No icon

திருத்தந்தையின் அறிவுரை

சமூகத்தொடர்புக்கு பொறுமை, தொலைநோக்குப் பார்வை அவசியம்

தொடர்ந்து மாற்றம் அடைந்துவருகின்ற மற்றும் வேகமாக வளர்ந்து வருகின்ற சமூகத்தொடர்பு நடவடிக்கைக்கு, பொறுமையும் திட்டமிடுதலும், தொலைநோக்குப் பார்வைத் திறனும் தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 31 ஆம் தேதி திங்களன்று சமூகத்தொடர்பு கழகத்தினரிடம் கூறியுள்ளார்.

இத்தாலியில் சமூகத்தொடர்புக் கழகங்களை ஒருங்கிணைக்கும் COPERCOM என்ற தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் நூறு உறுப்பினர்களை, அக்டோபர் 31 ஆம் தேதி, திங்களன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அவ்வமைப்பு, காலத்திற்கேற்ற மற்றும் பயனுள்ள முறையில் பணியாற்றத் தேவையான நான்கு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு, மாற்றம், சந்திப்பு, ஒருங்கிணைந்து பயணம் என்ற நான்கு அம்சங்கள் குறித்து விளக்கிய திருத்தந்தை, வாழ்வின் பல்வேறு எதார்த்தங்களைக் கொண்டுவரும் ஒரு குறிப்பிட்ட சிறப்பான இலக்கை எட்டுவதற்கு ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், இது எளிதான பணி அல்ல; ஆயினும், இதற்கு பொறுமை, தொலைநோக்குத் திறன், மற்றும் ஒற்றுமை தேவைப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகாலப் பயணப் பாதை, ஒருங்கிணைந்து ஆற்றும் பணியை மேம்படுத்தவேண்டும் என்ற நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கும் என திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் கூறியுள்ளார்.

மாற்றம்

நாம் வாழ்ந்துவரும் இக்காலம், மாறிவரும் காலம் மட்டுமல்ல, சகாப்தத்தின் மாற்றமாக உள்ளது என்றும், இக்காலம் முன்வைக்கும் சவால்கள் மற்றும், வாய்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மாற்றம்கொணர்வதில் வல்லுநர்களாகிய இவர்கள், அதில் கவனமாக இருக்குமாறும் பரிந்துரைத்துள்ளார்.

சந்திப்பு, செவிமடுத்தல், பேசுதல்

ஒரு நல்ல சமூகத்தொடர்பாளருக்கு சந்திப்பு, செவிமடுத்தல், பேசுதல் ஆகியவை தேவைப்படுகின்றன என்றும், சந்திப்பு என்பது, முற்சார்பு எண்ணமின்றி ஒருவர் தன் இதயத்தைத் திறப்பதாகும் என்றும், சந்திப்புக்கு, முன்நிபந்தனையாக இருப்பது அறிவு என்றும், சந்திப்பு இன்றி

சமூகத்தொடர்பு கிடையாது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

திரு அவையின் ஒருங்கிணைந்த பயணம்

இவ்வமைப்புக்குத் தேவைப்படும் நான்காவது அம்சம், திரு அவையின் ஒருங்கிணைந்த பயணம் என்று கூறியத் திருத்தந்தை, ஒன்றுசேர்ந்து பயணித்தல் என்பது, திரு அவையின் வாழ்வை முழுமையாக வாழ்தல் ஆகும் என்று எடுத்துரைத்துள்ளார்.

மனிதரின் சோர்வுகள் மற்றும், நம்பிக்கைக்கு எதிரான கருத்தியல்கள் நிலவும் இடங்களில் பணியாற்றும் இக்கழகங்களின் ஒவ்வோர் உறுப்பினரையும், பத்திரிகையாளர் மற்றும்,

சமூகத்தொடர்பாளர்களுக்குப் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களிடம் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, டிஜிட்டல் சமூகத்தொடர்பு உலகில் படைப்பாற்றல் மற்றும் நுண்மதி எவ்வளவு முக்கியம் என்பதை, அருளாளர் கார்லோ அகுடிஸ் நமக்குக் காட்டுகிறார் எனக் கூறி தன் உரையை நிறைவுசெய்தார்.

Comment