை ஆயத்தம் செய்து பொறுமையாகக் காத்திருங்கள்’ என்று கூறி அம்மக்களை ஆண்டவர் பக்கம் திருப்பி விடுகிறார். இன்று நமது உள்ளங்கள் செம்மைப்படுத்தப்பட்டிருக்கின்றனவா? யார் பக்கம் திரும்பி இருக்கின்றது? இறை வார்த்தையாக, திருவுடலாக நம்முள் அனுதினமும் வரும் இயேசுவுக்காக நமது உள்ளங்களைச் செம்மைப்படுத்தி, அவரது இரண்டாம் வருகையில் நிலை வாழ்வைப் பரிசாகப் பெற்றிடும் வரத்தை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
‘இஸ்ரயேலே, உன் பாவங்களை உன் ஆண்டவர் மன்னித்துவிட்டார். எனவே, கலங்காதே; அக்களித்து அகமகிழ்! ஆண்டவர் உன்னை உயர்த்திப் பிடிக்கப் போகிறார்’ என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
‘வருவேன்’ என்று சொன்ன ஆண்டவர், இன்னும் வரவில்லை. எனவே, அவர் காலம் தாழ்த்துகிறார் என்று எண்ண வேண்டாம். நாம் அனைவரும் மீட்புப் பெறவேண்டும் என்பதற்காகவே அவர் பொறுமையோடு காத்திருக்கிறார் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அனைத்துலகோரின் தந்தையே இறைவா! இவ்வுலகையும், உம் மக்களையும் ஆயத்தப்படுத்த நீர் தேர்ந்து கொண்டிருக்கும் உம் திரு அவையின் திருப்பணியாளர்கள், திருமுழுக்கு யோவானைப்போல இவ்வுலகைச் செம்மைப்படுத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
2. படைப்பின் பரம்பொருளே இறைவா! வளர்ந்த நாடுகள், வளரும் மற்றும் வளர்ச்சியற்ற நாடுகளின் வளங்களைச் சுரண்டி வியாபாரம் செய்வதை விடுத்து, அனைத்தும் அனைவருக்கும் சமம் என்ற மனநிலையோடு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
3. தூய ஆவியைப் பொழிபவரே! திருவருகைக் காலத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நாங்கள், அனுதினமும் உமது திருமகனின் வருகைக்காக எங்கள் இதயங்களை ஆயத்தப்படுத்தி, அவரது இரண்டாம் வருகையின்போது நிலைவாழ்வைப் பரிசாகப் பெற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கமுள்ள தந்தையே! உன் திருமகனின் பிறப்பு பெருவிழாவிற்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அன்பிற்காக, ஆறுதல் மொழிக்காக ஏங்கி தவிக்கும் உள்ளங்களுக்கு உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment