Papal Visit
உருமேனியா திருத்தூதுப் பயணத்தின் விவரங்கள்
- Author Fr.Gnani Raj Lazar --
- Sunday, 31 Mar, 2019
உருமேனியா திருத்தூதுப் பயணத்தின் விவரங்கள்
மே 31ம் தேதி முதல், ஜூன் 2ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உருமேனியா நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் 30வது திருத்தூதுப் பயணத்தின் விவரங்களை, வத்திக்கான் செய்தித் துறை, வெளியிட்டது.
மே 31, வெள்ளிக்கிழமை, காலை 8.10 மணிக்கு, உரோம் பியூமிச்சீனோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, துவங்கும் திருத்தந்தையின் பயணம், பகல் 11.30 மணிக்கு, உருமேனியாவின் புக்காரெஸ்ட் பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடையும்.
அங்கு வழங்கப்படும் வரவேற்பைத் தொடர்ந்து, பிற்பகல் 1.00 மணிக்கு அரசு அதிகாரிகளுக்கு, திருத்தந்தை, தன் முதல் உரையை வழங்கியபின், பிற்பகல் 3.45 மணிக்கு, உருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, மற்றும், ஆயர் மாமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கிறார்.
இதைத் தொடர்ந்து, அந்நகரில் உள்ள புனித யோசேப்பு கத்தோலிக்கப் பேராலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியுடன், முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வரும்.
ஜூன் 1, சனிக்கிழமை காலை 10.10 மணிக்கு, பக்காயு விமான நிலையத்தைச் சென்றடையும் திருத்தந்தை, அங்கிருந்து ஹெலிகாப்டரில், சுமலேயு சியுக் எனுமிடத்தில் அமைந்துள்ள மரியன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்.
சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில், லாசி நகரில் உள்ள அன்னை மரியா பேராலயத்திற்குச் செல்லும் திருத்தந்தை, அந்தப் பேராலயத்தின் வளாகத்தில், இளையோரையும், குடும்பத்தினரையும் சந்தித்து உரையாற்றுவார்.
ஜூன் 2, ஞாயிறு காலை, 9.45 மணிக்கு பிளாய் நகருக்கு விமானம் வழியே சென்றடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரில் உள்ள சுதந்திரத் திடலில் நிறைவேற்றும் திருப்பலியில், மறைசாட்சிகளாக உயிர் துறந்த 7 கிரேக்க கத்தோலிக்க ஆயர்களை அருளாளர்களாக உயர்த்துவார்.
ஞாயிறு மாலை 5.30 மணியளவில் சிபியு பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உரோம் நகரை நோக்கி தன் பயணத்தை திருத்தந்தை மேற்கொள்வார்.
மார்ச் மாதம் 30, 31 ஆகிய இரு நாள்கள், மொராக்கோ நாட்டிற்கும், வருகிற மே மாத துவக்கத்தில் பல்கேரியா, மற்றும், வட மாசிடோனியா ஆகிய நாடுகளுக்கும் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாத இறுதியில் உருமேனியா நாட்டிற்குச் செல்வது, அவரின் முப்பதாவது திருத்தூதுப்பயணமாக அமைகின்றது.
Comment