No icon

கான்பூர் நகர்

பள்ளியில் காலை வழிபாட்டின் மூலம் மதமாற்றமா?

வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மேலாளர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். செய்தி ஊடகத் தகவல்களின்படி, சில இந்து மாணவர்களின் பெற்றோர்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி, ஃப்ளோரட்ஸ் சர்வதேச பள்ளியில், காலை வழிபாட்டின் போது இஸ்லாமிய புனிதநூலிலிருந்து உரைகள் வாசிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

அலகாபாத்தின் மறைமாவட்ட பொறுப்பாளர், அருள்தந்தை லூயிஸ் மஸ்கரேனஸ், "இதுபோன்ற புகார்கள் எழுவது இதுவே முதல்முறை. இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாக அப்பெற்றோர்கள் புகார் அளித்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த புகாரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது. மாநிலம் முழுவதும் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மாநில அரசின் வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றி வருகின்றன" என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கான்பூர் உதவி காவல்துறை ஆய்வாளர் சிசாமாவு நிஷாங்க் சர்மா,"காலை வழிபாட்டின் போது இஸ்லாமிய மத நூல்கள் வாசிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து பள்ளி மேலாளர் சுமித் மகிஜா மீது சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் 2021 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295- ஆகியவற்றின் கீழ் மத உணர்வுகளை புண்படுத்தியதாக மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதமாற்றத்தின் விதைகள் காலை வழிபாட்டின் மூலம் விதைக்கப்படுவதாக மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்," என்று கூறினார்.

2003 ஆம் ஆண்டு பள்ளி திறக்கப்பட்டதிலிருந்து இந்து, இஸ்லாம், சீக்கியம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய நான்கு மதங்களைச் சேர்ந்த மத நூல்களிலிருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டுவருவதாக முதல்வர் அங்கித் யாதவ் கூறினார்.

இதுகுறித்து வாரணாசி நகரின் நல்லிணக்கம் மற்றும் அமைதி மையத்தின் தலைவர் முகமது ஆரிஃப், "மாநிலத்தில் இந்துத்துவா ஆதரவு பாரதிய ஜனதா கட்சி நடத்தி வருகிறது. இதுவரை இதுபோன்ற பிரச்னையை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், மதமாற்ற மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, மதமாற்றம் தொடர்பான வழக்குகள் தலைப்புச் செய்திகளாக மாறி வருகின்றன. மதமாற்றம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இது மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தவும் முயற்சிக்கும் சக்திகளாக இருக்கலாம் " என்று கூறினார்.

Comment