No icon

குடந்தை ஞானி

பயணிக்கும் திருஅவையில், ஒன்றிப்பு, பங்கேற்பு, மற்றும் பணிவாழ்வு

அர்ப்பண வாழ்விற்குத் தங்களைக் கையளித்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் மகிழ்ச்சிநிறை விடாமுயற்சியில் வெளிப்படுத்தப்படும் கடவுளின் மெய்நிலை குறித்து, அர்ப்பணவாழ்வு தினத்திற்கான செய்தியில் கர்தினால் ஜோஓ பிரேஷ் டி அவிஷ் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி திருஅவையில் சிறப்பிக்கப்படும் 26வது உலக தினத்திற்கென செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள அர்ப்பண வாழ்வு நிறுவனங்களுக்கான திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ஜோஓ பிரேஷ் டி அவிஷ் அவர்கள், ’பயணிக்கும் திருஅவையில், ஒன்றிப்பு, பங்கேற்பு, மற்றும் பணிவாழ்வுஎன்ற மையக்கருத்துடன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.

ஒன்றிணைந்து பங்கேற்பது என்ற பாதையில் நாம் யாருக்கு செவிமடுக்கிறோம், எதற்காக செவிமடுக்கிறோம், என்ற கேள்விகளை நாம் கேட்டு, நம் பங்கேற்பு ஒரு பொறுப்புணர்வுடையதாக மாறுவதற்கு வழிவகுக்க வேண்டுமெனவும் கர்தினால் தன் செய்தியில் கேட்டுள்ளார்.

பங்கேற்பது என்பது, அர்ப்பண வாழ்வின் பாதையில் மற்றவர்களுக்குச் செவிமடுப்பதை உள்ளடக்குகிறது என்பதும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அர்ப்பண வாழ்விற்கான திருப்பீட அவையில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியில், கர்தினால் ஜோஓ பிரேஷ் டி அவிஷ் அவர்களுடன், அவ்வவைச் செயலர், பேராயர் ஜோஸ் ரோட்ரிக்ஸ் கார்பலோவும் கையெழுத்திட்டுள்ளார்.

உலக அர்ப்பண வாழ்வு தினத்தையொட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி, இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட தினமன்று, வத்திக்கான் புனித பேதுரு பெரும்கோவிலில் துறவறத்தார் உட்பட அர்ப்பண வாழ்விற்குத் தங்களை அர்ப்பணித்தவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றி அந்நாளைச் சிறப்பிப்பார்.

Comment