No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

இத்தாலிய வருவாய்த்துறை அதிகாரிகளுடன் திருத்தந்தை

இத்தாலியில் வரிவசூலிப்பு தொடர்புடைய வருவாய்த் துறையில் பணியாற்றும் அதிகாரிகளை, ஜனவரி 31 ஆம் தேதி திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சட்டரீதி, பாகுபாடின்மை மற்றும் வெளிப்படைத்தன்மை என்ற மூன்று கருத்துக்களில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

வரி வசூலிப்பது குறித்து திருவிவிலியத்தில் எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன என்பதை நினைவூட்டிய திருத்தந்தைவரிவசூலித்து வந்த சக்கேயு மற்றும் மத்தேயு, இயேசுவைச் சந்தித்தப் பின் வாழ்ந்த எடுத்துக்காட்டான வாழ்வையும் குறித்து விளக்கினார்.

திருவிவிவிலியம் பணத்தை தீமையானது என்று உரைக்கவில்லை, மாறாக, அதற்கு அடிமையாக வாழ்ந்து, அதுவே எல்லாம் என வாழ்வதையே கண்டிக்கிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருவாயில் வரியாக  வழங்குவது என்பது, வருவாயில் பின்தங்கியவர்களுடன் அதனைப் பகிரும் அவர்கள்மீதான பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது என எடுத்துரைத்தார்.

வரி வசூலித்தல் என்பது சட்ட ரீதியாக செயல்படுத்தப்படும்போது, அது பொதுநலனுக்கானது, சரிநிகரற்ற நிலைகளையும், இலஞ்ச ஊழல் அநீதி போன்றவைகளையும் அகற்றி சமூக உறவுகளின் சரிநிகர் தன்மைக்கு உதவுகிறது என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.

பாகுபாட்டு நிலைகளின்றி செயல்படும்போது, பொது நலனுக்காகத் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை வழங்கி மக்களுக்கு உதவுகிறோம் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிப்படைத் தன்மை என்பதன் வழியாகப் பலர் தாங்களே முன்வந்து வரிசெலுத்த உதவ முடியும் என்பதையும், அனைவருக்கும் நல உதவிகளையும் கல்வியையும் வழங்க இந்த வருவாய் வழி உதவுவதையும் எடுத்துரைத்தார்.

Comment