No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

சிவித்தாவெக்கியா சிறைவாசிகளின் பாதங்களைக் கழுவிய திருத்தந்தை

உரோம் பெருநகருக்கு வடக்கேயுள்ள சிவித்தாவெக்கியா துறைமுக நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலியை நிறைவேற்றி, 12 கைதிகளின் காலடிகளைக் கழுவினார்.

ஏப்ரல் 14 ஆம் தேதி, புனித வியாழன், உள்ளூர் நேரம் மாலை நான்கு மணியளவில், சிவித்தாவெக்கியா நகரிலுள்ள சிறைக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்தாலியின் நீதித்துறை அமைச்சர் உள்ளிட்ட அச்சிறை அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சில கைதிகள் வரவேற்றனர். அதற்குப்பின்னர், அச்சிறையின் சிற்றாலயத்தில், ஆண்டவர் திருநற்கருணையை ஏற்படுத்தியதை நினைவுகூரும் ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலியை நிறைவேற்றி, 12 கைதிகளின் காலடிகளையும் கழுவினார். திருப்பலியின் இறுதியில், அச்சிறையின் இயக்குனர் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அவர், சிவித்தாவெக்கியா பழங்காலத் துறைமுகத்தைச் சித்தரிக்கும் ஒரு படம் மற்றும் கைதிகளால் பயிரிடப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றை திருத்தந்தையிடம் கொடுத்தார். பின்னர் அச்சிறையிலுள்ள ஓர் அறையில், கைதிகள், அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் என ஏறத்தாழ ஐம்பது பேரை திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்து, அவர்களைத் தனித்தனியே கைகுலுக்கி வாழ்த்தினார்.

இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், புனித வியாழன் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, காலடிகளைக் கழுவுதல் பற்றி எடுத்துரைத்தார். காலடிகளைக் கழுவுதல் என்பது, உலகின் கண்களுக்கு வழக்கத்துக்கு மாறானதாகத் தெரிகிறது. ஆனால், இயேசு தம்மைக் காட்டிக்கொடுத்தவரின் காலடிகளைக் கழுவியதை நற்செய்தியில் வாசிக்கும்போது, இயேசு எப்போதும் மன்னிப்பவர் என்பது தெளிவாகிறது என்று திருத்தந்தை கூறினார்.

கைம்மாறு கருதாமல், நாம் ஒருவர் ஒருவருக்குச் சேவை செய்யவேண்டும், ஒருவர் ஒருவரின் காலடிகளைக் கழுவவேண்டும், முடியுமானால் இதனை ஒவ்வொரு நாளும் செய்யவேண்டும் மற்றும் எல்லா மக்களுக்கும் செய்யவேண்டும் என்று கைதிகளிடம் திருத்தந்தை கூறினார்.

தம்மைக் காட்டிக்கொடுத்தவரை நண்பரே என்று இயேசு அழைத்து, அவருக்காக இறுதிவரைக் காத்திருந்தார் என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் எல்லாவற்றையும் மன்னிக்கிறவர், அவர் எப்போதும் மன்னிக்கிறவர்; ஆனால்/ நாம்தான் அவரிடம் மன்னிப்புக் கேட்பதில் சோர்வடைந்து விடுகிறோம் என்று கூறினார்.

நாம் எல்லாரும், நீண்டகாலமாக நம் இதயங்களில் ஏதாவது ஒன்றை வைத்திருப்போம், அதற்காக இயேசுவிடம் மன்னிப்புக் கேட்போம், ஆண்டவர்தாம் தீர்ப்பிடுகிறவர், அவரது தீர்ப்பு விந்தையானது, அவர் தீர்ப்பிடுகிறார் மற்றும் மன்னிக்கிறார் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்பற்றி, ஒருவர் ஒருவருக்குப் பணியாற்றவும், ஒருவர் ஒருவரை மன்னிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்இத்திருப்பலியில், பல்வேறு வயதினர் மற்றும் நாடுகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 12 கைதிகளின் காலடிகளை திருத்தந்தை பிரான்சிஸ் கழுவினார்.

Comment