No icon

கர்தினால் பரோலின்

தரமான கல்வி உருவாக்கும் சிறப்பான உலகு

இன்றைய தலைமுறையினருக்கு மரியாதை, உரையாடல், தோழமை ஆகியவற்றின் விழுமியங்களை, தரமான கல்வியின் வழியாக அறிமுகப்படுத்த எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது என்று, கல்வி குறித்த உலகளாவிய கருத்தரங்கு ஒன்றில் திருப்பீடச்செயலர், கர்தினால் பரோலின் கூறியுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவை, தொடக்கமுதல், அறிவு, கலாச்சாரம் மற்றும், அறிவியலோடு தன் நற்செய்தி அறிவிப்புப் பணியையும் ஆற்றிவந்தது என்றும், இவற்றை, தன் கணக்கற்ற பள்ளிகள், மற்றும், மேற்கத்திய உலகில் முதலில் தொடங்கிய பல்கலைகழகங்கள் வழியாக வழங்கின என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், உலகளாவிய கல்விக் கொள்கையின் பலனாக 2,20,000 பள்ளிகள், 1,365 பல்கலைக்கழகங்களை எல்லா கண்டங்களிலும் உருவாக்கி 7 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வியை அளித்து வருகின்றது, இம்மாணவர்களில் பெரும்பான்மையானோர் பிற கிறிஸ்தவர் சபைகளைச் சார்ந்தோர் மற்றும், பிற மதத்தினர் என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசிய செய்திகளையும் பகிர்ந்துகொண்டார்.

கல்வி குறித்த உலகளாவிய ஒப்பந்தம்

பெருந்தொற்று பரவலுக்கு சில மாதங்களுக்கு முன், அதாவது 2020ஆம் ஆண்டு  அக்டோபர் 15ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உறுதியான முடிவுகளின்படி செயல்படும்  தரமான கல்வியின் வழியாக, சிறந்த உலகை நாம் அடைய முடியும்  என்ற நம்பிக்கையில்கல்வி குறித்து உலகளாவிய ஒப்பந்தம்என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கை தொடங்கி வைத்ததையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் பரோலின்.

உலகையும் வரலாற்றையும் இன்னும் அதிக மனிதாபிமானத்தோடு செயல்பட வைக்க, கல்வி ஒரு மிகச்சிறந்த சக்தி என்று திருத்தந்தை கூறியதையும், பல்திறன் கலைஞர்கள் மற்றும் பன்னாட்டு பங்குதாரர்களின் உதவியால் நலிவுற்றிருக்கும் கல்வியை மீண்டும் கட்டியெழுப்பி, இன்றைய தலைமுறையினருக்கு மரியாதையுடன்கூடிய உரையாடல் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வின் மதிப்பீடுகளை, தரமான கல்வியின் வழியாக அறிமுகப்படுத்த எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது என்று உரைத்ததையும் திருப்பீடச் செயலர் எடுத்துரைத்தார்.

தொற்று நோய் பரவல், உக்ரைன்-இரஷ்யப் போர், நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்சனைகள் மோதல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நமது சமூகத்தை சரிசெய்ய, உடன்பிறந்த உணர்வுடன் மீண்டும் அவற்றைக் கட்டியெழுப்ப, ஒற்றுமையுடன் செயல்படஉலகளாவிய கல்வி ஒப்பந்தம் தேவை என்று வலியுறுத்தி தன் உரையை கர்தினால் பரோலின் நிறைவு செய்தார்.

7 வகையான செயல்திட்டங்கள்

உலகெங்கிலுமுள்ள கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை 7 வழிமுறைகளின்கீழ் செயல்பட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்துகின்றார்.

1. முறையான மற்றும் முறைசாரா கல்வியின் வழியாக ஒவ்வொரு மனிதரையும் மாண்பு மற்றும் மரியாதை கொண்டவர்களாக உருவாக்குதல்,

2. மதிப்பீடுகள் மற்றும் அறிவு, எதிர்கால நீதி, அமைதி, மரியாதையான வாழ்வு போன்றவற்றை உருவாக்கும் வகையில் சிறார் மற்றும் இளையோரின் குரலுக்குச் செவிமடுத்தல்,

3. பெண் கல்வியை ஊக்கப்படுத்துதல்,

4. கல்வியின் முதன்மை மற்றும் சிறப்பான இடமாக குடும்பங்களைப் பார்த்தல்,

5. மிகவும் பாதிக்கப்பட்ட சூழல்களில் இருப்பவர்களை திறந்த மனதுடன் ஏற்று கற்பித்தல், கற்க வைத்தல்,

6. பொருளாதாரம், அரசியல், வளர்ச்சித் திட்டங்கள், முன்னேற்றங்கள் போன்றவற்றை புரிந்துகொள்ள புதிய வழிகளைக் கண்டறிதல்,

7. பொதுவான இல்லமாகிய இவ்வுலகைப் பாதுகாத்து பராமரித்தல்,

ஒரு குழந்தை கல்வி கற்க ஒரு கிராமம் தேவை என்னும் ஆப்ரிக்க பழமொழிக்கு ஏற்ப நாம் கல்வி கற்கும்முன் அத்தகைய கிராமத்தை உருவாக்க வேண்டும். அதற்கு மைதானம் தூய்மையாக்கப்பட்டு, உடன்பிறந்த உறவால் செழிப்படைய வேண்டும், என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார் என்று கர்தினால் பரோலின் கூறினார்.

Comment