No icon

குடந்தை ஞானி

பேராயரைப் புனிதராக்கும் முயற்சிகளைப் புதுப்பிக்கும் எஸ்தோனியர்கள்

எஸ்தோனியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகம், மறைசாட்சியாக இறந்த அதன் முன்னாள் பேராயர் எட்வார்ட் ப்ராஃபிட்லிச் அவர்களைப் புனிதராக்கும் தற்போதைய செயல்முறைகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு வலைத்தளக் கருத்தரங்கை நடத்தியுள்ளது.

இந்த இயேசு சபை பேராயரின் தியாக மரணத்தின் 81வது ஆண்டு நினைவுநாள் நெருங்கிவரும் நிலையில், புனிதர்பட்ட செயல்பாடுகள் குறித்த செய்திகளை மேலும் புதுப்பிக்கும் விதமாக எஸ்தோனியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகம் பிப்ரவரி 15 ஆம் தேதி வலைதளக் கருத்தரங்கு ஒன்றை இணையதளத்தில் நடத்தியது.

இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டீபன் லிப்கி அவர்களால் வழிநடத்தப்பட்ட இவ்வலைத்தளக் கருத்தரங்கில், மாஸ்கோவின் பேராயர் பாவ்லோ பெஸி, இயேசு சபை அருள்பணியாளர்கள், தலத்திரு அவையின் தலைவர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

திரு அவையின் மிகச்சிறந்த மறைச்சாட்சியாக விளங்கும் பேராயர் எட்வார்ட் ப்ராஃபிட்லிச் அவர்களின் வாழ்வைக் கொண்டாடுவதற்கான அரியதொரு வாய்ப்பு இதுஎன்று கூறி இவ்வலைதளக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்த பேராயர் பாவ்லோ பெஸி அவர்கள், உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க விசுவாசிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இவர் விளங்குகின்றார் என்றார்.

ஜெர்மனைச் சேர்ந்த இயேசு சபைத் துறவியான பேராயர் எட்வார்ட் ப்ராஃபிட்லிச் அவர்கள் 1931 முதல் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் கிரோவில் உள்ள சோவியத் சிறையில் தன் உயிரைத் தியாகம் செய்த 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வரை எஸ்தோனியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றினார். தற்போது  `இறைஊழியர்’ என்று அழைக்கப்பட்டு எஸ்தோனியா மக்களுக்கும், மேலும் கத்தோலிக்கர்களுக்கும் நம்பிக்கையின் சாட்சியாக விளங்குகின்றார்.

Comment