No icon

இறைவேண்டலின் பரிமாணங்கள் – 11

மனத்தால் இறைவேண்டல்!

இறைவனோடு உரையாடுவது, உறவாடுவதே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அடிப்படையில், நமது பெரும்பான்மை இறைவேண்டல்கள் சொற்களைப் பயன்படுத்தியே அமைகின்றன. இருப்பினும், சொற்களைக் கடந்து மனம், சிந்தனை என்னும் தளத்திலும் நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதைத் திருவிவிலியமும், திரு அவையின் மரபுகளும் நமக்குக் கற்றுத் தருகின்றன.

உண்மையில், மனித ஆளுமையின் தளங்களான உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மன வலிமை ஆகிய அனைத்துத் தளங்களும் இறைவேண்டலில் இணையும்போதுதான், அது முழுமையானதாக மாறுகிறது. காரணம், இத்தளங்கள் அனைத்துமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒன்று மற்றொன்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடவுள் மனிதரைப் படைத்தபோதே, “விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும், சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்என்கிறது சீராக்கின் ஞானநூல் (17:6).

எனவே, சொற்களைப் பயன்படுத்தி வேண்டுதல் செய்யும் நாம், மனத்தாலும் இறைவேண்டல் செய்ய வேண்டும். காரணம், சொற்கள் எங்கிருந்து பிறக்கின்றன? உள்ளத்தின் சிந்தனைகளிலிருந்து தானே? “என் உள்ளத்தின் நேர்மையை என் சொற்கள் வெளிப்படுத்தும்” (யோபு 33:3) என்றார் யோபு. “உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்” (மத் 12:34) என்றார் ஆண்டவர் இயேசு.

ஆகவே, சிந்தனையே முதன்மையானது, சொற்களுக்கும் முற்பட்டது. எனவே, சொற்களைப் பயன்படுத்தி இறைவேண்டல் செய்வதற்கு முன்னரே நமது மனமும், சிந்தனைகளும் இறைவனை நாடவேண்டும். உள்ளத்தில் இறைவன் உறைய வேண்டும். அதுவும் இறைவேண்டலே. “உங்கள் இதயத்தாலும், உங்கள் உள்ளத்தாலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நாடுங்கள்” (1குறி 22:19) என்பது இறைவார்த்தையின் அழைப்பு.

மனத்தால் இறைவேண்டல் செய்வதற்குப் பல எடுத்துக்காட்டுகளைத் திருவிவிலியத்தில் காண்கிறோம். “நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்” (திபா 63:6) என்ற தாவீதரசரின் சொற்கள் மனத்தின் இறைவேண்டலுக்கு மிகச் சிறந்த சான்று.

அதே திருப்பாடல்கள் நூலில்உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்; உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன்” (திபா 77:12) என்பது ஆழமான இறைவேண்டலுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.

சில நேரங்களில் நமது சொற்கள் ஆண்டவரைப் போற்றுகின்றன. ஆனால், நம் மனமும், சிந்தனைகளும் வேறெங்கோ சென்று விடும் கவனச் சிதறல் அனுபவங்களை நாம் அனைவரும் சந்தித்திருக்கின்றோம். கவனச்சிதறல் மட்டுமல்ல, வாழ்வின் முரண்பாடாகவும், பிளவுபட்ட இறைப்பற்றாகவும் நம் வேண்டுதல்கள் மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

இத்தகைய முரண்பாடான இறைவேண்டலைப் பழைய ஏற்பாட்டிலேயே நாம் பார்த்து வியக்கிறோம். “வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கிறது; அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே” (எசா 29:13) என்னும் எசாயா இறைவாக்கினரின் இறைவாக்கு நம்மை எச்சரிக்கிறது.

வியப்புக்குரிய விதத்தில் இறைவாக்கினர் எரேமியாவும் இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டினார். “அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றீர்; அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலைவில் உள்ளீர்” (எரே 12:2) என்பது அவரது வாக்கு.

இறைவேண்டலைப் பற்றி விரிவாகப் போதித்த இயேசுவும், எசாயாவின் இறைவாக்கை மேற்கோள்காட்டி, இந்த முரண்பாடான இறைவேண்டலைவெளிவேடம்’ (மாற் 7:6) என்கிறார்.

மேலும், நாம் இறைவனை நோக்கி மன்றாடிக்கொண்டிருக்கும்போதே நமது உள்ளம் பணத்தை, தொலைக்காட்சியை, உணவை, உலக இன்பங்களை அசைபோடும் அனுபவத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். எனவேதான், “உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (லூக் 12:34) என்ற உளவியல் போதனை வழியாக நமது செல்வம் இவை அல்ல; மாறாக, கடவுளே என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கிறார் இயேசு.

எனவே, சொற்களை மட்டுமே செபம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. சொற்களும், மனமும் இணைந்து செல்ல வேண்டும்அது மட்டுமல்ல, சில நேரங்களில் வார்த்தைகளின் தேவை குறைந்து விடுகிறது. அப்போது நாம் சொற்களைத் தவிர்த்து, மனத்தால் இறையோடு ஒன்றிக்க வேண்டும்.

கொரிந்து நகரக் கிறிஸ்தவரின் இறைவழிபாடு பற்றி எழுதிய பவுலடியார், இறைவேண்டல் நேரங்களில்விளக்கம் கூறுபவர் இல்லையெனில் அவர்கள் திருச்சபையில் அமைதி காக்கட்டும்; தங்கள் உள்ளத்தில் கடவுளோடு பேசட்டும்” (1கொரி 14:28) என்று எழுதுகிறார்.

எனவே, நமது தனிவேண்டல், குடும்ப வேண்டல், திரு அவை வழிபாடுகளில் சொல்லால் மட்டுமல்ல; மனத்தாலும் இறைவேண்டல் செய்வோம். சொற்களுக்கும், சிந்தனைக்கும் தூரம் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். கவனச் சிதறல், முரண்பாடு, வெளிவேடம் ஆகியவற்றைத் தவிர்த்து, சொல், மனம், உடல், உணர்வுகளோடு ஒன்றித்து இறைவேண்டல் செய்வோம்.

உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்” (யோவா 4:23) என்னும் இயேசுவின் வாக்கிற்கேற்ப, இறைவனை நம் உள்ளத்தில் வழிபடுவோமாக.

(தொடரும்)

Comment