வத்திக்கானின் உலக இளைஞர் ஆலோசனைக் குழுவில் இந்திய இளம்பெண்!
கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் ஃபிரேயா பிரான்சிஸ் அவர்கள் உலக இளைஞர் ஆலோசனைக் குழுவில் (The International Youth Advisory Body)) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹோமியோபதி மருத்துவரான ஃபிரேயா தற்போது கோயம்புத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். ஓர் இறைநம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்த இவர், ‘இயேசு-இளைஞர் இயக்கத்தில்’ (Jesus Youth Movement) தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தற்போது தமிழ்நாட்டில் மண்டலத் துணை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வரும் இவர், தான் தொடங்கிய ‘இறைவேண்டல்’ வாயிலாகத் தலைமைப் பொறுப்புகளில் உயர்ந்து, பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்ளத் திறமைகளை வளர்த்து கொண்டவர்.
வத்திக்கான் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த உலக இளைஞர் ஆலோசனைக் குழுவில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 20 இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் இளைஞர் பணி மற்றும் அது சார்ந்த திரு அவையில் இருக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவர்.
வத்திக்கானின் இந்த நியமனம் திரு அவையில் இளைஞர்களின் பங்கேற்பிற்கும் மற்றும் உலகக் கத்தோலிக்கக் கலந்துரையாடல்களில் வளர்ந்து வரும் இந்தியக் குரலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக அமைகிறது. இந்தியாவின் பிரதிநிதியாக இவர் மூன்று ஆண்டுகள் தனது பணிகளை மேற்கொள்வார்.
Comment