No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

இத்தாலிய அரசுத் தலைவருக்குத் திருத்தந்தைப் பாராட்டு

இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மேட்டரல்லா அவர்கள் மீண்டும் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, நாட்டின் ஒன்றிப்புக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது எனத் திருத்தந்தை பிரான்சிஸ் தன் பாராட்டுகளை வெளியிட்டுள்ளார்.

தன் பதவிக்காலம் முடிவுற்று விடைபெற்றுச் செல்லவிருந்த வேளையில், அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் விருப்பத்திற்குத் தலைவணங்கி, தாராள மனதுடன் அதனை அவர் ஏற்றுக்கொண்டதிற்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகத்  திருத்தந்தை தன் தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.

மக்கள், குறிப்பாக தொழில் உலகம் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு துயர நிலைகளையும், நிச்சயமற்ற நிலைகளையும், அனுபவிப்பதுடன், ஏழ்மையும் அச்சமும் அதிகரித்து வரும் இந்நாட்களில், ஒற்றுமையையும், அமைதியான வாழ்வையும் வழங்க உதவும் அரசுத்தலைவர் செர்ஜியோ மேட்டரல்லா அவர்களின் பணி இன்றியமையாதது எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தந்திச் செய்தியில் பாராட்டியுள்ளார்.

இத்தாலிய மக்கள் உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றிணைந்து வாழவும், வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், தொடர்ந்து அரசுத் தலைவர் ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்க தான் செபிப்பதாகவும்  திருத்தந்தை உறுதி கூறியுள்ளார்.

அரசுத் தேர்தலில் வாக்களித்த 983 (மொத்தம் 1009) மக்கள் பிரதிநிதிகளுள், 759 வாக்குகள் பெற்று, இரண்டாம் முறையாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் அரசுத் தலைவர் செர்ஜியோ மேட்டரல்லா. 7 ஆண்டுகால இப்பதவிக்கு 2015ல் தேர்வு செய்யப்பட்டபோது 665 வாக்குகள் பெற்றிருந்தார். அரசுத் தலைவர் தேர்தலுக்கு 505 வாக்குகளைப் பெற்றாலே போதுமானதாகும்.               

Comment