No icon

குடந்தை ஞானி

மறைப்பணி கழகங்களிடம் திருத்தந்தை: துணிவோடு இருங்கள்

நற்செய்தி அறிவிப்புப்பணியை துணிச்சலோடும், படைப்பாற்றல்திறனோடும் ஆற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணி கழகங்கள் உருவாக்கப்பட்டதன் 200 ஆம் ஆண்டு நிறைவை, பிரான்ஸ் நாட்டு லியோன் நகரில் கொண்டாடும் நிகழ்வுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

பாப்பிறை மறைப்பணி கழகங்கள் உருவாக்கப்பட்ட மற்றும் அக்கழகங்களை உருவாக்கிய பவுலின் ஜெரிகாட் அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்படவிருக்கும் லியோன் நகரில், இந்த சிறப்பு ஆண்டு கொண்டாடப்பட்டு வருவதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பவுலின் அவர்கள் காட்டியுள்ள மறைப்பணிப் பாதையைத் தொடர்ந்து முழுமையாய் ஆற்றுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

இந்தக் கொண்டாட்டங்கள், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் 400 ஆம் ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக உள்ளன என்றும், இப்பேராயம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மறைப்பணித்தளங்களிலுள்ள திரு அவைக்கு ஆதரவாகப் பணியாற்றி வருகின்றது என்றும் திருத்தந்தை, அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நற்செய்தி அறிவிப்புப்பணியின் பங்கு

நற்செய்தியை அறியாத இடங்களுக்கு அதைப் பரப்பும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அவற்றை ஒருங்கிணைக்கவுமென, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும், திரு அவையில் நற்செய்தியை அறிவித்தல் என்பது எப்போதும் அடிப்படை அம்சமாக உள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். இதனாலேயே, திருப்பீட தலைமையகத்தின் புதுப்பித்தல் பணியில், திரு அவையின் மறைப்பணி மனமாற்றத்தை பேணி வளர்க்கும் வண்ணம், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம் சிறப்புப் பங்கைக் கொண்டிருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, நற்செய்தி அறிவித்தல் என்பது, மதமாற்ற நிகழ்வு அல்ல; மாறாக, அது நற்செய்திக்குச் சான்றுபகர்வதாகும் எனவும் கூறியுள்ளார்.

பவுலின் மரி ஜெரிகாட்

200 ஆண்டுகளுக்குமுன், லியோன் நகரில், 23 வயதே நிரம்பிய பவுலின் மரி ஜெரிகாட் என்ற இளம்பெண், திருஅவையின் மறைப்பணி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கென்று, ஓர் அமைப்பைத் தொடங்குவதற்குத் துணிச்சலைக் கொண்டிருந்தார் என்றுரைத்துள்ள திருத்தந்தை, அதற்குச் சில ஆண்டுகள் சென்று இவர், இறைவேண்டல் மற்றும் நன்கொடைகளைப் பகிர்தல் ஆகியவற்றுக்காக செபமாலை பக்திமுயற்சியைத் தொடங்கினார் என்று பாராட்டினார். செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த பவுலின், வறுமையில் இறந்தார் என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர் அனைவருக்கும் மறைப்பணி

திருமுழுக்குப் பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒரு மறைப்பணியைக் கொண்டிருக்கின்றனர் என்றும், திரு அவை, இயல்பிலே மறைப்பணிப் பண்பைக் கொண்டிருக்கின்றது என்பதை பவுல் மகிழ்வோடு கூறுவார் என்றும் உரைத்த திருத்தந்தை, தலத்திரு அவைகளுக்கு உதவவேண்டியது, பாப்பிறை மறைப்பணி கழகங்களின் கடமையாகும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மூன்று அடிப்படை அம்சங்கள்

பாப்பிறை மறைப்பணி கழகங்கள் உருவாக்கப்பட்டது, அக்கழகங்களை உருவாக்கிய பவுலின் ஜெரிகாட் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்படவிருக்கும் நிகழ்வு ஆகிய இரண்டும், மறைப்பணி மனமாற்றம், இறைவேண்டல், பிறரன்பு ஆகிய மூன்று அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் உரைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு பொதுநிலை கத்தோலிக்கரான பவுலின் ஜெரிகாட் அவர்கள், தனது 23வது வயதில் மறைப்பணி வாழ்வுக்கென்று தான் அழைக்கப்படுவதை உணர்ந்து, “கிறிஸ்தவ நம்பிக்கை அறிவிப்பு (Propaganda Fide)” என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பிற்கு, 1823 ஆம் ஆண்டில், திருத்தந்தை 7 ஆம் பயஸ் அவர்கள் அங்கீகாரம் அளித்தார்.

Comment