No icon

தேசிய திருவழிபாடு

72வது தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கு திருத்தந்தை வாழ்த்து

72வது தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கு திருத்தந்தை வாழ்த்து

மக்களின் தேவைகளுக்குச் செவிமடுத்து, அவர்களுக்கு தங்கள் பணிகளின் பன்முகத்தன்மைவழி, திருவழிபாட்டுக்குழு உதவும்போது, அப்பணிகள் வளமையடைகின்றன என இத்தாலியின் 72வது தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கு திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள செய்தியில் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 22,  திங்கள் முதல் 25 வியாழன் வரை, சலெர்னோவில் நடைபெற்ற  72வது தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கான திருத்தந்தையின் செய்தியை அனுப்பியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், “ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையில் திருப்பணிகள்” என்ற தலைப்புக்கேற்றவாறு இக்கூட்டம் நன்முறையில் செயல்படுவதாகவும், பன்முகத்தன்மை கொண்ட பணிகள் பலவற்றைச் செய்து வளமையுடன் திகழ்வதாகவும் வாழ்த்துக் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் வார்த்தைகளுக்கிணங்க, திருஅவையின் உண்மைத்தன்மையை ஆழப்படுத்தும் பணிகள், தற்போதைய வரலாற்று நிகழ்வில் முக்கியமான பங்கு, எதிர்கொள்ளும் கலையில் வல்லுனராக மாறுதல் போன்றவற்றில் இத்தாலிய திருவழிபாட்டுக் குழு சுறுசுறுப்பாக இயங்குவதாகவும் கர்தினால் பரோலின் தெரிவித்தார்.

இத்தாலிய திருவழிபாட்டு மையம், இத்தாலியில் உள்ள ஆலய மேய்ப்புப்பணிகளிலும், இறையியல், வழிபாடு போன்ற நிலைகளில் தேர்ந்துதெளிந்து பணிபுரிவதிலும்,  ஆயர் குழுக்களுக்கு உதவுவதாகச் செயல்படுவது பாராட்டுதற்குரியது என்றும் கர்தினால் பரோலின் கூறியுள்ளார்.

நாம் செய்யும் பணிகள் அனைத்தும் இயேசுவின் பணியார்வத்தால் ஈர்க்கப்பட்டதாக, இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள கர்தினால்,  திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட, " Ministeria quaedam " என்ற motu proprio அறிக்கை, மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் " Spiritus Domini ", “Antiquum Ministerium” என்ற motu proprio அறிக்கைகள் குறித்தும் விவரித்துள்ளார்.

திருவழிபாட்டுப் பணிகளில் பொதுநிலையினரின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு குறித்து வெகுவாகப் பாராட்டியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், திருப்பணிக் குருத்துவம் மற்றும் பொதுக் குருத்துவத்திற்கு இடையே குழப்பநிலை உருவாகும் அபாயமும்  தவிர்க்கப்படவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comment