No icon

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு (21-01-2024)

யோனா 3: 1-5, 10, 1கொரி 7: 29-31, மாற்கு 1: 14-20

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாற்றுவேன்என்று கூறி, ஆண்டவர் இயேசு கிறிஸ்து தமது முதல் திருத்தூதர்களை அழைப்பதை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம். ‘மனிதர்களைப் பிடிப்பதற்காக அழைக்கப்பட்ட திருத்தூதர்கள் மனிதர்களைப் பிடித்தார்களா?’ என்ற கேள்வி எழலாம். ஏனெனில், ஆண்டவர் இயேசுவின் இறப்புக்குப் பிறகுஎன்ன செய்வது?’ என்று தெரியாமல், மனிதர்களைப் பிடிப்பதற்காக அழைக்கப்பட்ட திருத்தூதர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றார்கள். அப்படியிருக்க தாங்கள் பெற்ற அழைப்பிற்கு இவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தார்களா? என்றால், கண்டிப்பாக இருந்தார்கள்! எப்போது உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தார்களோ அப்போது தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பின் மகத்துவத்தை உணர்ந்தார்கள். தங்கள் சொல்லால், செயலால், வாழ்வால், இறப்பால் எண்ணற்ற மக்களை ஆண்டவர் இயேசுவின் பக்கம் அழைத்து வந்தார்கள். தாங்கள் பெற்ற அழைப்புக்குத் தகுதியானார்கள். இன்று ஆண்டவர் இயேசுவின் சகோதர சகோதரிகளாக, கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம், ஆண்டவரின் அழைப்புக்கு ஏற்ற தகுதியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று சிந்தித்தவர்களாய் இந்த ஞாயிறு கடன் திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

பாவத்தில் வாழ்ந்த நினிவே நகர் மக்கள், ஆண்டவரின் அழைப்பை ஏற்று மனம் திருந்தி வாழ்ந்தபோது, ஆண்டவர் அவர்களை மன்னித்து மறுவாழ்வளித்தார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

காலம் மிகக் குறுகியது; ஆண்டவர் வரும் நேரம் நமக்குத் தெரியாது. எனவே, அவர் தந்திருக்கிற அழைப்புக்கு ஏற்ற வாழ்வை வாழ்ந்திட வேண்டும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

எம் பெயரைச் சொல்லி அழைப்பவரே! உம்மால் அழைக்கப்பட்டிருக்கும் உமது திரு அவையின் திருப்பணியாளர்கள் தங்களுடைய அழைப்பின் ஆழத்தை அறிந்து, அதற்கேற்ற பலனை இறை மக்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அனுதினமும் எம்மை ஆள்பவரே! நினிவே நகர் மக்களைப் போல பாவத்தில் விழுந்து கொண்டிருக்கும் இவ்வுலகம், உமது வார்த்தையைக் கேட்டு மனம் மாறிய அம்மக்களைப் போலவே மனம் மாறி வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அழைப்பின் ஆண்டவரே! உமது அழைப்பை ஏற்று குருவாக உருவாகி எங்களை வழிநடத்தும் பங்குத் தந்தையை நிறைவாக ஆசீர்வதியும். அவருடைய பணிகளால் உம்மை நீர் மகிமைப்படுத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

நல்வழி நடத்துபவரே! உமது அழைப்பை ஏற்று, உமது பணியைச் செய்திட ஆர்வமுள்ள இளை யோர்களின் உள்ளத்தில் தூய ஆவியார் தங்கி வழிநடத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment