No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

சகோதரர், சகோதரருக்கு எதிரானத் தாக்குதலை நிறுத்துங்கள்

ஏப்ரல் 15 ஆம் தேதி, புனித வெள்ளி, உரோம் நேரம் இரவு 9.15 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் பெருநகரின் கொலோசேயத்தில், சிலுவைப் பாதை பக்திமுயற்சியை தலைமையேற்று நிறைவேற்றினார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகள் பங்குபெற்ற இந்த சிலுவைப் பாதையின் 14 நிலைகளிலும், பல்வேறு குடும்பங்கள் பகிர்ந்துகொண்ட அவர்கள் வாழ்வின் துன்பங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தியானச்சிந்தனைகள் இடம்பெற்றன.

கிறிஸ்துவின் சிலுவை மற்றும் அவரது துன்பங்களில் மறைந்துள்ள வல்லமையை நினைவுபடுத்தி, திருத்தந்தை, இச்சிலுவைப் பாதை பக்திமுயற்சியைத் துவக்கி வைத்தார். ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு குடும்பங்கள் சிலுவையை ஏந்திச் சென்றதைக் காணமுடிந்தது.

13 வது நிலை

13 வது நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த அல்பினா என்ற பெண்ணும், உக்ரைனைச் சேர்ந்த ஐரினா என்ற பெண்ணும் இணைந்து சிலுவையைத் தூக்கிச்சென்றனர். உரோம் நகரில் செவிலியர்களாகப் பணியாற்றும் இவ்விரு பெண்களும் நண்பர்கள். இவர்கள் இணைந்து சிலுவையைத் தூக்கிச் சென்றபோது, போரினால் மக்கள் அடையும் வேதனைகள் அவர்களின் கண்களில் வெளிப்பட்டன. அவர்கள் சிலுவையைத் தூக்கிச் சென்றபோது சிறிதுநேரம் மௌனம் கடைப்பிடிக்கப்பட்டது. அனைவரும் அமைதி எனும் கடவுளின் கொடைக்காக மன்றாடினர்.

இக்குடும்பங்கள் எதிர்கொண்ட வேதனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைத் தியானித்து சிந்திக்கவேண்டும் என்பதற்காக, இப்பக்திமுயற்சியில் திருத்தந்தை தனது தியானச் சிந்தனைகளையோ மறையுரையையோ வழங்கவில்லை.

இச்சிலுவைப் பாதை பக்திமுயற்சியை ஓர் இறைவேண்டலோடு திருத்தந்தை நிறைவுசெய்தார். கடவுளிடமிருந்து தங்களை அந்நியமாக்கிக்கொள்ளும் வழிகளைத் தேடுகின்ற, எதற்கும் அடங்கமறுக்கும் நம் இதயங்களை, மன்னிப்பு மற்றும் அமைதி ஆட்சிசெய்ய கடவுளை வேண்டுவோம் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

கொலோசேயத்தில் சிலுவைப் பாதை

உரோம் நகரில் அமைந்துள்ள கொலோசேயத்தில், பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவந்த சிலுவைப் பாதை பக்திமுயற்சி, மீண்டும் 1964 ஆம் ஆண்டு, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் துவக்கப்பட்டது. அதற்குப்பின்னர், அத்திருத்தந்தையும், அவருக்குப்பின் வந்த திருத்தந்தையரும் அப்பக்திமுயற்சியை, ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று கொலோசேயத்தில் நிறைவேற்றி வந்தனர்.

ஆயினும், கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளால் இடையில் நிறுத்தப்பட்டிருந்த இப்பக்திமுயற்சி, ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப்பின் ஏப்ரல் 15 ஆம் தேதி, புனித வெள்ளியன்று மீண்டும் கொலோசேயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Comment