No icon

பிரேசில் ஆயர்களால் நடத்தப்படும் சமூக வாரம்!

திருத்தந்தை பிரான்சிஸ்நாம் விரும்பும் பிரேசிலில் மக்களின் நல்வாழ்வுஎன்ற தலைப்பில் பிரேசில் ஆயர்களால் அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆறாவது சமூக வாரத்திற்குத் தன் வாழ்த்துகளை வெளியிட்டு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். பிரேசில் தலைநகர் பிரெசிலியாவில் மார்ச் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 6-வது சமூக வாரக் கூட்டமானது நடைபெற்றது. 1991-ஆம் ஆண்டு இந்தச் சமூக வாரத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தலத் திரு அவையானது ஏழை மக்களின் நிலம், உறைவிடம், வேலைவாய்ப்பு ஆகியவைகளுக்கான உரிமைகளுக்கு ஆதரவாகவும், ஏழை மக்களுக்கு எதிரான பாராமுகம், ஒதுக்கி வைக்கப்படுதல் போன்றவைகளுக்கு எதிராகவும், மக்களிடையே உழைக்கும் ஒரு திரு அவையாகச் செயல்பட்டு வருகிறது.

நாட்டிற்கான தீர்மானங்களை எடுப்பதில் மக்களின் பங்கேற்பை ஊக்குவித்தல், ஒருமைப்பாட்டு பொருளாதாரத்தைப் பரிந்துரைத்தல், ஜனநாயக மதிப்பீடுகளுக்குப் புத்துயிர் அளித்தல், சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவைகளுக்கு ஆயர்களின் இந்தச் சமூக வார நடவடிக்கைகள் உதவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என ஆவல் கொள்ளும் நிலம், வீடு மற்றும் வேலைவாய்ப்புக்காகக் குரல் கொடுத்து வரும் பிரேசில் ஆயர்களைத் திருத்தந்தை பாராட்டியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.      

Comment