No icon

குடந்தை ஞானி

திருத்தந்தையின் நெருக்கம் ஆன்மாவை உற்சாகப்படுத்துகிறது

ஜனவரி 23 ஆம் தேதி, ஞாயிறன்று தனது நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் ஒருமுறை காட்டிய நெருக்கத்தால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர் என்று ஜனவரி 26 ஆம் தேதி, புதனன்று வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டி ஒன்றில், உக்ரைனுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் விஸ்வல்தாஸ் குல்போகஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்

உக்ரைன் நாட்டு மக்கள் மனங்களில் மிகப்பெரும் தலைவராக போற்றப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜனவரி 26 ஆம் தேதி, புதன்கிழமை, உக்ரைனின் அமைதிக்கான இறைவேண்டல் நாளாக முன்மொழிந்தது, இந்தத் துயரமான தருணத்தில் மக்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கின்றது என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பீடத் தூதராக பணியாற்றி வரும் இந்த 8 ஆண்டுகளில், போரினால் மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களையெல்லாம் தன்னால் நேரில் காண முடிகிறது என்றும், அதேநேரத்தில், தாய்நாட்டின் மீதான அவர்களின் அன்பையும், சிரமங்கள் மத்தியிலும் ஒருவருக்கொருவர் தொண்டாற்றுவதில் சிறந்த முடிவுகளை எடுப்பதையும் காண முடிகிறது என்றும் திருப்பீடத்தூதர் விஸ்வல்தாஸ் குல்போகஸ் கூறினார்.

கடந்த சில வாரங்களாக, உக்ரைன் நாட்டின் அமைதிக்கான இறைவேண்டல் இன்னும் அதிகமாகவும், வலுவாகவும் உள்ளது என்று கூறிய திருப்பீடத்தூதர்குறிப்பாக, ஜனவரி 26 ஆம் தேதி  புதன்கிழமை அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின் பேரிலும், அவருடனும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மனிதர்களாலும் இது சாத்தியமாயிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 23 ஆம் தேதி, ஞாயிறன்று தனது நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்களோடு தன் நெருக்கத்தை காட்டினார் என்பதும் உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் பதட்டங்கள் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comment