No icon

பாப்பல் அறக்கட்டளை

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு உதவும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்கள்

தூய பேதுருவுக்கு இயேசுவால் வழங்கப்பட்ட பொறுப்புணர்வுகள் அவரின் வழித்தோன்றலாக வந்த திருத்தந்தையர்களால் பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்களின் உதவியுடன் நிறைவேற்றப்படுகின்றன என கத்தோலிக்க உதவி நிறுவனங்களுக்குத் தன் பாராட்டுக்களை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து இயங்கும் பாப்பல் அறக்கட்டளை என்ற கத்தோலிக்க பிறரன்பு உதவி நிறுவனத்தின் அங்கத்தினர்களை ஏப்ரல் 21, வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புணர்வுகளில், ஒன்றிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை என்ற இருகூறுகளில் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் உதவி வருவது குறித்து எடுத்துரைத்தார்.

பல்வேறு கொள்கைகளாலும் இயக்கங்களாலும் வழிநடத்தப்பட்டு, ஒருவருக்கொருவர் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தாலும், பிரிவினைகளுடன் வாழும் கிறிஸ்தவர்களிடையே எவ்வித பாகுபாடும் பார்க்காமல் பிறரன்பு உதவிகளை அனைவருக்கும் ஆற்றிவரும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்கள் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு உதவுகின்றன என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

உண்மையான விசுவாசத்துடனும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பேரார்வத்துடனும், எவ்வித முன்சார்பு எண்ணங்களும் பாகுபாட்டு உணர்வுகளும் இன்றி பல்வேறு உதவித் திட்டங்களுடன் அனைவருக்கும் உதவுவது, ஒன்றிப்புக்கு உதவுகின்றது என்பதை திருத்தந்தை வலியுறுத்தினார்.

இரண்டாவது கூறாகிய வெளிப்படைத்தன்மை பற்றி எடுத்துரைக்கையில், கடந்த சில ஆண்டுகளாக திருஅவை தன் பல்வேறு அவைகள் மற்றும் அமைப்புக்கள் வழியாக ஆற்றிவரும் சேவைகள் குறித்த வெளிப்படைத்தன்மையை பகிர அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றது என்றார்.

அதிலும் குறிப்பாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களின் தாராளமனதாலும், நல்லெண்ணத்தாலும் வழங்கப்படும் உதவிகளுடன் நிறைவேற்றப்படும் பிறரன்புப் பணிகளின் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, அனைத்து உதவித் திட்டங்களும் அதற்கு உரியவர்களுக்கே சென்றடையவேண்டும் என்பதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாப்பல் அறக்கட்டளையை பாராட்டினார்.

திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளில் தங்கள் பங்கை ஆற்றிவரும் இந்த பிறரன்பு அமைப்புக்கு தன் நன்றியையும் ஆசீரையும் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

Comment