சமூகக் குரல்கள்
- Author ஸ்ரீநிதி --
- Thursday, 24 Oct, 2024
“உலகச் சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஆண்டுதோறும் சுமார் 1.70 கோடி பேர் மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய் உள்ளிட்ட இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, இளம் வயதினருக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்குச் சமம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ஆம் தேதி ‘உலக இதய தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம், புகைபிடித்தல் ஆகியவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள். இதய நோய் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துணை சுகாதார நிலையம், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ‘இதயம் காப்போம் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.”
- திரு. டி.எஸ். செல்வ விநாயகம், தமிழ்நாடு பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர்
“மாணவர்களின் கல்வி சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து கற்றல் என்பது சட்டத்துறையில் மிகவும் அவசியம். சட்ட மேதை அம்பேத்கர் தனது வாழ்க்கையைச் சமூகநீதி, சமத்துவத்துக்காக அர்ப்பணித்தார். குறிப்பாக, சட்ட உதவியை நாட இயலாதவர்களுக்கு நீதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். சட்டம் படித்த வழக்கறிஞர்கள் அதைப் பின்பற்றி, மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, சமூகப் பிரச்சினைகள், மனித உரிமை மீறல்களைக் காத்தல், பாலின வேறுபாடுகளைக் களைதல் என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.”
- திரு. கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி
“தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு. இந்தப் பாரம்பரியத்தைக் காப்பதில் என்னுடைய பங்கும் இருக்கும்.”
- திரு. கே.ஆர். ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
“இந்திய மக்கள் தொகையில் 24 சதவிகிதம் பேர் 14 வயதுக்கு உள்பட்டவர்களாகவும், 50 சதவிகிதம் 25 வயதுக்கு உள்பட்டவர்களாகவும் உள்ளனர். இவர்களின் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது. தன்னம்பிக்கை மற்றும் முற்போக்குச் சிந்தனை உள்ள இளைஞர்களால் மட்டுமே முற்போக்குச் சிந்தனைகொண்ட நாட்டை உருவாக்க முடியும். காலத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த கட்டடம் மற்றும் தொழில்நுட்ப வசதியால் மட்டுமே சிறந்த மாணவர்களை ஒரு பள்ளியால் உருவாக்க முடியாது. திறன்மிக்க ஆசிரியர்களால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.”
- திரு. ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர்
Comment