No icon

குடந்தை ஞானி

நம்பிக்கையில் நிலைத்திருக்க வயது முதிர்ந்தோர் கற்றுத்தருகின்றனர் - திருத்தந்தை பிரான்சிஸ்

வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், மே 18 ஆம் தேதி புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் புதன் பொது மறைக்கல்வியுரையில், யோபு நூல் 42 ஆம் பிரிவில் யோபுவின் இறுதி உறுதிமொழி (யோபு 42,1-6.12.16) என்ற தலைப்பில் எடுத்துரைத்தார்.

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். இப்போது நாம் வாசிக்க கேட்ட விவிலியப் பகுதி, உலகளாவிய ஞான இலக்கியமான, யோபு நூலின் இறுதி இயலாகும். இறைவார்த்தையின் ஒளியில், முதுமையின் அர்த்தம் மற்றும், மதிப்புபற்றிய புதன் மறைக்கல்வியுரையில், யோபு என்ற மிகப்பெரிய விவிலிய மனிதர் பற்றி இன்று சிந்திக்கிறோம். யோபுவின் உறுதியான கடவுள் நம்பிக்கை, மற்றும், பெருமளவில் அவர் எதிர்கொண்ட துன்பங்கள், பல நேரங்களில் தீமையின்முன் மௌனமாக இருப்பதாகத் தெரிந்த கடவுள், தம் மீட்பளிக்கும் இரக்கம், மற்றும், அன்போடு புதிரான முறையில் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இட்டுச் சென்றன. யோபு, பெருந்துன்பங்களை எதிர்கொண்டபோது, தீமை பற்றி அவரது நண்பர்களால், கொடுக்கப்பட்ட எளிமையான விளக்கங்களைப் புறக்கணித்தார். யோபு தனது கடுந்துன்பங்கள் அனைத்தையும் கடவுள்முன் வைத்தார், மற்றும், அவரிடம் போராடினார். அதேநேரம், கடவுளின் நீதியின் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை தக்க காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். அநீதியானது, மற்றும், தாங்கமுடியாதது போலத் தோன்றுகின்ற துன்பங்களைத் தாங்கிக்கொள்கின்ற நல்ல மனிதர்கள், யோபு போன்று தங்களின் நம்பிக்கையை கடவுளின் வாக்குறுதிகளில் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கும் சூழல்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இதில், வயது முதிர்ந்தோர், நம்பிக்கை மற்றும், நீண்டகால வாழ்க்கை அனுபவம் ஆகியவற்றிலிருந்து பிறக்கும் கண்ணோட்டத்தோடு, சான்று வாழ்வை வழங்கமுடியும். நம்பிக்கை நிறைந்த செப வாழ்வில் முன்மாதிரிகையாய் இருப்பதன் வழியாக, அவர்கள், சிலுவையில் அறையுண்ட இயேசுவோடு நம்மை ஒன்றிணைக்க கற்றுக்கொடுக்க இயலும். இயேசு, சிலுவையில் தம்மையே முழுமையாக இறைத்தந்தையின் கரங்களில் அர்ப்பணித்தார், இறைத்தந்தையின் எல்லையில்லா அன்பு, மரணத்தை வாழ்வாகவும், மிகப்பெரும் தீமையை, அளவில்லா நன்மையாகவும் மாற்றுகின்றது.

Comment