No icon

புனிதர்களை உருவாக்கிய

இயேசு சபை பணியாளர் குர்ட் கும்ப்பள் மறைவு

புனிதர்கள் நடைமுறைக்கான வத்திக்கான் திருப்பேராயத்தில் நீண்டகாலம் பணியாற்றி சேசு சபை பணியாளர் குர்ட் பீட்டர் கும்ப்பள் தம் 99 ஆம் வயதில் மறைந்தார். ஜெர்மனியின் அரசக் குடும்பத்தில் பிறந்த இவர், சேசு சபையில் பணியாளராகி, ஓய்வுப்பெற்ற பணியாளராக உரோமையில் உள்ள சான்டோ ஸ்பிரிட்டோ இல்லத்தில் தங்கியிருந்த இவர் முதுமையின் காரணமாக மறைந்தார். இவர் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை புனிதர்கள் நடைமுறைக்கான வத்திக்கான் திருப்பேராயத்தில் பணியாற்றி சேவை செய்தார். ஏறக்குறைய 150 க்கும் மேற்பட்ட புனிதர்களின் திருப்பட்டத்திற்கு உரிய நடைமுறை விசாரணைகளை மேற்கொண்டு சிறப்பான விதத்தில் பணியாற்றி அவர்கள் தகுதியானவர்களா (அல்லது தகுதியற்றவர்களா) என்பதைத் தீர்மானித்து திரு அவைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் புனித பாத்திமா அன்னை காட்சியில் இடம்பெற்றவர்கள் ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ மார்ட்டோ, இங்கிலாந்துவேல்ஸ் மாகாணத்தின் நாற்பது மறைச்சாட்சிகள், அமெரிக்க புனிதர்களான புனித காத்ரின் டிரெக்ஸ்ஸல், புனித பிலிப்பின்னே டூஷ்ஷன்னே, அமெரிக்காவின் முதல் பூர்வீக புனிதரான புனித கத்தேரி தெக்காவித்தா ஆகியோர் ஆவர். ஒரு சிலர் புனிதர்களாக அறிவிக்கப்படாததற்கும் இவர்தம் கடுமையான விதிமுறைகள் நிறைந்த அணுகுமுறையே காரணம் என்பதும் கண்கூடு. உதாரணத்திற்கு இரண்டாம் உலகப்போரின்போது  திருத்தந்தையாக இருந்த வணக்கத்திற்குரிய பனிரெண்டாம் பத்திநாதர். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்போது ஆலோசகராக தந்தை கும்ப்பள் அவர்களும் அவரது நண்பர் மொலினாரி அவர்களும் திருத்தந்தை ஆறாம் பவுலுக்கு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. வத்திக்கானில் உள்ள ஜெர்மானியர்களுக்கான கல்லறையில் இவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Comment