No icon

குடந்தை ஞானி

மாக்ரோன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு ஆயர்கள் வரவேற்பு

பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவராக இம்மானுவேல் மாக்ரோன் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 24 ஆம் தேதி, ஞாயிறன்று, மாக்ரோன் அவர்கள், அரசுத்தலைவர் தேர்தலில் 58 விழுக்காட்டு வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றிபெற்றிருப்பதை வரவேற்றுள்ள ஆயர்கள், வாக்காளர்களின் தெரிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதே, அதேநேரம், தேர்தல் முடிவுகள், அரசியலில் பிளவுகளை அதிகரித்துள்ளது கவலையளிக்கின்றது என்று கூறியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் தேர்தலின் முடிவுகள் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, பிரெஞ்சு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் எரிக் டி மௌலின்ஸ் பியூஃபோர்ட் அவர்கள், பிரான்ஸ் நாட்டு மக்கள் அறிவுத்தெளிவோடு வாக்களித்துள்ளார்கள் என சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறலாம் என்று தெரிவித்தார்.

அரசுத்தலைவராகப் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் மரைன் லு பென் அவர்கள் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை பலர் விரும்பவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்றுரைத்த பேராயர் எரிக் டி மௌலின்ஸ் பியூஃபோர்ட் அவர்கள், இத்தேர்தல் முடிவுகள், நாட்டில் புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல், செல்வந்தர்-ஏழை இவர்களிடையேயும் பிளவுகளை அதிகரிக்கக்கூடும் என்று கவலைப்பட வைக்கின்றன என்று கவலை தெரிவித்தார்.

இதற்கிடையே, அரசுத்தலைவர் மாக்ரோன் அவர்கள் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு ஆற்றிய நன்றியுரையில், தனக்கு எதிராக வாக்களித்தவர்களின் கோபம் மற்றும், கருத்துமுரண்பாட்டிற்கு பதில் அளிக்கும்விதமாக தனது பணி  அமையும் என்பதற்கு உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் மாக்ரோன் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட மரைன் லு பென் அவர்கள் 41 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் வழியாக, பிரான்சில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக அரசுத்தலைவராகும் பெருமையை இம்மானுவேல் மாக்ரோன் அவர்கள் பெற்றுள்ளார்.

Comment