No icon

குடந்தை ஞானி

திருப்பீடத்தின் நிதிநிலை குறித்த வரவு செலவு திட்ட அறிக்கை

திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கான நிதிஉதவிகளைக் கட்டுப்படுத்திடாமல், அதேவேளை அதனை அதிகரித்துள்ள போதிலும், திருப்பீடத்தின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக திருப்பீடப் பொருளாதாரச் செயலகத்தின் தலைவர், அருள்பணி ஜுவான் அன்டோனியோ குரேரோ அலெக்ஸ் அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு வரவு செலவு பரிந்துரைத் திட்டம் குறித்து வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த அருள்பணி குரேரோ அலெக்ஸ் அவர்கள், 2021 ஆம் ஆண்டிற்கான நிதித் திட்டத்தில் 4 கோடியே 20 இலட்சம் டாலர்கள் நிதிப் பற்றாக்குறை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, இவ்வாண்டில் 3 கோடியே 30 இலட்சம் டாலர்களாகக் குறைந்துள்ளது எனவும் கூறினார்.

இவ்வாண்டின் வரவு செலவு திட்டத்தை ஆய்வு செய்த வத்திக்கானின் பொருளாதார அவை, செலவுகளைக் குறைக்கப் பரிந்துரைத்ததன்பேரில், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டின் நிதிப்பற்றாக்குறைக் குறைந்துள்ளதாக அருள்பணி குரேரோ அலெக்ஸ் தெரிவித்தார்.

செலவுகளைக் குறைப்பதால் மட்டும் பொருளாதார நிலைத்தத் தன்மையைக் கொணரமுடியாது என்ற கருத்தை முன்வைத்த அவர், பல்வேறு தரப்புகளிலிருந்து நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

திருத்தந்தையின் பிறரன்பு பணிகளுக்கான பீட்டர் பென்ஸ் என்ற நிதிக்கான 2021 ஆம் ஆண்டு பெறப்பட்ட நன்கொடைகள், அதற்கு முந்தைய ஆண்டைவிட 15 விழுக்காடு குறைவு எனவும், இதுகுறித்த முழு புள்ளிவிபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அருள்பணி குரேரோ அலெக்ஸ் கூறினார்.

Comment