No icon

லாஸ்லோ பாத்தியானி-ஸ்ட்ராட்மேன் நிறுவனம்

ஹங்கேரியில் இரண்டாம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ்

ஏப்ரல் 29, சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 10.30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தனியாக திருப்பலி நிறைவேற்றினார். அதன்பின் திருப்பீடத்தூதரகத்திலிருந்து உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 3.5 கி.மீ. காரில் பயணம் செய்து லாஸ்லோ பாத்தியானி-ஸ்ட்ராட்மேன் என்னும் கத்தோலிக்க நிறுவனத்தை வந்தடைந்தார்.

கண்பார்வையற்றவர்களுக்கான கத்தோலிக்க நிறுவனமான அருளாளர் லாஸ்லோ பாத்தியானி-ஸ்ட்ராட்மேன் நிறுவனம், தலைநகரின் 12வது மாவட்டத்தில் உள்ளது. பல அடுக்கு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில், பார்வையற்ற சிறார் மற்றும் சிறப்புக் கல்வித் தேவைப்படும் சிறாருக்கான ஆரம்பப்பள்ளிக்கூடம் இயங்கி வருகின்றது. மனநல நிபுணர்களின் துணையுடன், மிகவும் நவீன கல்விக் கருவிகள், பிசியோதரபி உடல்நலப்பயிற்சி கருவிகள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் ஆகியவை உள்ளன. பார்வையற்ற சிறாருக்கான இவ்வில்லம், ஹங்கேரியின் அன்னை தெரசா", என்று 1980 ஆம் ஆண்டுகளில் அழைக்கப்பட்ட அருள்சகோதரி அன்னா ஃபெஹர் அவர்களால் துவங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் இறந்த அவர் சிறந்த கல்வியாளரும், புனித எலிசபெத் சகோதரிகள் துறவுசபையினைச் சேர்ந்த ஹங்கேரியின் கடைசி அருள்சகோதரியுமாவார்.

பார்வையற்ற சிறாருக்கு உதவும் கத்தோலிக்க நிறுவனத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நிறுவனத்தின் தலைவர் வரவேற்றார். அருள் நிறைந்த மரியா பாடலுடன் ஆரம்பமான சிறிய வழிபாட்டு நிகழ்வில் பார்வையற்ற சிறுமி ஒருவர் புல்லாங்குழல் வாசிக்க அதனைத் தொடர்ந்து இரக்கம் மற்றும் நன்றிக்கான பாடல்கள் பாடப்பட்டன. அவ்வில்லத்திற்கு துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையின் திரு உருவத்தை பரிசாக அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவக்ரள், நிகழ்வின் இறுதியில் அவ்வில்லத்தில் பணியாற்றும் பணியாளார்களை சந்தித்து வாழ்த்தி விடைபெற்றார்.  

Comment